செல்லாக் காசு
தோழியே.....
எனக்காக நீ தந்த
நாணயம் யாவையும்
நான் புழக்கத்தில்
விடவே இல்லை...
நாணயத்தை பிரிவது
ஏனோ? உன்னை
பிரிவது போலவே
தோன்றுகிறது.....
புழக்கத்தில்
விடாது.
என் பொக்கிஷமாய்
இருப்பதால்!
இது பணத்தின்
மதிப்பு அற்று
செல்லாக் காசாய்
என்னுடனேயே இருக்கலாம்...
அது வெறும்
காசு என்றால் தானே
அதன் மதிப்பு மாறச் செய்யும்
அதை காட்டிலும்
உயர்ந்ததன்றோ !
என் தோழி நீ கொடுத்த
சிறு துரும்பும்.....
பாசத்தின் தராசில்
அதற்கு நிகர் வேறு இல்லை...
எதை கொண்டுவந்தோம்.
எதை கொண்டு செல்ல...
இதை மட்டும் நானே
கொண்டுசெல்கிறேனே!
இதை என் நெற்றிக்காசாய்
வைத்து விடு ....
சுடுகாட்டில் வெட்டியான்
வெட்டி எடுக்க முயல்வான்
அவனிடம் வேண்டாம் என்று கூறிவிடு.
இதற்கு இணை என்று
எதுவும் இல்லை
என்பதை அவன் அறிகிலான்!
எனவே இதற்கு பதிலாய்
என்னவரிடமிருந்து
ஏற்றுக்கொள்ளட்டும்
ஏதேனும் ஒன்றை...
இதில் மட்டும் தலையிட
வேண்டாம் என்று கூறிவிடு.....
(என்னால் இதை அந்த நொடி எழுந்து காப்பாற்றிக் கொள்ள முடியாததால்,எனக்கு இதை காப்பாற்றி தந்து விடு தோழி..)
வெட்டியான் முடியாது
என்று கூறினால்
என் வாயின் ஊடே
இதயத்திற்கு அனுப்பி வைத்துவிடு.....
வாய் வழி செல்லவில்லை எனில்
நெஞ்சை பிளந்து இதயத்தில்
செருகிவிடு...
எனை ஒருவேளை
புதைத்தால்
ஓர் ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பின்
வரும் சந்ததியினருக்கு
என் இந்த செல்லாக் காசு
அகழ்வாராய்ச்சியின்
போது கண்டெடுக்கப்பட்ட
நட்பின் அடையாளமாக
அமையட்டும்...
எரித்தால் எரிந்து
போகாது இந்த நாணயம் மட்டும்...
ஒரு வேளை
என் இறக்கும் தருணம்
நான் அறிந்தால்
இந்த நாணயத்தை
நானே உண்டு
என் இதய சேமிப்பு
அறையில்
என் செல்வத்தை
சேர்த்த அடுத்த நொடி
என் மனம்
தோழியே
நீ எங்கிருக்கிறாய்?
என்று தேட தொடங்கும்...
என் அருகில் நீ இருந்தால்
உன் காலடியில்
விழுந்து கண் மூடுவேன்...
இல்லையேல்
உன்னை நெஞ்சில் நினைத்துக்
கொண்டே கண் மூடுவேன்...
என் கடைசி ஆசையை
நிறைவேற்றி விடுவாய் அல்லவா தோழியே...