வெளிச்சத்தின் வேர்கள்

குழம்பிய குட்டையாய்
குழப்பத்தில் மனமிருக்க
குறுமரமொன்றில்
குதித்துவந்தமர்ந்தது
குறும்பறவையொன்று...!
இதமான காற்றின் கீதம்
இலைகளைத் தாலாட்ட
இமைப்பொழுதில் இதயம்திறந்து
இனிய கீதமிசைத்தபடி
இறகுக்குள் சிறுகுஞ்சை ஈர்க்க
தென்றலின் தழுவலில்
தெம்மாங்கு கீதத்தில்
குழப்பத்தின் வேர்கள் கரைந்து
குதறிய நெஞ்சு மெல்ல
கும்மாளமிட்டது முதல்முறை...
இருள்சூழும் நேரத்தில்
இருளான நெஞ்சை கிழித்தபடி
வெளிச்சத்தின் வேர்கள்
வெற்றிடமின்றி வந்தமர
வெள்ளைமனது விழித்தது
தன்னுள்...?
----------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்