சமரச சரித்திரம் படைத்துவிடு

அச்சம் விடுத்து வளர்ந்துவிடு - நீ
ஆணவம் தவிர்த்து வாழ்ந்துவிடு
கற்றபடி தினம் நடந்துவிடு - உன்
கடமையைக் காலத்தில் செய்துவிடு

கேடுகள் வந்தால் துணிந்துவிடு - பிறரை
கெடுப்பதை என்றும் மறந்துவிடு
கைத்தொழில் தன்னை பழகிவிடு - மனக்
கலக்கத்தை தூரத்தில் துரத்திவிடு

கொடுமையைக் கண்டால் எதிர்த்துவிடு - நீ
கோள்சொல்லும் குணத்தை மாற்றிவிடு
உறவுகள் அனைத்தையும் அரவணைத்து - பல
உதவிகள் செய்துநீ உயர்த்திவிடு

யாவரையும் நீ மதித்துவிடு - உன்னை
யார் வெறுத்தாலும் அன்பைகொடு
நீதிநூல் தன்னை படித்துவிடு - என்றும்
நேர்மை தவறாமல் வாழ்ந்துவிடு

தீயோரைக் கண்டு அஞ்சாதே - அவர்க்கு
தாழ்ந்து பயந்துநீ பணியாதே
ஏழையை எதிரில் கண்டாலே - நீ
ஏளனம் செய்தே சிரிக்காதே

மூளையை நாளும் உசுப்பிவிடு - உன்
முயற்சியை என்றும் தொடர்ந்துவிடு
புதிய வேதத்தைப் படைத்துவிடு - வீண்
பலம்பலைத் தவிர்த்து புடைத்துஎழு

சாதி மதங்களை ஒழித்துவிடு - நீ
சமரச சரித்திரம் படைத்துவிடு
சூரியக் கதிர்போல் சுடரைவிடு - உன்னை
சூழ்ந்துள்ள நோயினை விரட்டிவிடு

அணைமீறி ஓடும் நதியினைப்போல் - நீ
அடக்கு முறைகளை மீறிவிடு
பெருகிடும் பூநூல் பாம்புகளை - நீ
புற்றோடு அழிக்க பொங்கிஎழு

உறைபட்ட வாளாய் உறங்காமல் - நீ
புறப்படு வெற்றிக் கனிபறிக்க
முதுமை வந்தாலும் முடங்காமல் - நீ
முத்திரைப் பதித்திடு சரித்திரத்தில்.

எழுதியவர்
சொ. பாஸ்கரன்

எழுதியவர் : (22-Jul-15, 9:47 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 43

மேலே