கலியுகக் கண்ணன் எங்கே
துவாபர யுகத்தினிலே
துரியோதனன் என்னும்
துன்மார்க்க மன்னனவன்
துகிலுரிந்தான் திரௌபதியை
துவண்ட அவள் நிலையைக் கண்டு
துயர் கொண்ட கண்ணன் வந்து
துகிலளித்து மானம் காத்தான்
துஷ்டனவன் உயிர் பறித்தான்
கலி யுகத்தினிலோ
கன்னியர்தம் கற்புதனை
காமப்பசி கொண்ட பேய்கள்
கருணையின்றிச் சூறையாடி
கசக்கிய காகிதமாய்
வீதியில் வீசக் கண்டும்
கண்ணீரில் காலம் தள்ளும்
பெண்ணவளின் உள்ளம் கண்டும்
கண்மூடி இருப்பதுவும்
நியாயந்தானா கூறிடுவாய்
கண்ணனே என் கேள்விக்கு
பதிலென்ன உரைத்திடுவாய்?
- ரத்னமாலா புரூஸ்