நாம் நீர் நட்பு~ஆதர்ஷ்ஜி

நாம் நீர் நட்பு~ ஆதர்ஷ்ஜி
.~~~~~~~~~~~~~~

நாம் யாரென்றால் நட்பெனச் சொல்வோம்!

நீர் யாரென்றால் நீரெனச் சொல்வோம்!

நாமே நீர்... நீரே நாம்!

சிப்பிக்குள் வீழ்ந்ததால் சிறுமுத்தானோம் சிதறிக் களித்துருண்டு சிறார்களாய் அலைந்தோம்

நீரும் நாமும் நட்பேயானோம்,
நீரும் நாமும் நீரேயானோம்!

பனித்துளியாகிப் படிந்திருந்த நாம்,
கதிரவன் ஒளியேறி வான்வெளி சென்றோம்!

மோகம் கொண்டாடிடும் வாலிப வயதில்
மேகமாய் மாறி வான்தனில் அலைந்தோம்!

ஒவ்வொரு மேகமும்...
ஒவ்வொரு வடிவம்
எவ்வொரு வடிவமும் நிரந்தரமில்லை...
அவ்வொரு நிலையிலும் நீரே நாம்!

காற்றுடனேயே கலைந்தலைந்தாலும்
மாற்றப் புயலில் மலைதனில் வீழ்ந்தோம்!

வாழ்வில் ஓட்டம் வளமெனக் கண்டோம்!

வீழ்ச்சியில் நாமும் எழுச்சியைக் கண்டோம்!
வீறுகொண்டு எழுந்து ஆறுகளானோம்!

சேர்ந்திடும் கடல்தான் தூரம் என்றாலும்
சேர்ந்தே அனைவரும் ஓடவே விழைந்தோம்!

ஒவ்வொருவரும் தனி ஆறாகினும்
ஒருவருக்கொருவர் துணை ஆறானோம்!

பாறைகள் கண்டதும் சீறி உடைத்த நாம்,
பாலைகள் கொன்று பல ஊரமைத்த நாம்,
மனைவி மக்கள் முன்
அணை நீர் ஆனோம்!

ஓடுவதற்காகவே ஒரு நிலை நின்ற நாம்,
ஓடுவதொன்றே உயிரென அறிந்தோம்!

ஆழிப் பெருங்கடல் அடைந்ததும் நில்லோம்!
ஆவியாகி நாம் ஆகாயம் செல்வோம்!

ஆதியாகிடும் அந்த அந்தமே
ஆரம்பித்திடுமே புதியதோர் ஓட்டம்!

நாமும் நீரும் நட்பெனச் சொல்வோம்,
நாம் யாரென்றால் நீரே என்போம்!

உரசிடும் தோள்கள் விலகிடும் போதிலும்,
உரக்கச் சொல்வோம் நட்பெங்கள் மதமே!

~ஆதர்ஷ்ஜி

.»»»»»»»»»»»»»»»»»»»»
நட்பு தின வாழ்த்துக்கள்
.»»»»»»»»»»»»»»»»»»»»

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (2-Aug-15, 1:55 pm)
பார்வை : 66

மேலே