சாக்கடன்

எதார்த்தம் மிகவும் அழகானது,
உண்மை என்றும் தன்மையானது,
இவைகளின் உள்ளர்த்தம் எத்தகையது?
இவற்றினது நீள அகலங்களின்,
வீரியங்கள் எப்படிப்பட்டது?
எல்லா உண்மைகளும் அழகானதா?
அனைத்து அழகும் உண்மையானதா?
நேசிக்கலாம் எதையும் திறந்த மனதுடன்,
ஏற்றுக்கொள்ளலாம் பக்குவத்துடன்,
என்றாலும்,
சிந்தித்தும் சந்தித்தும் பார்க்க,
சக்தி பெற இயலா சில உறுத்தல்கள் !
சந்தித்தேன் சில மனிதர்களை !
சாக்கடை அள்ளுதலும்,
மனிதக்கழிவுகள் அகற்றுதலும் அவர் தொழில் !!
நேரில்கண்டு விவரிக்க தயங்குகையில்,
வேலையில் இறங்கிவிட்டனர் அவர்,
எதுவெல்லாம் வேண்டாமோ,
அதுவெல்லாம் போகிறது சாக்கடைக்கு !
முக்கியமாய்,
அழுகிய பழங்களும் பண்டங்களும்,
வாய்விட்டு சொல்ல இயலா பொருட்கள் !
உடல் சிலிர்த்து உஷ்ணம் பரவியது,
கூசாமல் அள்ளினான் !
கூனிக்குருகினேன் நான் !
மக்கியதையும் மக்காததையும்,
ஸ்திரமாய் பிரித்து கொட்டினான் !
துர்நாற்றம் !
அவன் அனுபவிக்கிற அன்றாட சுகந்தம் !
நொடிகள் அவன்செயலை கடக்கவே,
குமட்டிச்சாகிற நமக்கெல்லாம் !
உள்ளேயே உழலும் அவன் எதை சொல்கிறான்?
என்னவாயிருக்கும் அவனது சுயம்?
எப்படி சகிக்கிறான் இதையெல்லாம்?
நியாயம் சுமக்கும் அவனே பேசட்டுமே !
இதோ அவன் வார்த்தைகள் !!

கும்பிடறேன் சாமி !
நமக்கு இதுல எந்த உறுத்தலும் இல்ல,
சாக்கடைல இறங்கினா அந்த இடம் சுத்தமாகனும் !
யோசனையெல்லாம் அதுலதான் !
கெளரவம் பாத்தா கதைக்காகாது !
ஆரம்பத்துல நெனச்சதுண்டு !
என்னடா இதுன்னு !
மனுசங்க மனசுலதான் எத்தன குப்பைங்க !
அதவிடவா இதெல்லாம்?
அதுக்காக அதாயமில்லாம வேலபாக்கால !
கவர்மெண்டு சம்பளம் தருது நெறயவே !
செய்யற வேலைய தெய்வமா நெனச்சாலும் !
மனுசக்கழிவு மட்டும் மலைக்க வச்சுரும் !
அங்க எறங்குனா !
உசுர் போகும் சாமி !
உண்ணமுடியாது ஓரங்கவும் முடியாது !
அதனால அங்கமட்டும் !
தண்ணி அடிசுருவோம்!
சுயநெணவ எழந்துருவோம் !
வேல முடிச்சுவந்து !
தின்னாம தூங்கிருவோம் !
குமட்டிட்டே இருக்குமுங்க !
எப்பவும் அடங்காம !
இருந்தாலும் சகிச்சுப்போம் !
இப்பிடி கொடுமைகள !
எல்லாம் வேலைதான் !
எமக்கேனோ இப்பிடி?
ஆனாலும் பாக்கறோம் !
அரசாங்க உத்யோகம் !
கடைசி கடைசியா,
ஒன்னுமட்டும் சொல்லிக்கிறேன் !
மனுசருக்கு சொல்லுங்க !
நீங்க அருவருக்கும்,
வேலைகள செய்யறோம் !
எங்கள ஏன் நீங்க அருவருத்து பாக்கணும் !
பார்வைய மாத்துங்க,
படுவிசா நடத்துங்க,
நாங்களும் மனுசர்களே,
நாட்டோரே கேளுங்க !!

சொல்லி முடித்த அவன்,
தன் வழியே போய்விட்டான் !
உள்ளே கொதிக்கும் உலை !
ஆற வழி என்ன இங்கே?
எல்லாம் அழகுதான் !
உண்மை பெருமைதான் !
எதார்த்தம் எனும் அர்த்தம் !
எப்போதும் சிறப்புதான் !
உள்ளம் சொன்னவனால்,
மேலெல்லாம் வெடிப்புதான் !
தாண்டிப்போயிடுறோம்,
சாக்கடைங்க நெனப்புதான் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Jul-15, 10:07 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 67

மேலே