மாமனிதர் அப்துல் கலாம் கவிஞர் இரா இரவி
மாமனிதர் அப்துல் கலாம் ! கவிஞர் இரா. இரவி !
படகோட்டி மகனாகப் பிறந்து முதற்குடிமகனானவர் !
பாரதமே கண்ணீர் வடிக்க சோகத்தில் ஆழ்த்தியவர் !
‘தமிழன் என்று சொல்லடா’ நாமக்கல்லார் வைர வரிகளுக்கு
தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் !
பணத்தாசை துளியும் இல்லாத நேர்மையாளர் !
பணத்தாசைக்கு மயங்காத தூய மனதாளர் !
யாரையும் குறை சொல்லாத உதடுகள் பெற்றவர் !
யாரையும் நேசிக்கும் அன்பு உள்ளம் கொண்டவர் !
நதிகளை தேசியமயமாக்கிட குரல் கொடுத்தவர் !
நாளும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை விதைத்தவர் !
தீவில் பிறந்து தீபமாய் அறிவில் ஒளிர்ந்தவர் !
திருக்குறளை ஆழ்ந்து படித்து நின்றவர் !
மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்தவர் !
மனிதரில் புனிதராக சிறந்து வாழ்ந்தவர் !
அக்கினிச் சிறகுகள் விரித்து வானில் பறந்தவர் !
பணியாளர்களிடம் பண்போடு யாவரையும் நேசித்தவர் !
நேரம் தவறாமையை வாழ்வில் கடைபிடித்தவர் !
நேரத்தை என்றும் மதித்து நடந்தவர் !
குடியரசுத்தலைவர் பதவியில் முத்திரை பதித்தவர் !
குடியரசுத்தலைவர்களில் முன்மாதிரியாக இருந்தவர் !
அறிவியல் அறிந்த அறிஞராக வாழ்ந்தவர் !
அறிவில் சிறந்த சான்றோராக வாழ்ந்தவர் !
விஞ்ஞானிகள் பலரை உருவாக்கி மகிழ்ந்தவர் !
விந்தைகள் பல விண்ணில் புரிந்தவர் !
வாசிப்பை சுவாசமென நேசித்து தினமும் வாசித்தவர் !
வாசிப்பு வழக்கத்தை மாணவர்களுக்குப் பழக்கியவர் !
புத்தகத் திருவிழாக்களில் உரைகள் ஆற்றியவர் !
புத்தகத்தால் உயர்ந்தேன் என அறிவிப்பு செய்தவர் !
இசுலாமியராக இருந்தாலும் அசைவம் உண்பதை விட்டவர் !
இசுலாம் மட்டுமல்ல எம்மதமும் விரும்பியவர் !
வன்முறையை என்றும் எங்கும் விரும்பாதவர் !
நன்மறை வழி வாழ்வாங்கு வாழ்ந்த நல்லவர் !
தமிழர்களின் அடையாளமாக வாழ்ந்த மாமனிதர் !
தமிழர்களின் திறமையை உலகிற்குப் பறைசாற்றியவர் !
மூடப்பழக்கமான சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர் !
மூளையைப் பகுத்தறிவுக்கு பயன்படுத்திடச் சொன்னவர் !
கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள்
குடிமக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை நம்பாதவர் !
சின்ன உதவிக்கும் நன்றி சொல்ல மறக்காதவர் !
சிகரமாய் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றவர் !
நேர்மையின் வெற்றிக்கு இன்று உதாரணமானவர்!
நேர்மையாளர்களுக்கு நம்பிக்கை விதைத்தவர் !
தலைநகரில் தலைமகனாய் என்றும் திகழ்ந்தவர் !
தலைவணங்கி திரண்டுவந்து மரியாதை செலுத்தினர் !
முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர் !
மூச்சு முட்டுமளவு இராமேசுவரத்தில் கூடினர் !
ஆத்திகர்களின் புனித இடமான இராமேசுவரம் என்பர் !
நாத்திகர்களுக்கும் புனித இடமாகிட காரணமானவர் !
மறைவால் உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியவர் !
மறைவு அவருக்கு என்றுமில்லை என்றானவர் !
மாணவர்களின் முன்னேற்றத்தில் அவர் வாழ்கிறார் !
மண்ணில் விதைத்த மரங்களில் அவர் வாழ்கிறார் !
விண்ணில் உள்ள ஏவுகணைகளில் அவர் வாழ்கிறார் !
நூலகங்களில் உள்ள நூல்களில் அவர் வாழ்கிறார் !
நமது நெஞ்சங்களில் என்றும் அவர் வாழ்கிறார் !
நம் எண்ணங்களில் அக்னிச் சிறகுகளாய் ஒளிர்கிறார்.!