உன் உள்ளம் உணர்ந்தேன்
கவின்மிகு தோற்றத்தால்
கவனத்தை ஈர்த்து
கவிதைகளில்
கருப்பொருளாய் மாறியதில்
தமிழுக்கு என்றுமே
தற்பெருமை உண்டு...
அகண்ட வானத்தின்
அத்தனை தாரகைகளும்
உன் புன்னகையால் தான்
ஒளிர்கின்றது என்பதனை
உலகம் அறியுமா? ...
முத்துக்களால் கோர்க்கப்பட்ட
பற்களின் இடையில்
சிக்கித்தவிக்கின்றன
சில சொற்கள் உனக்கு...
வட்ட முகம் செய்யும்
வசீகரத்தை மிஞ்சும் உனது
வார்த்தைகள்...
நீ நினைப்பது பற்றி
உன் மனதினைக் கேட்டால்
கூறுகின்றேன் எனச்சொல்லி
கோடிட்ட இடத்தை
நிரப்பு என்கின்றாய்...
சரி என்றவன்
நிரப்ப முற்படுகையில்
இடையில்
வார்த்தைகள் இன்றி
வெறும் கோடுகள் மட்டுமே
இருப்பது கண்டு
உன் உள்ளம் உணர்ந்தேன்...