மண்புழுக்கள் -கார்த்திகா

எங்கள் வீட்டுத் தொழுவத்தில்
அவர்கள் பசு வளர்த்தார்கள்
அன்றொரு நாள்

வயலும் வாழ்வும்
பின்னலிட சேறு கொண்டு
மண் காத்தனர்

வீட்டு முற்றத்தை
பசுஞ் சாணத்தால்
மெழுகி கோலமிட்டனர்

துணிகளை வெளுத்தே
வெம்பிப் போன
கரங்களிரண்டால்
கை கூப்பினர்

பாழாய்ப் போன கண்களுக்கு
பகலிரவு தெரியாத போதிலும்
இனங்கண்டு வணங்கினர்

தலைமுறைகள் வளர்ந்து
பறவைகள் கூடு பிரிந்து
சிறகுகள் சருகாகியபோது

கூட்டிப் பெருக்க
வாசலில் மிதியடிகள் அடுக்கி
தவம் கலையாது இருந்தனர்
அவர்கள் ..

இதற்கு மேலும் எழுதி எழுதி
அவர்களை கௌரவ அடிமையாக்க
விரும்பவில்லை நான்
ஓர் இனத்தின்
இரத்த சரித்திரத்தில்!!

எழுதியவர் : கார்த்திகா AK (21-Jul-15, 9:56 pm)
பார்வை : 362

மேலே