நெஞ்சில் நின்றார்

நெஞ்சில் நின்றார்

பாவாடைப் பருவத்தில் இல்லாளாகி
பா வாடை வீசுகின்ற பருவந்தன்னில்
பூ வாடை வீசிவரும் ! துணைவன் மாள
பூவாடல் போன்றிந்த கன்னிப் பெண்ணாள் ,
கா வாடைக் கொடுக்கின்ற கனிகளெல்லாம் ,
கண்ணிவிட விதவையெனும் தீயும் பட்டு
நோ வாடை நொந்தமனம் , சிந்தும் கண்ணீர்
நூலிழையும் அருந்திட்ட நிலையு மாவாள் !

காலமெலாம் கன்னியவள் விதவை யென்ற
கரும்புள்ளி பாட்டழகு சிதைய லாமோ ?
கோலமெலாம் களையிழந்து பொலிவிழந்து
கொந்தளித்து அழலாமோ ? கொடிய கொடியசூரை
மேலடித்து விழலாமோ மேன்மை குன்றி
மெல்லியளை கள்ளியென ஒதுக்கலாமோ ?
நூலறுந்த பட்டம்போல் வாழ்வும் வீழ
நொடிப்பொழுதும் விடலாமோ ? என்றே கேள்வி

கேட்டிட்டார் ! கருணையினால் சட்டந் தீட்டி
கிள்ளிட்டார் விதவைப்பேர் களையை ! கண்ணீர்
ஓட்டிட்டார் ! மறுமணத்தால் மனங் களிக்க
ஒளிவிட்டார் ! சன்மானம் தந்தார் ! ஐயா
காட்டிட்ட சமுதாய முறையை போக்க
கலைஞர்கோ கரையில்லா இருகரங்கள்
நீட்டிட்டார் , காத்திட்டார் ! புகழினுச்சி
நின்றிட்டார் நீங்காது நெஞ்சில் நின்றார் !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன� (28-Jul-15, 10:42 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 53

மேலே