நீ…

உனது சொல்லில் உயிர் இருக்கும்
உயிரை நீ தாங்கிக் கொண்டு
உடலை மட்டும் வாங்கி வந்தேனே

மேலிமை போலே நீ!
நட்பு கூட காதல் போலத்தான்
பிரிவுகள் இங்கும் கனமானது

இதழ் பிரிந்தால் சொல் பிறக்கும்
ஆணவம் பிரிந்தால் அன்பு பிறக்கும்
என் கவிதையேடுகளில்
பிரித்துக்காட்டியவை

பிறவா வார்த்தைகள் போல் நெஞ்சில் நீ
பிரிவாய் என்பதால்
வாய் பிரியா என் வார்த்தைகள்
மவுனக் கவிதையாய்

எதார்த்தங்களை ஜீரணித்தவன்
மனதுக்குள்ளேயே மரணிக்கிறேன்
காதலிக்கு போட்டியாய் நீ
கர்வமிக்க என் இதய சிம்மாசனத்தில்

இன்பமா? ஒரு பக்க கவிதை!
துன்பமா? இன்னொரு பக்க கவிதை!
பிரிவா? போ, எல்லாம் கவிதையில்
ஆனால் கவிதையை பிரிவதெப்படி

என் கவிதை காகிதமானால்,
ஒட்டி வைத்து பிரிக்காதிருப்பேன்
காதலியானால்,
ஒட்டி நின்று பிரியாதிருப்பேன்
தோழமையில் அல்லவா நீ!

எனக்குள் நான்,
யார் யாரோ என்னில் சிரிக்க
என்னை சிறக்க வைத்தவள் நீ

வேண்டாத் தோழமை என நான்
வெறுப்புற்ற காலங்கள்
தாளாண்மையாய் என் தோழமை

கவிதையெல்லாம்
காதலிக்குத்தான் என்றிருந்த எனக்குள்
கவிதையெழுதிய நட்பு நீ

நானொரு பிம்பப்பிரதியொளி!
என்னில் சிரித்தவர்,
என்னில் அழுதவர்,
எனக்குள் சினத்தவர்,
அத்துனைபேர்க்கும் அப்படியே
இன்னும் கொஞ்சம் உருப்பெருக்கி!!

விழுந்த பிம்பமெலாம்
பிரதிபலித்து
என் சாயல் அதுவென்றும்
இதுவென்றும் எண்ணியவர் கோடி

விழுமந்தருவுன் நட்பு மட்டும்
எனக்குள் படிவமாய்

நான் நானாகவேயிருக்கிறேன்
நாடகங்களின் முடிவுகளிலும்
நான் நானாகவேயிருக்கிறேன்

நம்பிவிடு ஒன்றைமட்டும்
நான் நானாகவேயிருக்கிறேன்
நடுவழியில் பயணம் தெரிவுசெய்பவன் நான் அல்ல
பயணத்திற்காய்
வழியை சமைப்பவன்

உனக்குத் தெரிந்த
நான் நானாகவேயிருக்கிறேன்!!

அலட்சியக் காற்றுகளைக்கூட
இலட்சியப் பாதையில் வீசச் செய்பவன்
தோழமை மட்டும் மறவாதிரு

நாளைக்கும் விடியல் வரும,;
வீதிகளில் வியாபாரம் இருக்கும்,
தினசரி பதிவுகளின் எச்சங்கள்
மறுநாள் வரையும் இருக்கும்

பொறுப்புகளை தாங்கிக் கொண்டு
உன் முன் வருவேன்
தோழமை மட்டும் மறவாதிரு

கவிதையெழுத காதலித்துப் பார்த்தவன்
கவிதைக்கெல்லாம் அங்கீகாரம்
காதலி மட்டும்
தோழமையில் இந்த எதிர்பார்ப்புகள் இல்லை
தோல்வி பயங்களில் தோழமை ஒதுக்கியவன்
தேம்பியழ திராணியில்லை

தேடிவந்த நட்பு, தேநீர்குவளைகள்
இவையெல்லாம் இன்பம்தான்
பிரிவுகள் நிகழாதவரை

இடப்பக்க இதயம் மட்டும்
அடிக்கடி தொட்டுப்பார்க்கிறேன்.
எனக்கு மட்டும் எப்படி
அத்துனையும் சிறப்பாய்!

ஆயிரம் விலாசங்கள் பதித்தாலும்
உன் விலாசங்களில் மட்டும்
அடிக்கடி என் அஞ்சலேற்றம்

இதோ உன்னருகே ஒருவர்
என்னருகே ஒருத்தி
அடையாளங்கள் அறிந்ததில்லை
ஆனால் நாம் மட்டும்
என்றும் தோழமையில்

என் காதலியின்
அவசர நிலை பிரகடனங்களிலும்
உன் பிறந்தநாள் விழாக்கள்

உன்கணவருடன் சுற்றுப் பயணங்களிலும்
மறக்காத என்
இல்லம் நோக்கிய வருகை

உன்பெற்றோரை பார்த்தவிடங்களில் பேசும்
என்பெற்றோர்,

மாமாவென அழைத்தபடி ஓடி வரும்
உன் மழலைகள்

தோழமையில் உறவுகள் ஆயிரம்
உன் பரிமானங்களில் பரிணமிக்கும்
நம் நட்பு மட்டும்
என்றென்றும் தோழமையாய்

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (9-Aug-15, 5:02 pm)
பார்வை : 99

மேலே