நீர் வீழ்ச்சி

கரு மேகத்தின் கண்களிலிருந்து

விழுந்த வெள்ளி நீர்த் திவலைகள்

ஒன்றையொன்று அணைத்துக் கொண்டு

ஒற்றுமையோடு , மனித ஜாதி

நாங்கள் அல்ல என

சிறு சிறு அருவிகளாக பயணம் செய்தன.



ஒரு கட்டுப்பாட்டோடு

அனைத்தும் ஓன்றுசேர்ந்து

மேலிருந்து கீழ்செல்லும் பயணத்தில்

கையேந்தி நின்ற

சிறு சிறு பள்ளங்களை நிரப்பிவிட்டன.



வெள்ளை நிறங்கொண்ட

சிறு அருவிகளின் மீது பொறாமைப்பட்ட

கரும் பாறைகள்

வழிக்கேட்ட அவைகளை தள்ளிவிட

அருவிகள் நுரைகளாய் சிரித்தன.



இடையூறு செய்த பாறைகளை

ஏன் என்று கேட்காமல்

தன் பாதையை மாற்றி

விரிசல்களின் வழியாக ஒளிந்து

தன் பயணத்தை தொடர்ந்தன.



பாறைகளின் மீது மோதியதால்

ஏற்பட்ட காயத்திற்கு

மூலிகைகளை பூசிக் கொண்டு.

சின்ன சின்ன முனகல்களோடு

சீறிப் பாய்ந்தன.



அருவியுடன் தோழமை கொண்ட

மரம், செடி, கொடிகளெல்லாம்

தேனடை , பழங்கள் கொடுத்து

தாகம் தீர்த்த நன்றியை மறவாமல்

கையசைத்து வழியனுப்பி வைத்தன.



ஓடி வந்த அருவிக்கு

பாதை முடிவடைந்தது

இதோ ஒரு பெரிய பள்ளத்தில்

வீழ்ந்து தன் உயிரை இழக்கப் போகிறது

புதிய ஜென்மத்தை எடுக்கப் போகிறது

நீர்வீழ்ச்சியாய்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (20-Jul-15, 11:33 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 129

மேலே