வீரவணக்கம் செலுத்துவோம்

வீரவணக்கம் செலுத்துவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
அணுசக்தி நாடென்றே இந்தி யாவை
அகிலத்தில் உயர்த்திட்ட அரும்விஞ் ஞானி
அணுக்குண்டைப் பொக்ரானில் வெடிக்க வைத்தே
அணுவியலில் வியக்கவைத்த ஆற்ற லாளன்
கணுக்களுடை கரும்பைப்போல் அக்னி பிருத்வி
கண்விரிய செலுத்திட்ட ஏவு கணையன்
முணுமுணுத்தோர் மூக்கினிலே விரலை வைக்க
முன்னேற்றம் தந்தவர்தாம் அப்துல் கலாமாம் !
உறக்கத்தில் வருவதன்று கனவு உன்னை
உறங்காமல் செய்வதுதான் கனவு ! வாழ்வில்
சிறப்பதற்குக் கணவைக்காண் என்றே நேரு
சிந்தனைபோல் மாணவரை அழைத்த அறிஞன்
உறவிருந்தால் உழைப்பதற்குத் தடையென் றெண்ணி
உயர்மணம்தான் செய்யாத காமரா சர்போல்
உறவிந்த நாடென்றே வல்லர சாக்க
உயிர்வரையில் உழைத்தவர்தாம் அப்துல் கலாமாம் !
ஏழ்மையிலே வளர்ந்தாலும் உறுதி நெஞ்சில்
ஏற்றுத்தாய் மொழித்தமிழில் கல்வி கற்றே
ஊழ்வென்று படிப்படியாய் உயர்ந்து நாட்டின்
உயர்பதவி குடியரசுத் தலைவ ராகி
வாழ்வெல்லாம் எளிமையொடும் நேர்மை யோடும்
வள்ளுவரின் குறள்வழியில் வாழ்ந்து காட்டித்
தாழ்ந்திடாமல் தமிழர்க்கும் தமிழ்மொ ழிக்கும்
தகுபெருமை சேர்த்தவர்தாம் அப்துல் கலாமாம் !
மண்ணிலோடும் நதிகளினை இணைப்ப தற்கும்
மனங்களிலே மதங்களினை இணைப்ப தற்கும்
தண்டனையாய் மரணத்தைக் கொடுக்கும் சட்டம்
தனைநீக்கி ஒழிப்பதற்கும் பாடு பட்டுக்
கண்களிலே அவர்கண்ட கனவு தன்னைக்
காண்கின்ற வகையினிலே செய்வ தொன்றே
விண்மீது கோள்விட்ட விஞ்ஞா னிக்கு
வீரமுடன் நாம்செலுத்தும் வணக்க மாகும் !