படித்தால் மட்டும் போதுமா
படித்துவிட்டால் போதுமா சொல்லடா தம்பி - நீ
படித்தபடி நடந்தால்தான் பயனுண்டு தம்பி
உடலைவளைத்து உழைத்திடணும் உணர்ந்திடு தம்பி - தினம்
உழைத்துமுடித்து உறங்கிடணும் மனதில்வை தம்பி
குள்ளநரிக் கூட்டம் நாட்டில்நிறைய இருக்குது - அதன்
குணமறிந்து நடந்திட்டாலே நன்மை இருக்குது
அடுத்துக்கெடுக்க நேரம்பார்த்து ஆளை சேர்க்குது - உன்னை
அடியறுக்க நேரம்பார்த்துக் காத்துக் கிடக்குது
வாட்டம்வரும் வாழ்க்கையிலே உண்மைதான் தம்பி - நீ
வாடிநின்றால் விலகிடாது வருந்தாதே வெம்பி
தெம்புடனே நம்பிக்கையும் கொண்டிடு தம்பி - அது
தெரியாமல் வந்தவழியில் சென்றிடும் தம்பி
விதியிதுதான் என்றுநீயும் ஏங்கி நிற்காதே - உள்ள
மதியைமறந்து மந்தமாகி மயக்கம் கொள்ளாதே
இதயத்திலே எதையும்தாங்கும் வலிமை கொண்டாலே - சூழ்ந்த
இருள்விலகி வழிபிறக்கும் மறந்து விடாதே
தோல்விகளும் கவலைகளும் மனதினை வாட்டும் - நீ
துவண்டுவிட்டால் அவைதனது வேலையைக் காட்டும்
தொடர்ச்சியான முயற்சியாலே அவைகளை துரத்து - உனை
தொடர்ந்த சோகம்தானாய் ஓடும்நெஞ்சினை நிமிர்த்து
எறும்பைப்பாரு வரிசையாக இணைந்து உழைத்திடும் - சின்ன
ஈக்கள்கூட சுறுசுறுப்பாய் உணவைத் தேடிடும்
காக்கையைப் பார்கூவி தனதுஇனத்தை அழைத்திடும் - மனதில்
கபடமுள்ள மனிதனைஊர் சிரித்துப் பழித்திடும்
ஆசையென்ற ஏர்பூட்டி இதயத்தை உழுவாய் - அதை
அடைந்திடவே அசராது அன்றாடம் உழைப்பாய்
பையப்பையப் பாடுபட்டு உச்சத்தை தொடுவாய் - உன்
பகுத்தறிவைப் பயன்படுத்தி வெற்றியை அடைவாய்.
எழுதியவர்
பாவலர்.. பாஸ்கரன்