ஓவிய மொழிக் கூற்று -ரகு

புத்தரின் தலை முதுகுப் பக்கம்
திரும்பியிருந்தது
இயேசு சிலுவை
செதுக்கிக் கொண்டிருந்தார்

புறாவின் உடலில்
பருந்தின் தலையும்
யானையின் பசிக்குமுன்
சிந்தியிருந்த பருக்கைகளும்
நெருடியிருக்க
ஒற்றனோ சிம்மாசனத்தில்
அமர்ந்திருந்தான்

வேடர்குல ராஜாங்கத்தை
வரவேற்று சிவப்புக் கம்பளம்
விரிக்கப் பட்டிருந்தது
ஓர் ஆளுயரக் கூண்டிற்குள்
இருந்தபடி கம்பிகளிடையே
கிளிகளுக்குப் பழம்
ஊட்டியிருந்தாள் அழகியொருத்தி

வெடித்திருந்த கார்குண்டின்
புகைக்குள்ளும்
கைவேறு தலைவேறாக
சிதருண்டுகிடந்த சிதைக்குள்ளும்
மேளதாளங்களோடு கலகலத்தன
திருமண ஊர்வலமொன்று

செருப்புத் தைத்துக் கொண்டே
கிழவனொருவன்
செருப்புகள் பறக்கும்
பாராளுமன்ற நேரடிக்காட்சியில்
லயித்திருந்தான்

சிறிது நேரத்தில் அந்த
ஓவியக் கண்காட்சியே சலசலத்தது
ஓவியங்களின் கீழுள்ள
விலாசத்தை மொய்த்ததில்
அங்கு எழுதப் பட்டிருந்தது
தலைகீழாக 'தலைமறைவு' என்று.........!!!

எழுதியவர் : சுஜய் ரகு (23-Jul-15, 6:16 pm)
பார்வை : 58

மேலே