ஞானப் புலம்பல்
சொல்ல நினைக்கிறேன்...
கற்பனைக்கு வரம்புவைத்த
கண்ணியனாம் அல்லாஹ்வை
சிற்பம்வைத்து வணங்கிடுதல்
சீர்கேட்டைத் தந்திடுமே
அற்பமான இவ்வாழ்வில்
அமிழ்ந்திடாது நம்மனதை
நுட்பமாக நிலைப்படுத்த
நூரெல்லாம் வாய்த்திடுமே
தற்பெருமை ,தனதென்னும்
தறிகெட்ட ஆசையிலே
விற்பன்னர் ஆகியதாய்
வீண்கதைகள் பேசிடுதல்
கற்பென்னும் நிலைகொண்ட
கல்பிற்கு அழிவாகும்
விற்பனைக்கு அல்ல, இறை
விதித்திருக்கும் இஞ்ஞானம்
தூயவழி தேடிநிதம்
துடிப்புடனே இறைநினைவில்
தோய்ந்திடவும் தேய்ந்திடவும்
தோன்றிடுமே முன்னேற்றம்
வாய்ப்பதுவாய் கிடைத்திருக்கும்
வாழ்க்கையிதில் ஏமாற்றி
ஏய்க்கின்ற சைத்தானை
ஏறிட்டும் பார்க்காதே
மனத்தூய்மை,வழுவாத
வணக்கமுடன் கையேந்தி
சினத்தீமை விட்டேகி
சீரான அன்பென்னும்
இனப்பேதம் பார்க்காமல்
இன்சானின் தத்துவத்தில்
வனப்பான இறைசெயல்கள்
வழங்குவதைப் பார்த்திருப்பாய்
சிரிப்பதிலே அழுகையிலே
சிந்தையிலே வந்துநிற்கும்
திரித்துவிடும் எண்ணத்தில்
தீமைநன்மை தோன்றுவதில்
விரிப்பதிலே நிற்கின்றே
வேளையிலும் தோன்றுவதை
எரிப்பதிலே மும்முரமாய்
எண்ணெய்என இஷ்க்ஊற்று
அ.மு.நௌபல்