என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 11
சிந்திக்க வைப்பதும் , சிந்தனையைத் தூண்டுவதும் வாழ்வில் நாம் காணும் சில நிகழ்வுகளாலும் , பெற்றிடும் சில அனுபவங்களும் ஒரு காரணம் ...
அதுவும் இளமைப் பருவத்தில் நடைபெறுகின்ற சில நிகழ்ச்சிகளும் , சில காட்சிகளும் இதயத்தில் என்றும் ஆழ்ந்து படிந்திருக்கும் . அவையே நமக்கு சில அறிவூட்டும் , பல தெளிவாக்கும் . அப்படி நான் பெற்றதுதான் பல என் வாழ்விலும் . மறுக்கவில்லை. என் தாத்தா பாட்டி , அப்பா அம்மா அவர்களின் மூலமாகவும் மற்றும் அன்று வாழ்ந்த எங்களின் கூட்டுக் குடும்பம் , பழகிய பலவித மனிதர்கள் , இவை அனைத்துமே எனக்கு வாழ்க்கையில் பாடமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை .
உடல்நிலை , சூழ்நிலை எப்படி இருந்தாலும் , காலையில் சுறுசுறுப்புடன் அன்றாட பணிகளை கவனிக்க , அலுவலகம் சென்றிட , சரியான நேரத்தில் , கிளம்பிடும் அந்த வேகம் என்னால் மறக்கவே முடியாது. அவரின் செயல்களை வைத்து நாங்கள் நேரத்தை சொல்வோம் என்றால் பாருங்கள் . அவருக்கும் மிக தீவிர ஆஸ்த்மா உண்டு ...ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் உரிய செயல்களை செய்திடும் அந்தப் பாங்கு எங்களுக்கு ஒரு பாடமே. ஆனாலும் அந்த வேகம் இன்று எனக்கு இல்லை என்பதும் உண்மை. இறுதிவரை அவர் அதனை கடைபிடித்தது ஓர் அதிசயம். கடைசி ஒருமாதம்தான் அவரால் சரிவர இயங்க முடியவில்லை ....காரணம் உடல்நிலையும் வயோதிகமும் . அதுவரை தன் அலுவலகப் பணியை கவனித்தார் என்பது ஊரறிந்த உண்மை.
ஒருமுறை அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு , மருத்துவமனையில் இருந்தார். அங்கிருந்தபடியே அலுவல்களை கவனித்தார். அவரைப் பார்க்க நண்பர்கள் , ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் அடிக்கடி பார்க்க வருவதை விரும்பாமல் ....ஒருநாள் காலையில் அங்கிருந்தபடியே நேராக அலுவலகம் சென்று விட்டார். சிகிச்சை எல்லாம் வேண்டாம் என்று கையில் பிளாஸ்திரியுடனே சென்று அவர் இருக்கையில் அமர்ந்து அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 86. மருத்துவர்களே அவரின் கடமை உணர்ச்சியையும் , மன உறுதியையும் கண்டு வியந்தனர். பாராட்டினார்கள். தன்னுடைய 88 வயதுவரை அலுவலகம் சென்று பணி புரிந்தவர். அவர் கிட்டத்தட்ட எட்டு நிதி நிறுவனத்தில் இணைந்து இருந்தார்....செயல் இயக்குனராக ....காரியதரிசியாக ( Director cum Secreatry in the Nidhi / Benefit Funds ) . அவரின் காலத்திலேயே 4 நிறுவனங்கள் நூற்றாண்டு விழாவும் கண்டது ....விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . அவர் முதலில் பணியில் சேர்ந்தது ...அக்கால Chartered Bank ல் . சாதாரண கடைநிலை ஊழியராக . பின்பு சிறிது காலத்திலேயே , சிலரின் வற்புறுத்தலின் பேரில் , நிதி நிறுவனத்தில் குமாஸ்தாவாக ( CLERK ) இணைந்தார். அதில் இருந்து படிப்படியாக உயர்ந்து அனைவரின் நன்மதிப்பைப் பெற்று , இயக்குனராக ( DIRECTOR ) பதவி உயர்ந்தார். மேலும் பல நிதி நிறுவனங்களிலும் இயக்குனராகவும் ஆனார் . நிறுவனம் வளர்வதற்காக , இரண்டு ஆண்டு காலம் சம்பளம் ஏதும் பெறாமலே உழைத்தார். அவர் முதலில் அங்கு வாங்கிய ஒருமாத சம்பளம் 13 ரூபாய் . அன்று அவர் கையெழுத்துப் போட்டு வாங்கிய ரிஜிஸ்டரை நான் பார்த்தேன் அந்த அலுவலகத்தில் . காரணம் நானும் அங்கு 5 வருடம் வேலை செய்தேன் . எத்தனையோ குடும்பங்களுக்கு பலவித உதவி செய்தார். கடன் கேட்டு வருவபர்கள் , அவர்களின் நிலையை அறிந்து , குறிப்பறிந்து , காலத்தை உணர்ந்து , உடனடியாக உதவிகள் செய்து ....பணம் நேரிடையாக அவர்கள் கையில் சேர்வதற்கு வழிவகைகள் செய்வார். சில நேரங்களில் தாமதம் ஏற்பட்டால் , தன் சொந்த பணத்தைக் கொடுத்து உதவிடுவார் . நானே கண்டது ....அதுமட்டுமன்றி பல ஏழைகளின் திருமணத்திற்கு , தன் செலவிலேயே , திருமாங்கல்யம் வாங்கிக் கொடுத்து , முதல் நபராக திருமணத்திற்கு செல்வார். அவர்கள் விருப்பப்படி , அவர் கையாலேயே தாலியை எடுத்து மணமகன் கையில் அளித்து நடத்தியும் வைப்பார். நான் அறிந்த அளவில் சுமார் 100- 150 திருமணங்கள் நடத்தி வைத்துள்ளார் இது போன்று., குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு , பிள்ளைகள் படிக்க fees கட்டுவார் பள்ளிகளில். அன்று அப்படி படித்தவர்கள் பிற்காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்தாலும் மறக்காமல் அவரை வந்து முக்கியமான நாட்களில் வணங்கி சென்றதை பார்த்திருக்கிறேன். இன்றும் சிலர் அதனை சொல்லி மகிழ்கின்றனர். அவரால் வேலை கிடைத்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் , இன்னும் அவர் வீட்டில் , தாத்தாவின் படத்தை தன் வரவேற்பறையில் வைத்து வணங்கி வருவதை நேரில் காண்கிறேன் .
தாத்தாவின் 81 வது பிறந்தநாளை , முத்து விழா என்று 1982ல் சென்னையில், சனவரி 25ம் நாள் , புரசைவாக்கத்தில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் வெகு விமரிசையாக நடத்தது .
தலைமை வகித்தவர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் ....முன்னிலை வகித்தவர்கள் முன்னாள் முதல்வர் பெரியவர் M பக்தவத்சலம் அவர்களும் , பேராசிரியர் திரு K அன்பழகன் அவர்களும் ஆவார்கள். அவரின் வாழ்க்கை வரலாறை ஒரு புத்தகமாக்கி , திரு C M ஜனார்த்தனம் என்பவர் எழுதியது , அன்று கலைஞர் அவர்கள் வெளியிட , அன்றைய சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த திரு P R கோகுலகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அவர் பின்னர் குஜராத் உயரநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணி புரிந்து ஓய்வுப் பெற்றார். அவர் இன்று அடையாறு பகுதியில் வசிக்கிறார் . அன்று அனைத்துக் கட்சியை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் . அன்றைய கல்வி அமைச்சராக இருந்த நாவலர் திரு நெடுஞ்செழியன் அவர்கள் கலந்து கொள்வதாக கூறிவிட்டு .. ஆனால் அன்றைய அரசியல் சூழ்நிலையால் வாழ்த்துச் செய்தி மட்டும் அனுப்பிவிட்டார். அதையும் கலைஞர் அவர்கள் தன் உரையில் மறக்காமல் குறிப்பிட்டார் . உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு T . ராமபிரசாத ராவ் , திரு P வேணுகோபால் , Dr A கிருஷ்ணசாமி EX MP ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் . மேலும் முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் திரு S V சிட்டிபாபு , திரு N D சுந்தரவடிவேலு அவர்களும் , தொழில் அதிபர்கள் திரு J H தாராபூர் உட்பட பலரும் , முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திருமதி T N அனந்தநாயகி MLA அவர்களும் , திரு இராம அரங்கண்ணல் அவர்களும் , முன்னாள் மத்திய அமைச்சர் திரு N V N சோமு அவர்களும் , அன்றைய மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அ கலாநிதி , MD அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள் . சுமார் 3000 பேர் கலந்து கொண்டு , மதிய விருந்தும் சாப்பிட்டு மழ்கிவோடு வாழ்த்திச் சென்ற மிக சிறப்பான நிகழ்ச்சி அது . அன்றைய முதல்வர் மக்கள் திலகம் திரு M G ராமச்சந்திரன் அவர்களும் , பல அமைச்சர்களும் , சிலம்புச் செல்வர் ம பொ சி அவர்களும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்கள் . அனைத்தையும் பாதுகாத்து வைத்துள்ளோம்.
( இதுவும் என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதி என்பதால் இவைகளை கூற வேண்டியுள்ளது ) .. சிலருக்கு இந்த பகுதி பிடிக்காமலும் போகலாம் .. ஆனாலும் உண்மையை மறைக்ககூடாது இல்லையா .....புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்
அன்று மறுநாள் வந்த சில நாளிதழ்களில் இந்த விழாவினைப் பற்றி செய்தி வெளிவந்தது .
எங்கள் தாத்தா, புரசைப் பெரியவர், என்றழைக்கப்பட்ட திரு N C கிரிபால் முதலியார் அவர்கள்தான் . இன்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம் , ஆனால் அன்று புரசைவாக்கம் பகுதியில் அவரின் பெயரை அறியாமல் இருந்தவர்கள் இல்லை ....இதனை பெருமையோடு இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . ( முதலியார் என்ற அடைமொழி அன்று பலருக்கு சேர்ந்து இருந்தது என்பதை கூற விரும்புகிறேன் )
நிழலாடிய நினைவுகளால் நீரில் மிதந்தன விழிகள் .....
பள்ளிக்கல்வி முடிந்ததும் கல்லூரி வாழ்க்கை தொடங்கியது ....முதலில் PUC , சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் சேர்ந்தேன் . அங்கும் ஒரு பள்ளிகூட சூழ்நிலையே நிலவியது ....கல்லூரி என்றாலே கொண்டாட்டம்தான் ....ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன் .. ஆனால் அங்கு அப்படி இருக்க இயலவில்லை . எங்கள் காலத்தில்தான் அந்த கல்லூரியிலும் strike நடந்தது ...முதன் முதலில் அதை ஆரம்பித்தவர்கள் அந்த கல்லூரியில் நாங்கள்தான் என்ற பெருமை எங்களுக்கு என்றும் உண்டு ....அதை அடுத்தப் பகுதியில் கூறுகிறேன் ....
மீண்டும் சந்திக்கிறேன்
பழனி குமார்