குற்றங்கள் இப்படியாகத்தான் o-o-o-o சிறு கதை - சொ சாந்தி

குற்றங்கள் இப்படியாகத்தான் o-o-o-o  சிறு கதை - சொ சாந்தி

குற்றங்கள்.... இப்படியாகத்தான் (சிறு கதை) - சொ. சாந்தி

குக்கூ... குக்கூ... குக்கூ...

வாசற்கதவின் வெளியே பொருத்தப்பட்ட சுவிச்சினை ப்ரீத்தி அழுத்தவும் வீட்டின் ஹாலில் பொருத்தப்பட்ட அந்த அழைப்புமணியின் மேல் ஒரு குயில் எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து... விட்டு... விட்டு... கூவியது.

ஹாலில் அமர்ந்து ரமணி சந்திரன் நாவல் படித்துக் கொண்டிருந்த நிவேதா அப்படியே அதனை சோபாவில் கவிழ்த்துப் போட்டுவிட்டு வாசற்கதவை அணுகி தாழ்ப்பாளை நீக்கவும் வெளிப்புறத்திலிருந்து ப்ரீத்தி வேகமாக கதவைத் திறக்கவும் கதவு நிவேதாவின் நெற்றி மற்றும் மூக்குப் பிரதேசங்களைப் பதம் பார்த்தது.

"ம்ம்மா ...ஆ..... " மூக்கையும் நெற்றியையும் ஒரு கையால் தடவிக் கொண்டே உள்ளே நுழைந்த ப்ரீத்தியை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு விரட்ட அவள் ஓட எத்தனிக்கையில்தான் அதை கவனித்தாள் நிவேதா ப்ரீத்தி ஓடிய பாதையில் எல்லாம் இரத்த சொட்டுக்கள்.

"ஹே... ப்ரீத்தி ஓடாதே... நில்லு... அம்மா உன்ன ஒன்னும் செய்ய மாட்டேன்" கூறிக் கொண்டே ஓங்கிய கையை கீழே இறக்கினாள். அடிக்க வந்த அம்மா இப்படிக் கூறவும் ஓட்டத்தை நிறுத்தி படுக்கை அறை வாசலில் நின்றாள் ப்ரீத்தி. நின்றவளின் தோள் பட்டையில் கைகளை பதித்து அவளை சற்று திருப்பவும் அவளது பின்புறத்தில், ஆங்காங்கே சிவப்பு சிவப்பாய் இரத்தக் கறைகள். வெண்மை நிற பள்ளி சீருடையில் பளீரென்று தெரிந்த இரத்தக் கறைகள் அவளது சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்தியது. அந்த ஹாலின் ஒரு மூலையில் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு, “எங்கயும் போகாம இங்கயே ஒரு எடமா உட்கார்ந்துகிட்டு இரு” கூறிவிட்டு அவளுக்கு அப்போதைய சங்கடங்களுக்கு விளக்கம் அளித்து தேவையானதை செய்தாள் நிவேதா.

ஒரு வாரம் ப்ரீத்தி பள்ளிக்கு செல்லவில்லை. அவள் பூப்படைந்ததை முன்னிட்டு அவளுக்கு தடபுடலான கவனிப்பு. புட்டு, ஸ்வீட் பூ பழம் என்று அத்தை மாமன் உறவுகள் வருகை தந்து அவளுக்கு தனி கவனிப்புதான். இந்த ஒரு வாரத்தில் அவள் முகத்தில் மெருகேறி ஒரு சுற்று பெருத்துவிட்டிருந்தாள் ப்ரீத்தி.

"குழந்தைக்கு என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. சுத்தி போடுங்க அண்ணி". என்று கூறியபடியே ப்ரீத்தியின் கன்னங்களை இரு கைகளினாலும் வருடி கைகளில் திருஷ்டி முறித்தாள் அவள் அத்தை காயத்திரி.

"அழகு... அழகு... என் மருமகள் கொள்ளை.. அழகு..... ப்ரீத்திய என் பிள்ளைக்குத்தான் தரனும். "

அதெல்லாம் முடியாது என் தம்பிக்குத்தான் என் மகள் என்று கூற நினைத்த நிவேதா சொல்ல வந்ததை அப்படியே விழுங்கினாள்.

“அதற்கென்ன தந்துட்டா போகுது. மனதில் ஒன்று இருக்க வாயில் ஒன்று வந்தது.”

தன் மகள் மேல் கொள்ளைப் ப்ரியம் கொண்ட ராஜேஷ் அந்த மாதத்திலேயே நல்ல நாளொன்றில் மஞ்சள் நீராட்டு விழாவினை தடபுடலாக நடத்தி முடித்தார். அவரவர்களுக்கு ஆயிரம் வேலைகள். எந்த ஒரு நிகழ்வுகள் என்றாலும் முடிந்தவுடன் உறவுகள் கூடி கலந்திருப்பது என்கிற நிலை மாறிவிட்டது. உடனுக்குடன் விடை பெறுதல்கள். இப்படித்தான், உறவினர்கள் புடை சூழ இருந்த அந்த வீடு இந்த விழாவிற்குப் பின் ஆளரவம் அற்றுப் போனது. ராஜேஷ், நிவேதா, ப்ரீத்தி மற்றும் அந்த வீட்டிற்கு காலை வேளைகளில் வந்து செல்லும் அந்த வேலைக்காரி என்கிற பழைய நிலைக்கு வந்துவிட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆயிற்று ப்ரீத்தி வயதுக்கு வந்து நான்கு மாதங்கள் கடந்து கொண்டிருந்தது. பூப்படைந்ததற்கு பிற்பாடு அவளுக்கு மாத விடாய் இதுவரை வரவே இல்லை. இது பற்றி சுற்றி தன் உறவுக்காரர்களிடமும் தோழியிடமும் கேட்ட போது "ப்ரீத்திக்கு 12 வயது தானே ஆவுது. ஒரு சில குழந்தைகளுக்கு ஒரு வருடம் கழித்து கூட மறுபடியும் பீரியட்ஸ் ஆகும். அதுக்கெல்லாம் கவலைப் படாதே. நல்ல ஊட்டச் சத்து உணவா தெனமும் குடு ரெகுலர் ஆகிடும்" என்று எல்லோரும் கூறியபோது ஆறுதல் அடைந்தாள் நிவேதா.

அன்று திங்கட்கிழமை அவசர அவசரமாக ப்ரீத்தி பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். "அம்மா இன்னிக்கு "லன்ச்" இட்டிலியே வெச்சிடும்மா. மேக்ஸ் டெஸ்ட் இருக்கு சீக்கிரமா போய் அனிதாகிட்ட டவுட் க்ளியர் பண்ணிக்கணும்”. அவசர அவசரமாக அந்த வெள்ளை ஷூவினுள் முயல் பாதங்களை திணித்துக் கொண்டிருந்தாள். அப்படி குனிந்து ஷூ போடும்போதே அவளுக்கு தலையை சுற்றியது போன்ற உணர்வு. சோபாவில் வந்து சாய்த்து கொண்டாள். நெற்றியில் பொட்டு பொட்டாக வியர்வை துளிர்விட ஆரம்பித்தது. கண்களில் லேசாக இருள் வந்து விலக டெஸ்டின் நினைவு வரவே சுதாரித்துக் கொண்டு எழுந்தாள்.

"ப்ரீத்தி குட்டி சீக்கிரமா வாடா...." வெளியில் பைக் உறுமும் குரலோடு அப்பாவின் குரலும் சேர்ந்து ஒலித்தது.

அம்மா கொடுத்த டிபன் பாக்சை புத்தக பையில் உள்ள ஒரு ஜிப்பை திறந்து அதில் அவசரமாக திணித்துவிட்டு முதுகில் ஏற்றிக்கொண்டாள். தோள் பட்டையை இப்படியும் அப்படியுமாக அசைத்தபோது கச்சிதமாக அந்த புத்தகப் பை அவள் முதுகில் பொருந்திக் கொண்டது.

"மம்மி பாய்.. பாய்.." என்று கை அசைத்துக் கொண்டே வெளியேறினாள்

கணவனை அலுவலகத்திற்கு வழியனுப்பிவிட்டு சமையல் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தவளை அலைபேசி தொடர்ந்து அழைத்தது.
சமையல் அறையை விட்டு வெளியேறி அவசர அவசரமாக வந்து டேபிளில் வைத்திருந்த அலைபேசியை எடுத்தபோதே தெரிந்துவிட்டது அது ப்ரீத்தியின் பள்ளியில் இருந்து அவளது வகுப்பு ஆசிரியை அழைப்பு என்று.

"ப்ரீத்திக்கு வாந்தி மயக்கமா இருக்கு. காலைல என்ன சாப்பிட்டா. ஆயில் ஐடெம் ஏதாவது சாப்டாளா??? எதிர் முனையில் அவள் பள்ளி ஆசிரியையின் வினவல்.

இல்லியே. ரெண்டே ரெண்டு இட்டிலி தானே சாப்டா. என்ன ஆச்சு... இப்ப எப்படி இருக்கா...?? பதட்டத்தில் இதயத் துடிப்பு கொஞ்சம் அதிகரித்தது.

"வந்து அழைத்து செல்லுங்கள். ஓய்வு எடுக்கட்டும் அவள்".

எதிர்முனையின் கட்டளைக்குப் பணிந்தாள். ஆட்டோ பிடித்து பள்ளிக்குச் சென்றபோது மணி பதினொன்றை கடந்து விட்டிருந்தது. பள்ளியில் ப்ரீத்தியை சோர்வுடன் கண்டவுடன் பதட்டத்தால் வயிற்றில் ஒரு பிரட்டல்... என்ன ஆயிற்று என் குழந்தைக்கு... மனம் வினவ விழிகளில் நீர் கோர்த்துக் கொண்டது. அவளை வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் அலைபேசி மூலமாக அருகாமையில் உள்ள மருத்துவ மனையில் தன் மகள் பெயரை கூறி சிகிச்சைக்காக அப்பாயின்மென்ட் பெற்றுக் கொண்டாள். மாலை 4 மணிக்கு வரக் கூறி இருந்தார்கள்.

துரு.. துருவென்று வீட்டை எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் ப்ரீத்தி கட்டிலில் சுருண்டுகொண்டிருந்தாள் . "அவள் தலையை வருடியபடி என்ன ஆச்சு என் செல்லத்துக்கு... என்னம்மா பண்ணுது..." அன்பான தாயின் தவிப்புடன் வினவினாள் நிவேதா. மூன்று முறை வாந்தி எடுத்ததில் சோர்வுற்றிருந்தாள் ப்ரீத்தி. ஏதோ கூற வாய் திறந்தவளை “சரி செல்லம் தூங்கு. ஈவினிங் ஹாஸ்பிடல் போலாம்” என்று கூறிவிட்டு கணவனுக்கு அலை பேசியின் மூலம் தகவல் தெரிவித்த போதே அலறினான் ராஜேஷ். என் குட்டிக்கு என்ன ஆச்சு... என்ன ஆச்சு... பதறிப் போனான். அலை பேசியில் கணவனின் பதட்டம் நிவேதாவையும் தொற்றிக் கொண்டது.

அடுத்த அரைமணி நேரத்தில் ராஜேஷ் வீட்டில் இருந்தான். துள்ளித்திரிந்த மான் குட்டி சுருண்டு கிடப்பது கண்டு பதை பதைத்தான்.
சரியாக 3.30 மணி அளவில் ராஜேஷ், நிவேதா மற்றும் ப்ரீத்தி மூவரும் கிளம்பி குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாகவே மருத்துவமனை சென்றுவிட்டிருந்தார்கள்.

மருத்துவ பரிசோதனையின் போது அந்த டாக்டர் கூறிய செய்தி கணவன் மனைவி இருவர் தலையிலும் இடியாய் இறங்கியது.

"ப்ரீத்தி கன்சீவ் ஆகி இருக்கா. த்ரீ டு போர் மன்த்ஸ் இருக்கும். இவ்வளோ சின்னப் பெண் எப்படி இப்படி...." டாக்டர் கேட்டவுடன்தான் தாமதம்

"ஐயோ எந்த படுபாவி எங்க கொழந்தைய இப்படி நாசம் செஞ்சானோ. கடவுளே... " முகத்தில் அறைந்து கொண்டு நிவேதா அழுத அழுகை அந்த அறையெங்கும் எதிரொலித்தது. மயங்கி சாய இருந்தவளை ராஜேஷ் தாங்கிக் கொண்டான். அவனது நெஞ்சத் துடிப்பு அளவுக்கு மீறி வேகத்தை கூட்டியது.

நிவேதாவின் அழுகையொலி வெளியில் நின்றுகொண்டிருந்த சிலரை அந்த அறைக்குள் எட்டிப் பார்க்க வைத்தது.
சரிந்திருந்த நிவேதாவிற்கு முகத்தில் நீரைத் தெளிக்க மயக்கதிலிருந்து விடுபட்டவள் மேலும் அழ ஆரம்பித்துவிட்டாள்.

"நிவி சத்தம் போடாதே. இது நம்ம கொழந்தையோட வாழ்க்கைப் பிரச்சினை. கொஞ்சம் அமைதியாய் இரு..."
“எப்படிங்க நிம்மதியா இருக்கறது. ஐயோ... “தலையிலடித்துக் கொண்டாள்.

டேப்லெட் குடுத்து கலைக்க முடியாதா டாக்டர்... மெலிதான குரலில் வினவினான் ராஜேஷ்.

நோ.. மிஸ்டர் ராஜேஷ். தர்ட்டி டேஸ் குள்ள இருந்தா பாசிபிள். அதெர்வைஸ் அபார்ட்தான் பண்ணனும். சின்ன பொன்னா இருக்கறதால அபார்ட் பண்றதும் உங்க கொழந்தையோட உயிருக்கு ஆபத்துதான்."

டாக்டர் சொன்னதுதான் தாமதம். அடக்கி வைத்திருந்த கண்ணீர் விம்மலுடன் தாரை தாரையாய் வழிந்தது ராஜேஷ் கண்களில். நிவேதா புடவைத் தலைப்பை வாயில் திணித்துக் கொண்டு சத்தம் வெளியே வராதவாறு கதறினாள்.

ப்ரீத்தி நடப்பது புரிந்தும் புரியாமலும் அவளும் அழத் துவங்கியிருந்தாள்.

“உங்கள் அனுமதிக் கடிதத்துடன் வேண்டுமானால் நாங்கள் இந்த மருத்துவ மனையிலேயே நாளை வேண்டுமானால் ஸ்பெஷல் டாக்டரை வரவழைத்து உங்களுக்காக உங்கள் மகளுக்கு அபார்ஷன் செய்கிறோம். ஆனால் நிறைய செலவாகும்.”

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர். எங்கள் குழந்தை எங்கள் குழந்தையாகவே இருக்க வேண்டும். இது எப்படி நடந்திச்சின்னு தெரியல. நீங்கள்தான் எங்கள் குழந்தையை இந்த சிக்கலில் இருந்து மீட்டுத் தரனும்.....” டாக்டரின் கைகளைப் பிடித்து கண்ணீர் சிந்தினான் ராஜேஷ்.

அவனுக்கு இந்த உலகமே இருண்டுவிட்டது போன்ற பிரம்மை. இந்த கொடுமையை செய்த பாவி மட்டும் என் கையில் சிக்கினான் அவன் உயிரை எடுக்காமல் விடமாட்டேன். ராஜேஷின் மனம் சூளுரைத்துக் கொண்டது.

@@@@@@@@@@@@@

மறுநாள் நடந்த அபார்ஷனில் அதிக இரத்தப் போக்கில் ப்ரீத்தி இறந்தே போனாள். எதனால் இந்த மரணம் நேர்ந்தது என்று இருவரும் வெளியில் எவருக்கும் தெரிவிக்க வில்லை. கொடுமையான வயிற்று வலி. ஆபேரஷன் செய்தோம். இறந்து விட்டாள் என்று கூறிக் கொண்டிருந்த அதே சமயம்...


நிவேதாவின் தோழி கல்பனாவின் வீட்டில்...

கிரிதரன் என்கிற கிரி சிகரெட்டை இடைவிடாது புகைத்து கொண்டிருக்க அந்த அரை முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

"டேய் கிரி அன்னிக்கி அந்த பொண்ண என்னடா செஞ்சே... சொல்லுடா.. சொல்லுடா..." கிரியை உலுக்கிக் கொண்டிருந்தான் அவனுடைய நண்பன் பிரகாஷ்.

"நான் ஒன்னும் செய்யலடா..." அவன் வாயிலிருந்து மதுவின் கெட்ட வாடை சிகெரெட் வாடையுடன் சேர்ந்து வீசிக் கொண்டிருந்தது.

"பொய் சொல்லாதடா... இந்த பாவமெல்லாம் உன்ன சும்மா விடாது. உங்கள நம்பிதானடா அந்த சின்னப் பொண்ண ஒரு நாளைக்கு பாத்துக்க சொல்லி வெளியூர்ல "டெத்னு" விட்டுட்டு போனாங்க. அதுக்குள்ளே இப்படி ஒரு காரியத்தப் பண்ணிட்டியேடா.. “ச்சீ….. நீயெல்லாம் ஒரு பிரண்டுன்னு பேசிக்கிட்டு இருக்கேனே... ..நீ நாசமா போவடா.. நீ நாசமா போவடா... நீ உருப்படவே மாட்டே..."

"என்னடா... சாபம் விடுறியா... நீ உன் மனைவிக்கு செஞ்ச துரோகத்த உன் மாமியார் கிட்டயும் உன் பொண்டாட்டி கிட்டயும் சொல்லனுமா??

இப்படி கிரி கேட்டவுடன் பிரகாஷ் வாயடைத்துப் போனான். நான் தெரியாம செஞ்ச தப்புடா அது. அதுவும் உன்னாலதான். இனி இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டேன். வரவே மாட்டேன்... நீ என் பிரண்டே இல்லடா. நீ செத்துப் போயிட்டே... நீ செத்துப் போயிட்டே..." புலம்பிக் கொண்டே பிரகாஷ் வெளியேறினான்.

@@@@@@@@@@@

காய்கறி வாங்க வெளியில் சென்ற கல்பனா பர்சில் பணம் எடுத்து வைக்க மறந்துவிட்டிருந்தாள். பணம் எடுக்க திரும்பி வந்தவளின் செவிகளில் மனிதாபிமானமற்றவர்களின் சம்பாஷனை நிறுத்தியது. மறைவிடத்தில் நின்று பிரகாசும் தன் கணவனும் பேசுவதை கேட்டவள் அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் பிடித்தது.

கல்பனாவிற்கு உதிரம் கொதித்தது. அப்படியே அந்த வெறி பிடித்த மிருகத்தை கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது. இவனை உயிருடன் விடக் கூடாது.. விடவே கூடாது... மனதில் கருவிக் கொண்டாள். இப்போது தனது எதிர்ப்பினை தெரிவித்தால் நிலைமை மோசமாகலாம். வந்த கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.

இத்தனை நாள் எவ்வளவு நல்ல மனுஷனாட்டம் வேஷம் போட்டிருக்கான் இவன். பிள்ளை இல்லாத குறைக்கு இவன் மேல் உருகி உருகி அன்பை பொழிந்தோமே... ச்சே.... தன்னையே நொந்து கொண்டாள். ஒன்றும் தெரியாதவள் போல் பூஜை அறைக்குள் நுழைந்து பதறி கண்ணீர் வடித்தாள். படுபாவி சின்னக் குழந்தைய கொன்னுட்டானே. பாவி... பாவி... குலுங்கி அழுதாள்.

ஆன்டி.. ஆன்டி.. என்று எப்படி பாசமாய் சுற்றி வந்தாள் அந்த குழந்தை. ப்ரீத்தி வந்த அன்று இவனும்தானே அந்த குழந்தையை பாசமாக கவனித்தான். அன்று இரவு உறங்கப் போகும் முன்பு கூட இருவருக்கும் அவன்தானே பால் கொண்டு வந்து பாசமாகக் குடிக்கக் கொடுத்தான். எப்போது இது நடந்தது... ?? இந்த கேள்விக்கு சட்டென்று பதில் கிடைத்தது.

கொலைகாரா... அந்த பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துட்டியா?? அதான் அன்னிக்கு அடித்து போட்டது போல் தூங்கினேனா?? ஐயோ... உன்ன நம்பி ஏமாந்து போனேனே... ஒரு குழந்தையோட உயிர் அநியாயமா போச்சே.. அந்த குழந்த தாங்கி தாங்கி நடந்தப்ப கூட கேட்டேனே. ஏம்மா இப்படி நடக்கறேன்னு. கூச்சப்பட்டுக்கிட்டு சொன்னாளே. ஆன்டி உச்சா போற எடம் வலிக்குது ஆன்டின்னு. இப்பதானே தெரியுது.

"ஐயோ... ஐயோ.. உதடுகள் கதற மனது துடித்துக் கொண்டிருந்தது கல்பனாவிற்கு.

கிரி நடந்து வரும் ஓசை கேட்கவே. கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவன் அந்த பூஜை அறையைக் கடந்து ஹாலுக்கு நடந்து கொண்டிருந்தான். கல்பனா அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேகமாக நடந்து பாத் ரூமில் நுழைத்து தாளிட்டுக் கொண்டாள். நிறைய நேரம் அழுதாள். குழாயைத் திறந்து கொட்டுகின்ற நீரை வாரி முகத்தில் அடித்துக் கொண்டாள். அதையும் மீறி கண்ணீர் உஷ்ணமாக வெளியேறிக்கொண்டிருந்தது.
இரவு எப்போது வரும் என்று காத்திருந்தவள், கணவனை அன்பாக சாப்பிட அழைத்தாள். உங்களுக்குப் பிடித்தமான கோழிக் குழம்பு வைத்திருக்கிறேன். மதியம் கூட சாப்பிடவில்லை. வாங்க சாப்பிடலாம். பாசமாக அழைத்தாள்.

"இல்லை எனக்கு பசிக்கவில்லை. நீ சாப்பிடு..." சொன்னவனின் முகத்தில் ஒரு பயம் இருந்ததை அவளால் உணர முடிந்தது. இவன் மனிதனே இல்லை. குழந்தையை வேட்டையாடி கொன்ற இராட்சஷன். மனதிற்குள் கறுவினாள்.

இப்பிடி சாப்பிடாம இருந்தா அல்சர்தான் வரும். வாங்க கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க. அவள் அன்பாக அழைக்கவும் சாப்பிட அமர்ந்துவிட்டான். அவளே அவனுக்கு ஊட்டி விடவும் அவன் கொஞ்சம் உற்சாகமானான். உன் கையால் ஊட்டி விட்டால் இன்னும் கூட சாப்பிடலாம். என்று கேட்டு கேட்டு சாப்பிட்டான்.

அவனுக்கு ஊட்டிக் கொண்டே தானும் சாப்பிட்டாள். அவளது கண்ணிலிருந்து கண்ணீர் வடியவும் “ஹேய். . என்ன இப்பிடி அழறே..?

“இப்டி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுதில்லே. உங்களுக்கு நான் .குழந்தை எனக்கு நீங்கள் குழந்தை நீங்கதானே இப்படி சொல்வீங்க. அது இப்ப ஞாபகம் வந்திடிச்சி." சாப்பிட்டுக் கொண்டே பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். இதுதான் அவர்களின் கடைசி பேச்சு என்பதை அவள் அறிந்திருந்தாள். அவன் அறிந்திருக்கவில்லை. .உண்டு முடித்திருந்த தருணம் இருவரின் உயிரையும் உணவில் கலந்திருந்த அந்த கொடிய விடம் உயிரை தின்று கொண்டிருந்தது.

தமது ஒரே செல்ல மகளை அடுத்தவரை நம்பி ஒப்படைத்ததால் தான் இழக்க நேரிட்டது என்கிற காரணம் அறியாமல் இரண்டு இதயங்கள் இன்னமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. .

--- நிறைவு பெற்றது ---

எழுதியவர் : சொ.சாந்தி (9-Aug-15, 11:35 am)
பார்வை : 495

மேலே