கண்ணதாசன்
எட்டதுதான் அவனுக்கு கிட்டிய ஏட்டறிவு
பாட்டறிவிலே அவனுக்கு எட்டாத உச்சமில்லை- அவன்
விட்ட எச்சதனை பாடும் பாவலர்களும்
கிட்டியிருக்கின்றனர் நாட்டிலே நமக்கெல்லாம்.
பட்டறிவிலே அவனோ எவருக்கும்
கிட்டும் ஒரு எளிய பல்கலைக்கழகம்;
பாட்டாளிகளுக்கு மட்டுமல்ல பாடுபடும்
பாட்டாளிகளுக்கும் பாடங்கள் அங்கே இலவசம்.
பட்டனத்து செட்டியாரையும் மிரட்டுகவி பாரதியையும்
கட்டுத்தறி பாடவைத்த கம்பனையையும் தன்
பாட்டிலே கலந்து திரை இசையோடு
பட்டித்தொட்டியெல்லாம் காண வைத்தவன்.
பரிகாசம் பண்ணவே கம்பனை அவன்
வாசிக்க வைத்தனர் தலைவர்கள் சிலர்;
மாகவியோ அவனுள்ளம் வசீகரிக்க தான்
சுவாசிக்கும் மூச்சோடு அவனை கலந்து விட்டவனவன்.
ஊடல் கொண்ட பெருந்தலைவற்கெல்லாம்
பாடல்கள் மூலம் சமரசத்தூதுவிட்டவன் அவன்
போற்றாத தலைவர்களில்லை; தவறிழைத்தவர்களை
தூற்றாமல் என்றுமே விட்டவனில்லை.
உண்டால் தான் போதையூட்டும் மதுவுடனும்
கண்டாலே போதையேற்றும் மாதுடனும்
மாண்டு சொர்க்கம் புக வேண்டியவனவன்- அதனால்
வேண்டாத நகரத்தால் புவியிலே இன்னலுற்றவன்.
திட்டு அவனிடம் வாங்கா தெய்வமில்லை; பின்பு
துட்டு வாங்கும் உண்டியிலே வேங்கடவனுக்கு பாட்டுச்
சீட்டிட்டவன்; தலையில் குட்டுப் போடவைத்தவரையும் தரையில்
முட்டுப் போடவைத்தவரையும் புகழ்ந்து பாடியவன்.
விதியென்று ஏதுமில்லை வேதங்கள் வாழ்க்கையில்லை என்றவன்
வாழ்க்கைக்கு விதியே அர்த்தமுள்ள வேதங்கள் தானென
அழுத்தமாக அத்தியாயங்கள் பத்து எழுதி மகா
ஆத்திகத்தின் அர்த்தங்களை உலகுணர உரைத்தவனவன்.
மாயக்கண்களிலே மூழ்கிக்கிடந்த தாசனவனை
பாவியென்று பலர் பேசினாலும் அவன் பொய்யறியா
தூய உள்ளத்திலே கவிசூழ ஆழ்ந்து கிடந்தவனோ
ஆயர்பாடி மேகவண்ண மாயக் கண்ணனன்றோ!
பணம் காசு அவனைச் சேராமல் விட்டிருக்கலாம்
அவன் சேர்ந்த கட்சிகளெல்லாம் தோற்றிருக்கலாம்
கவிஅரசனவன் செய்த கவியெல்லாம் நமை வென்றனவே...!
உலகத் தமிழர் உள்ளமெல்லாம் நின்றனவே...!
என் நேசத்தில் நிற்பவனை ஆசையோடுவாசிக்கும்
நேரத்தில் என் நெஞ்சில் முளைத்த
வார்த்தைகளையெல்லாம் வரிகளாக்கியிருக்கிறேன்
மாசுகளையெல்லாம் மன்னித்து விடுங்கள் மாண்புடையோரே!