தெருக்களில் அலையும் வெயில்
வெறுங்கால்களால் கடக்க முடியாதபடி
வெயில் தெருக்களில் அலைகிறது.
நெருப்பின் தேசத்திலிருந்து
காற்றைக் குடித்தபடி
துடித்து விழுகிறது
உழுத வயல்.
பாலையாகிவிட்ட நிலங்கள்
மதர்ப்படங்கி...
இறகுகள் கருகிய வண்ணத்துப் பூச்சியாய்
சரிந்து கிடந்தன.
ஆடுகளை மேய்ப்பவன்
ஒரு துளி நிழலுக்காக
அலைந்து கொண்டிருந்தான்.
வெடிப்புற்றுக் குருதி வழியும்
பாதங்கள்...
நத்தையின் கால்களாகின்றன.
உயரத்தில் பூக்கும் நீலப் பூ
வனப்பழிந்து விழுகிறது
இறுகிக் கிடக்கும்
கோரவடுவாகிக் காய்கிறது
ஆற்றங்கரை மணல் மேடுகள்.
புல்லறுத்துக் கட்டியவளின்
காலணிகளற்ற பாதங்களை
நனைக்கிறது
வியர்வையின் துயரம்.
அழிந்த நிலத்தின் வரைபடத்தில்
குருதியோடிக் கசங்குகிறது
ரணங்களை மென்று விழுங்கிய குரல்.
உடலெங்கும் பரவிக் கிடக்கிறது
சாதியின் வலி.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
