காதலில் விழுந்த பனித்துளிகள்

நதியில் நீராடிவிட்டு
நடைபழகுகிறாள்
அவள்
கையேந்தி வரம் கேட்டேன் வந்து
தாகம் தீர்த்துவிட
நனைந்த உடலில்
வழியும் நீர்த்துளிகளிடம்
உனது தாகம் தீர்க்க
நானிங்கே தவம் கிடக்க
அவளிடம் கையேந்துகிறாயே
என்னிடமில்லாதது
அவளிடமேதும்
உண்டோ
கோபித்துக் கொண்ட
பனிதுளிகளிடம்
பூக்களையேன்
பிடித்திருக்கிறது
உனக்கு
புல்தரையேன்
நீ! காதலிக்கிறாய்?
ஆதலால்தான்
சொல்கிறேன் அனைவரிடமும் இதயமிருக்க சிலரிடமே
அன்பு குடிகொண்டிருக்கும்
பனிதுளிகளே
அழகாய் எனை வசீகரிப்பது
அவளின் அன்பு
மட்டுமே
நான் சொன்னதும்
நாவிதழை
பனிதுளிகள் கடித்துக்கொண்டதோ
நானறியேன்
நீயணிந்த வெண்கொலுசு
புல்வெளிப் பாதையில்
உரசிவிட
பொற்கொலுசாகிப் போனதை நிச்சயம் பனிதுளிகள் பார்த்திருக்கும்
பூமிதேவதை
மேனிநீரின்
மேன்மைதனையதுவும்
அறிந்திருக்கும்
என்னைக் கண்டவுடன்
உன்னுடம்புச் சூடேறி
உள்வாங்கித் தின்கிறதே
நீர்த்துளிகள்
பதற்றம் ஏனோ
பாதுகாவலன் நானிருக்க
காதலனே எனதருகில்
வா!! உனை என்றோ
நான் ஏற்றுக்கொண்டேனென
உதடுகள் முனுமுனுப்பதை
ஓரக்கண்ணால்
ரசித்து விடுகிறேன்
நானும்
விளைந்த பயிரை
விழி மூடும் வரையில்
இன்னோர் விழிபடாமல்
நானுமுனை
காத்திடுவேன்
அவசரப்படாதே
என்னவளே மெதுவாக
நட!
கனல் கொண்ட தேகத்தில் மேகம் இறங்கிவந்து
மழைகொண்டு
உன்மேனி குளிரச் செய்திடும்
அம்மேக மழையால்
என் கையேந்தல்
நிகழ்வானது
மீண்டும் தொடரும்
காதலும் வாழ்தலும் தொடர்கதைதானடி
நாம் கல்லறையில் கால்பதிக்காத
வரையில்,,,

எழுதியவர் : அரும்பிதழ் சே (27-Jul-15, 3:09 pm)
சேர்த்தது : செ செந்தழல் சேது
பார்வை : 62

மேலே