அம்மா
தாய் பற்றி சேய்
ஏழு வயசு இருக்கும் போது தந்தையை இழந்து விட்டு
ஏழு கூட பிறந்து நீ ஏமாந்து போய்புட்ட
இன்னும் ஒன்னு கூட பிறந்து இருந்த நவ சக்தி ஆயிருப்ப
புத்தகத்த தூக்காமா கல் தூக்கி போனவளே
பசி தாங்க முடியாம பசு மேய்க்க போனவளே
காலணா கூலிக்கு கடுந் தூரம் போனவளே ,
பாசத்துக்கு பஞ்சம்மில்ல , பசிக்குது ஆனா சோறு இல்ல
பாழ போன பழைய சோறும், காய்ந்து போன மிளகாயும்
தொட்டு தின்ன எச்சில் ஊற , கிடைக்காம போன வாழ்க்க
புத்தி கிட்ட புருசனுக்கு வறுமையால வாக்கப்பட்டு ,
அப்பத்தாவின் கொடுமை முன்னே , ரெண்டு புள்ள பெத்தெடுத்த
நாதியத்து கிடைக்கையிலே , ஒரு வாய் சோறு எவனும் தரல
நாசமா போகணுமுன்னு நாலு பேரு நினைக்கையில
வறுமையில நிக்கும் போது சொந்தம் கூட மதிக்கலையே
இந்த வாழ்க்கை எதுக்குன்னு வண்ணாந்துறை போனவளே ,
ஆண்டவனே காப்பாத்தி அடுப்பையும் பத்த வைக்க
பறந்து போனது பஞ்சம் , நெகிழ்ந்து போனது ஊர் நெஞ்சம் .
உதவாத புருசனையும் கூட்டிகிட்டு நீ நடந்த
சேத்துல கால வச்சு ,சோறு தண்ணி கொடுத்துபுட்ட
கார மண்ணுல காலவச்சு எங்களுக்கு கல்விய கொடுத்துபுட்ட
காசு கொடுத்து வளர்த்த நாட்டில் , கஷ்டம் சொல்லி வளர்த்து விட்ட
பாசத்த காட்டி நீ பராசக்தி ஆய்புட்ட
விளக்கமாரல் வெளுத்து எங்களை வெள்ளை மனமாய் வளர்த்த
என்னை பெத்த மனம் பித்தாச்சு ,இந்த பிள்ளை மனம் என்னாச்சு !
ஏழு மாடி கட்ட நினச்சு ஏழு கல்லு நட்டு வச்ச
கோழி கூவி எழுப்பி விட , கனவுன்னு தெரிய வர
காலமெல்லம் கூரையில வாழனும்னு நீ நினைக்க
சட்டென்று மாறும் வானிலை போல
பட்டென்று மாறியது நம் வாழ்க்கை
கடைசி மகன் கல்லூரி போக ,
மூத்த மகன் முன் நாடு செல்ல
கண்ட கனவு , நனவாகுமுன்னு நீ நினைக்கையில
பங்காளி பிரச்சனை வந்து , நீ பல நாளா தூங்கலையே
வேலை செஞ்சுகிட்டே படிச்ச மகன், வெளிநாடு போகையில
தனி மரமா நின்னுகிட்டு தடுக்காம தவித்தவளே
நீ வெறுங்கல்லாய் வாழ்ந்துகிட்டு , வேலைக்கும் பொய் வர
அவனையே நினைத்துகிட்டு , நாளெல்லாம் கடந்து வர
மதிக்காத சொந்தம் கூட , உன் வாசற்படி மிதித்து வர
வாய் தீர தூற்றி வந்த ஊரார் கூட , உன் புகழ் பேசி வர
நாட்டை காக்க போர் தொடுத்த ஜான்சி ராணி போல்
நம் வீட்டை காக்க போர் தொடுத்த தாயே
நாங்கள் செய்த தவமோ அல்லது நீ செய்த புண்ணியமோ
நாங்கள் உன் பிள்ளையாய் பிறந்ததற்கு
எங்களை பற்றி ஊரெல்லாம் பேச வேண்டும் என்று நீ நினைத்தாய்
உன்னை பற்றி பாரெல்லாம் பேச வேண்டும் என்று யான் நினைக்கிறேன்
கண்ணீரில் நனைந்தவளே , உன் கஷ்டம் தீர்க்க ஓடுகிறோம் , வாழ்த்துவாயாக !
இப்படிக்கு
உன் புகழ் பாடும் பாலகன்