இன்னிசை இருநூறு - இரண்டாவது அதிகாரம் – அறம் - பாடல் 2
ஞானியெனத் தேவனென நல்லனெனச் செல்வனெனக்
கோனெனப்பல் கோடி கொடுக்குஞ் சிறப்பினையும்
ஈனு மறந்தா லிடர்பலவு மீனுமால்
ஆனாது செய்க வறன். 2
இதில் ஈனும் அறம் மறந்தால் இடர்பலவும் ஈனுமால் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இப்பாடலைக் கீழேயுள்ளவாறு பிரித்துக் கொள்வோம்:
’ஞானியென
தேவனென
நல்லன் என
செல்வன் என
கோன் என
பல் கோடி கொடுக்கும் சிறப்பினையும்
ஈனும்
அறம் மறந்தால்
இடர்பலவும்
ஈனுமால்
ஆனாது செய்க வறன்’ என்று எடுத்துக் கொண்டு பொருள் காணலாம்.
தெளிவுரை:
ஞானியென்றும், தேவனென்றும், நல்லவன் என்றும், செல்வந்தன் என்றும், தலைவன் என்றும் பல கோடிகளை ஒத்த சிறப்புகளைத் தருவதற்கு ஏதுவான அறத்தினை மறக்கக் கூடாது; மறந்தால் பலவகையான துன்பங்களை அது தரும். ஆகையால் இடைவிடாது அறத்தையே செய்யுங்கள் என்பதாகும் இதன் பொருள். இதனால் அறன் பிறழ்தல் துன்பத்தையும், அறன் செய்தல் பல சிறப்புகளையும் தருவது கூறப்பட்டது.
வள்ளுவரும் இக்கருத்தையே ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் அதிகாரத்தில்,
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32 என்றும்,
இதற்கு முந்தைய குறளில்,
சிறப்பீனும்; செல்வமும் ஈனும்; அறத்தினூஉங்(கு)
ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31
என்றும் சொல்லி அறத்தினை வலியுறுத்துவது நோக்கத்தக்கது.
இதற்கு உரை சொல்லும் பரிமேலழகர், சிறப்பு என்பதற்கு எல்லாப் பேற்றினும் சிறந்ததானது வீடு என்றும், ஆக்கம் என்பதற்கு மேன்மேலும் உயர்தலைக் கொடுக்கும் என்றும் சுட்டிக் காட்டிச் செல்கிறர்.
அதே சமயம், அறம் செய்தலை மறத்தலால் ஏற்படும் கேடு போன்று தாழ்ந்ததும் வேறு இவ்வுலகில் இல்லை என்பதை வள்ளுவரும் ’அறத்தினை மறத்தலின் ஊங்கில்லை கேடு’ என்று அறம் மறப்பது பற்றித் தெளிவாக்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்
குறிப்பு:
இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.
இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த பாடல் 12 ன் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.