மைக்கேள் மதன காமராஜன் - ஒரு தமாஸ் திகில் கதை
மதியம் மணி 2, சைதாப்பேட்டை குப்பையா தெருவில் இருந்த ஜமதக்னி அபார்ட்மெண்ட்டில் இரண்டாவது ப்ளோரில் வசிக்கும் கம்பௌண்டேர் மைக்கேல் கவலைக்கு தீர்வு கிடைத்த மகிழ்சியில் இருந்தார்.ஆம் அவருடைய மனைவியின் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வாக Imported medicine ஒன்றை தன் கப்போர்ட்டில் வைத்து இருப்பதாக டாக்டர் அறிவுடை நம்பி போனில் சொன்னது தான் அவரின் மகிழ்ச்சிக்க்கு காரணம்.
அதே நாள் மதியம் 2 மணி, சென்னை லயோலா கல்லூரியின் முதலாமாண்டு மாணவன் மதன் இறுதியாண்டு மாணவர்களிடம், ஆம்வே ஏஜென்ட்டிடம் சிக்கிய பக்கத்து வீட்டுக்காரன் போல்,செய்வதறியாது முழித்தான். இறுதியாண்டு காமேஷ் ஒரு சாடிஸ்ட்.முதலாண்டு மாணவர்களை அவன் செய்யும் ராகிங் சக நண்பர்களுக்கு கூட வெறுப்பாக இருக்கும்.அன்று மதன் படும் அவஸ்தையை,பார்த்து காமேஷின் கிளாஸ்மேட் பரிதாபப்பட்டான்.
“டேய் போதும்டா பாவமா இருக்குடா”
உடனே காமேஷ் “ நம்மள யாராவது பாவம் பார்த்தானுகளா? முத வருஷம் நம்ம டிரௌசர கழுட்டல?
“சரி நீ சொல்றேன்னு விடறேன்”. என்றவன், மதனை பார்த்து “ டேய் இனிமே நான் உன்ன தொந்தரவு பண்ண கூடாதுனா ஒண்னு செய்யணும்.ஊருக்கு வெளிய செம்பரம்பாக்கம் ஏரி தெரியுமில்ல? அங்க ஏரிக்கு வட மூலைல ரெண்டு பெரிய புளிய மரம் இருக்கும்.மரத்துக்கு நடுவில கொஞ்ச தூரம் போனா, ஒரு ஓலை வீடு இருக்கும்.அங்க போய் நின்னு மாப்பிள்ளைக்கு ஏதாவது கிடைக்குமான்னு சத்தமா கத்தனும். கொண்டை போட்டு ஒருத்தன் வருவான். அவன் தர்றத வாங்கிட்டு வரணும் அவ்வளவுதான். செய்யல மவனே தினமும் என்கிட்ட மாட்டி நீ சாவனும்” என்று பயமுறுத்தினான் காமேஷ்.
சரி என்று தலையாட்டி தப்பித்தால் போதும் என்று வேகமாக கிளம்பினான் மதன். “டேய் அந்த மந்திரவாதி மாதிரி இருப்பான்ல முனி, அவன்கிட்டயா இவன அனுப்பற? அதுவும் code word சொல்லாம?
உதை பட்டே செத்துருவாண்டா? அதுக்கு நீயே பரவால்ல”. நிஜமாகவே பயப்பட்டான் காமேஷின் கிளாஸ்மேட்.
“சாகட்டும் பாவம் நமக்கில்ல, முனிக்குதான். பய புள்ள திரும்பி வந்தா அனுபவத்தை கேப்போம். பேய் படம் பார்த்தமாதிரி இருக்கும். குரூரமாக சிரித்தான் காமேஷ்
காமேஷ் சொன்ன இடத்தை அடைத்தான் மதன். மாப்பிள்ளைக்கு ஏதாவது கிடைக்குமா? சத்தமாக கத்தினான்.கொண்டை முடியுடன் கருப்பா ரெண்டு பேர் அங்கு வந்தனர். “என்ன வேணும்” என்றான் முனி.
“ஏதாவது கொடு” என்றான் மதன்
“பேர சொல்லு தர்றேன்” அதட்டினான் முனி
மயி..... என்று கோபத்தில் திட்ட வார்த்தையை ஆரம்பித்து ...று... என்ற எழுத்தை சொல்லாமல் நிறுத்திக்கொண்டான்.
“இன்னொரு வார்த்தை பாக்கி, அதயும் சொன்னா தான் தருவேன்” என்று மீசையை முறுக்கினான் முனி.
“தா, அப்புறம் சொல்றேன்” என்றான் மதன்.
“கரெக்ட் பொருள் பேர சரியா சொல்லிட்டான். கொடுத்திடு” என்றான் முனியின் அருகில் நின்றவன்
“எங்க சரியா சொன்னான்? முனி கேள்வி கேட்டான் அருகில் இருந்தவனிடம்.
“முதல் வார்த்தை ‘மை’ ரெண்டாவது வார்த்தை “தா”
“மைதா” பொருள் பேர சரியாதான் சொல்லி இருக்கான். சீக்கிரம் கொடு” என்று முனியிடம் இருந்து பிடுங்கி மதனின் கைகளில் திணித்தான் அந்த நீல நிற திரவம் அடங்கிய குப்பியை. அதில் எலும்பு கூட்டுடன் தலைவிரி கோலத்தில் பெண் ஒருத்தி சிரித்து கொண்டு இருப்பது போல படம் அச்சிடப்பட்டு இருந்தது. அதன் கீழ் “MAIDA” என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. காசு கேட்ட முனியிடம், பர்சிலிருந்து பணம் எடுப்பது போல் பாவ்லா காட்டி, திரும்பி வேகமாக ஓடினான் மதன். அவனை துரத்திக்கொண்டு பின்னாடி ஓடினர் இருவரும் சட்டேன பைக்கை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டினான் மதன்.ஓடி வந்த ரெண்டு பெரும் களைத்துப்போய் திரும்பினர்.
மைன்ரோடுக்கு வந்தும் கூட மதன் வேகத்தை குறைக்கவில்லை. பயத்தில் மிக வேகமாக வந்ததால் சிக்னலை கவனிக்கவில்லை .நேரப்போகும் விபத்தை உணர்த்துவது போல் சிகப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மதன் குறுக்கே வந்த கார் மீது மோதி கீழே விழுந்தான். ரத்தம் சிதறியது. நல்லவேளை தலையில் அடிபடவில்லை.காலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள். இத்தனை நடந்தும் அவன் பாக்கெட்டில் இருந்த MAIDA சிறிதும் சேதாரம் இன்றி எலும்புக்கூடு பெண் சிரித்துக் கொண்டு இருந்தாள். 108 ஆம்புலன்ஸ் அவனை ஏற்றிக்கொண்டு 108 சிக்னல் கடந்து மருத்துவமனையை அடைந்தது.
அவசரபிரிவில் மதன் சேர்க்கப்பட்டான். அவனுடைய உடைமைகளை பத்திரமாக தன்னுடைய கப்போர்ட்டில் வைக்கும்படி நர்சிடம் சொன்னார் டாக்டர் அறிவுடை நம்பி. அவனடைய வாட்ச், பர்சு மற்றும் MAIDA வை நர்ஸ் டாக்டர் சொன்ன கப்போர்ட்டில் வைத்தாள். சிகிச்சையையும், டூட்டியையும் முடித்துக்கொண்டு டாக்டர் அறிவுடை நம்பி இரவே வீட்டிற்கு கிளம்பினார்(imported medicine ஐ கப்போர்ட்டில் வைக்க மறந்தார்).மதன் மயக்கத்தில் இருந்து விழிக்கவே இல்லை.அப்போது கம்பௌண்டர் மைக்கேல் மருத்துவமனைக்கு இரவு பணிக்கு வந்து சேர்த்தார்.
டாக்டர் அறிவுடை நம்பி ஏற்கனவே போனில் சொன்னது போல் கப்போர்ட்டை தேடி பார்த்தார். அதில் இருந்த MAIDA வை டாக்டர் சொன்ன மருந்தென தவறாக நினைத்து மறுநாள் காலை வீட்டிற்கு அதை எடுத்துச்சென்றார், நிகழபோகும் விபரீதத்தை உணராமல். அதை மனைவிடம் கொடுத்து “வலிக்கிற இடத்தில் இதை நல்லா தேய்ச்சுகிட்டா, வலி பறந்துரும். அப்புறம் வலிய நீ உணரவே மாட்ட” என்றான் மைக்கேல். “தேங்க்ஸ் டியர்” என்று சொன்னவள் அதை ஜீசஸ் படத்தின் முன் வைத்தாள். அதை கவனித்து கொண்டிருந்த அவர்களின் ஐந்து வயது மகள் மெர்சி என்ன நினைத்தாளோ! ஓடி வந்து அந்த மைதாவை எடுத்து கொண்டு ஓடினாள்.
சோப்பு நீர் திரவத்தை ஸ்ட்ராவில் உறிஞ்சி ஊதினால் குமிழ் குமிழாக (air Bubbles ) காற்றில் பறக்குமே, அதுவென்று நினைத்து, விளையாடுவதற்காக ஓடினாள். படிகளில் ஓடி வரும் போது கால் தடுமாறி கீழே விழுந்து அழுதவளை அவள் அம்மா வந்து தூக்கி கொண்டு போனாள். கால் தவறிய மெர்சிக்கோ, கை தவறி விழுந்த MAIDA வுக்கோ சேதாரம் எதுவும் இல்லை. மாடிப்படியின் ஓரத்தில் MAIDA கீழே கிடந்தது.சில மணி நேரத்துக்கு பின் முதல் Floor இல் வசிக்கும் +2 மாணவியின் கண்ணில் பட்டது அந்த மைதா. அதை எடுத்து தன் வீட்டில் கொண்டு போய் வைத்தாள். யாராவது வந்து கேட்டால் கொடுக்க. அவள் வேறுயாருமில்லை, அந்த MAIDA வை முனியிடமிருந்து வாங்கி வர சொன்ன சாடிஸ்ட் காமேசின் தங்கைதான் அவள். அப்போது வெளியே போய் இருந்த காமேஷ் வீட்டிற்கு வந்தான். டேபிள் மேலிருந்த MAIDA வை பர்ர்த்து அலறினான்.
“இது எப்படி...டி.. இங்க வந்துச்சு. யாரு கொண்டு வந்தது”. அவன் தங்கையோ “ஏன் இப்படி அலர்ற, இது என்ன பேயா? பூதமா ? என்றாள்.
“அது கூட பரவாயில்ல, இது அத விட மோசம்.இது வீட்ல இருந்தா குடும்பமே நாசமாயிறும்”என்று பதறினான் காமேஷ். அதை எடுத்து வீதியில் வீசி எறிந்தான். மேலிருந்து கீழே விழுந்த MAIDA அந்த வழியாக மொபெட்டில் சென்றுகொண்டிருந்த அண்ணாச்சி கடையின் டெலிவரி பாய் கூடையில் போய் விழுந்தது.
டெலிவரி பாய் சரக்குகளை Sub Inspector ராஜாதிராஜன் வீட்டில் போய் சேர்த்தான். சரக்குகளை S.I யின் மனைவி வீரலட்சுமி சரிபார்த்து எடுத்து வைத்தாள். லிஸ்டில் இல்லாத MAIDA வை எடுத்து “இது என்னப்பா?” என்றாள். “தெரியலீங்க கடைல கொடுத்தத அப்படியே டெலிவரி பண்றேன்” என்றான். “இப்பல்லாம் மைதாவை Liquid ல கொடுக்க ஆரம்பிசிட்டாங்களா?” இல்லை Anne French cream ஆ இருக்குமோ? வித்தியாசமாக யோசித்தாள் வீரலட்சுமி.
சரி அவரு வரட்டும், அவர்கிட்டயே கேட்டிடுவோம், என்று எடுத்து fridge இல் வைத்தாள். டூட்டி முடிந்து வீடு திரும்பிய சப் இன்ஸ்பெக்டர் சரக்கடிக்கும் மூடில் fridge ஐ திறந்தார். உள்ளே இருந்த நீல நிற குப்பி மைதாவை பார்த்ததும் S.I க்கு தூக்கி வாரி போட்டது. “அடியேய் வீரம் இது என்னடி கருமம்? இது எப்படி இங்கு வந்தது”.என்று கத்தினார். “என்ன கண்றாவியோ யார் கண்டா? உங்களுக்கும் தெரியாதா?” பதிலுக்கு கேள்வி கேட்டாள் வீரலட்சுமி.
“ இது ஒரு போதை பொருள்டீ பெத்தடின் மாதிரி உடம்பில ஊசி மூலமா போதை ஏத்திர திரவம். இந்த போதை கும்பல சீக்கிரம் கண்டுபிடிக்க சொல்லி எனக்கு மேலிடத்திலிருந்து பயங்கர பிரஷர். சொல்லி முடிக்கும்முன் S.I க்கு 200 ஐ தாண்டியது பிரஷர். டெலிவரி பாயிடம் விசாரித்ததில் “சார் ஜமதக்னி அப்பார்ட்மெண்ட் கிட்ட வரும்போது ஏதோ ஒரு பொருள் பையில் வந்து விழுந்தது மாதிரி சத்தம் கேட்டுச்சு” என்றான். அடுத்த சில நிமிடங்களில் S.I யும் , ஏட்டும் மப்டியில் அந்த ஜமதக்னியில் நுழைத்தனர்.
ப்ளாட்டில் உள்ள மொத்த பேரும் கீழ் தளத்தில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
S.I பேசினார் “ இங்க பாருங்க இது ஒரு போதை பொருள், இங்க இருக்கிற யாரோ ஒருத்தரு இத யூஸ் பண்றீங்க, நீங்களே ஒத்துகிட்டா, தெரியாமல் செஞ்ச தப்புக்கு மன்னிச்சு விட்டுடுவோம். இல்ல நாங்களே கண்டுபிடிச்சோம்னா, ஆயுள்ள பாதி ஜெயில்லயே போயிரும்” என்று பயமுருத்தினார். காமேஷ்க்கு போலீசிடம் உண்மையை சொன்னால் காலேஜ்ஜில் சீட்டு கிழிஞ்சுரும் என்று பயம். வாயை திறக்கவில்லை. மைக்கேலோ பயங்கர கடுப்பில் இருந்தார். “நாசமா போன டாக்டரு, என் பொண்டாட்டிக்கு மூட்டு வலி நிக்க மருத்து கேட்டா, மூச்சு நிக்க மருந்து கொடுத்திட்டானே படுபாவி” என்று மனதிற்குள் புலம்பினார். மைக்கேலின் மனைவியோ உண்மையை சொன்னால், டாக்டர ஜெயிலுக்கும், நம்ம புருசன வேலைய விட்டு வீட்டுக்கும் அனுப்பிருவாங்கலே என்று பயந்தாள். அவளின் லிப்ஸ்டிக் பூசும் உதடுகளில் fevistick ஒட்டிக்கொண்டது.
அந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு காது கேட்காத ஒரு முதியவர் S.I யிடம் வந்தார். “என்ன ஓய் election க்கு ஒட்டுக்கு பணம் தராலாமே, நீங்கள்ளாம் அதுக்குதான வந்திருகேள். பாருங்கோ ஓட்டுக்கு நாலாய்ரம் தரதா பேசிக்ரா
மொத்தத்தையும் எங்கிட்ட தந்தா நன்னாருக்கும்.என் மாட்டுபொண்ணு கைக்கு போனா, மூக்குபொடி வாங்க கூட சல்லிகாசு தரமாட்டா” என்று சமயம் புரியாமல் சங்கடப்பட்டார். கடுப்பில் முறைத்த S.I ஐ பார்த்து மனதில் சபித்துக் கொண்டே நகர்ந்தார்.
மைக்கேலின் மனைவிக்கு வயிற்றில் புளிகரைத்தது. எங்கே தன் மகள் மெர்சி வந்து எல்லாத்தையும் உளறிவிடுவாளோ என்று பயம். “ கடவுளே என் குட்டிச்சாத்தான் இப்ப இங்கு வந்து தொலைக்ககூடாது, என வேண்டிகொண்டாள். வேண்டி முடிப்பதற்குள் மெர்சி “அம்மா” என்று பாசத்துடன் வந்து ஒட்டிக்கொண்டாள்.
S.I கையிலிருந்த MAIDA வை பார்த்து,
“ ஐ அந்த டப்பா இங்கதான் இருக்கா?” என்று ஓடிப்போய் S.I இடமிருந்து பறிக்க முயன்றாள்.
“பாப்பா இதுக்கு முன்ன இத பாத்திருக்கியா?” மெர்சியிடம் செல்லமாக கேட்டார் S.I.
“அங்கிள் இது என்னோடது. நான்தான் எங்கேயோ தொலைச்சுட்டேன். அத என்கிட்ட குடுங்க” என அடம் பிடித்தாள்.
“தற்றேன் இது எங்க இருந்துச்சுனு மட்டும் சொல்லு, அது போதும், என்றார் S.I.
மெர்சி, தன் அப்பாவிடம் சென்று “பாருங்கப்பா என் டப்பாவை அந்த அங்கிள் திரிடிட்டு தரமாட்டேங்கறார், நீங்களே சண்டை போட்டு வாங்கி கொடுங்க” என்று தரையில் விழுந்து புரண்டாள். S.I மைக்கேலை பார்த்தார். அவரோ தனக்கு வந்தவளும் சரியில்ல, வாய்ச்சதும் சரியில்ல என்று நொந்துபோய் முழித்தார்.
போலீஸ் விசாரணை மைக்கேல், டாக்டர் அறிவுடை நம்பி, கால் உடைந்த மதன், மனமுடைந்த காமேஷ் வரை நீண்டது. இந்த போதை பொருளுக்கு மூலமே முனிதான் என்று போலீஸ்க்கு புரிந்தது. அந்த கும்பலை பொறி வைத்து பிடிக்க தயாரானார் S.I . ராஜாதிராஜன்.
ப்ரொமோஷனுக்கு ஆசைப்பட்டு ஏட்டை மட்டும் அழைத்துக்கொண்டு செம்பரம்பாக்கம் சென்றார். “நீ அந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கோ, ரிவால்வரை ரெடியா வச்சிரு, நான் சிக்னல் கொடுத்தா உடனே வந்துரு” என்று Instruction கொடுத்தார். தனியாக துப்பாக்கி எதுவும் இன்றி தைரியமாக சென்று “ மாப்ளைக்கு ஏதாவது கிடைக்குமா?” என்று கத்தினார். அதே கொண்டை முனி இப்போது 5 பேருடன் வெளியே வந்தான்.
“என்ன வேணும்” என்றான். “மைதா வேணும்” என்றார் S.I
அதற்குள் மரத்தின் பின் ஒளிந்திருந்த ஏட்டுவின் செல்போனுக்கு அவருடைய மாப்பிள்ளை எதற்கோ போன் செய்தார். (ஏட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்ய மறந்துவிட்டார்) மரத்தின் பின்னிருந்து “சிரிச்சா சிறுக்கிமக சீனா தானா டோய்” என செல்போன் ஒலித்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த முனி தன் கொண்டையில் மறைத்திருந்த பிஸ்டலை எடுத்து S.I யின் மண்டையில் வைத்தான்.
இருவரையும் துப்பாக்கி முனையில் பிடித்து ஆம்னி வேனில் திணித்து ஆள் நடமாட்டம் இல்லா நன்மங்கலம் காப்பு காட்டுக்கு விரைந்தனர். அங்குள்ள பாழடைந்த வீட்டுக்குள் இருவரையும் தோலுரித்த சிக்கன் போல் தலைகீழாக கட்டி தொங்கவிட்டனர். இவர்களை உயிரோடு விட்டால் நாம் காலி என்று உணர்த்தனர். எப்படியும் இவர்களை மோப்பம் பிடித்து போலீஸ் இங்கு வந்துவிடும். அப்படி வரும்போது மொத்த போலீசையும் ஒழித்துகட்ட மாஸ்டர் பிளான் போட்டனர் முனி கும்பல்.
அங்கு மூட்டையில் ஒழித்துவைத்து இருந்த நாட்டு வெடிகுண்டுகளை கதவின் பின்புறம் அடுக்கி வைத்தனர். பின்பு கதவை சாத்தி வெளிப்புறம் பூட்டு போட்டனர். அதே வேனில் ஏறி தலைமறைவாகினர். போலீஸ் வந்து கதவை உடைக்கும். அப்போது கதவோரம் அடுக்கி இருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்கும். உடல் சிதறி அனைவருக்கும் சாவு உறுதி என்பதே அவர்களின் பிளான்.
அதே போல் S.I யும்,ஏட்டும் கடத்தப்பட்டது போலீஸ் துறைக்கு தெரிந்து,அவர்களை மீட்க ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த விஷயம் அவர்களின் மனைவிகளுக்கு தெரிந்தால் மிகவும் பயப்படுவர்கள் என்பதால் ரகசியமாக வைக்கபட்டது. அப்போது கூட்டத்திற்கு தலைமை வகித்த கமிஷனருக்கு வீரலட்சுமி இடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது.
“சொல்லுங்கம்மா உங்க புருஷன் வீட்டுல தான இருக்கார்? தெரியாத மாதிரி கேட்டார் கமிஷனர்.
“இல்லங்க அவரு காட்டுல தலைகீழா தொங்கிகிட்டு இருக்கார்”
“என்னம்மா சொல்றீங்க, ஏதாவது யோகாசனம் பண்றாரா?”
“அடபோங்க சாக ஆசனம் பண்ண வச்சிட்டாங்க அந்த கொலைகார கும்பல், வயித்தெரிச்சல கிளப்பாதீங்க” என்றாள் பதட்டமில்லாமல்.
“கடத்தல்காரன பிடிக்க போனவர, புடிச்சு கடத்திட்டு போயிட்டாங்க அந்த போதை கும்பல்” என்றாள்வீரலட்சுமி. கலவரமான கமிஷனர் “உங்களுக்கு இது எப்படி தெரியும்” என்றார். “எனக்கு சகலமும் தெரியும்” என்றாள் நிதானமாக.
“இப்ப அவங்க இருக்கிற இடம் தெரியுமா?” என்றார் கமிஷனர்.
“பள்ளிகரணையில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் நன்மங்கலம் காப்புகாடு இருக்கு, அந்த அடர்ந்த காட்ல ஒரு வீடு இருக்கு. அந்த வீட்ல தான் அவங்களை அடைச்சு வச்சிருக்காங்க. ஒரு முக்கியமான விஷயம் அந்த வீட்டு கதவுக்கு பின்னாடி நாட்டு வெடிகுண்டு நிறைய இருக்கு, அதனால மேல் கூரையை ஒடைச்சு உள்ள போங்க” என்றாள் வீரலட்சுமி.
“உங்கள நம்பலாமா? நீங்க சொல்றது உண்மையா? என்றார் கமிஷனர்.
“கேள்வி கேட்காம முதல்ல அவங்களை காப்பாத்தர வழிய பாருங்க” என்றாள்.
வீரலட்சுமி சொன்னது போலவே போலீஸ் S.I ராஜாதிராஜனையும்,ஏட்டையும் மீட்டு வந்தது.
வீரலட்சுமியிடம் கமிஷனர் விசாரணை செய்தார் “இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? ஏதாவது மை வச்சு இருக்கீங்களா?”
“இல்லையுங்க spy வச்சுருக்கேன்” என்றாள் வீரலட்சுமி.
“ஐயா என் புருஷன் நைட் டூட்டிக்கு போகும்போது எல்லாம் இவரு டூட்டி பாக்கிறாரா? இல்ல எவ கூடவாது லூட்டி அடிக்கிறாரா? ன்னு சந்தேகமா இருந்துச்சு. இவர எப்படி வேவு பாக்கிரதுன்னு மண்டை குழம்பி போய் இருந்த போது, எங்க மாப்பிள்ளை கனடாவில் இருந்து 2 வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு வந்தார்.
அவருகிட்ட இத சொல்லி அழுதேன். அவர்தான் பயப்படாதீங்க, நான் மாமாவுக்கு அன்பளிப்பா ஒரு வாட்ச் தர்றேன். அத அவரு கைல கட்டிக்கிட்டு இருக்கும் போது, சுத்தீலும் என்ன நடந்தாலும் வீடியோ கவர் பண்ற மாதிரி அதுல ஒரு spy camera இருக்குது. பல angle ல வீடியோ கவர் ஆகிட்டே இருக்கும். சின்ன குண்டூசி விழுந்தா கூட சத்தம் கேட்கிரமாதிரி imported recording wireless mike வேற அதல இருக்கு. இதெல்லாம் நீங்க live வா தெரிஞ்சிக்கறமாதிரி உங்க கம்ப்யூட்டரில் ஒரு சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணி தர்றேன். G.P.R.S Technology வாட்ச்ல இருகிறதால அவரு எங்க போறார், எங்க வரார்னு காய்கறி நறுக்கீட்டே நீங்க அப்டேட் பண்ணிகிட்டு இருக்கலாம். அந்த வெப்சைட்டில நீங்க மட்டுமே பாக்கிற மாதிரி பாஸ்வேடு செட் பண்ணி தரேன். மாமாவுக்கு இதெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாதுன்னு சொன்னார். அதே மாதிரி செஞ்சும் கொடுத்தார்.
எங்க மாப்பிள்ள செஞ்ச உதவினால ரெண்டு வருசமா என் புருஷன வேவு பாக்க முடிஞ்சுது. இப்ப அவரு உசிர காப்பாத்தவும் முடிஞ்சுது” என்று சொல்லி முடித்தாள்.
கமிஷனர் சொன்னார் “ஏட்டோட மாப்பிள்ளை உன் புருசனுக்கு வேட்டு வைக்க இருந்தார். உங்க மாப்பிள்ள உங்க புருஷனையும் எங்க டிபார்ட்மெண்ட் மானத்தையும் காப்பத்திட்டார். வெல்டன். சரி இப்ப உங்க புருஷன் பயத்தில் அலறிப்போய் இருக்கார், உங்க மாப்பிள்ள கிட்ட சொல்லி கனடாவிலிருந்து கம்யூட்டர் மூலமா வேப்பள அடிக்க சொல்லுங்க”
மைக்கேல்,மதன்,காமேஷ், ராஜாதிராஜனின் வீர சாகாசத்தை எண்ணி சிரிப்பதா? இல்லை தங்களின் திகிலான இந்த நாளை எண்ணி அழுவதா? என்று முழித்தனர்.