சுதந்திரதின கவிதை வாசிப்போம்

உலகமயமாதல்
என்ற மாயச்சொல்லினுள்
இந்தியாவைத் தொலைத்துவிடாமல்...
நம் தேசத்தை
உயர்த்திப் பிடிப்போம்
உலகமயமாதலின் முதல்வனாக...!

எவன் தேசத்திற்கோ
வேலையாட்களாக இருந்து
எச்சில் இலையாகிப்போகாமல்
நம் தேசத்தின்
வேளாண்மைக்கு வேர்வைத்து
ஏனைய எல்லா தேசத்திற்கும்
எஜமானன் ஆவோம்...!

கார்ப்பரேட்டின் காலடியில்
நம் அறிவை
அடமானம் வைக்காமல்
நம் அறிவின் காலடியில்
கார்ப்பரேட்டை
அடிமை கொள்வோம்...!

தொழில் நுட்பத்திற்கு
அன்னிய முதலீடு என்றால்
ஆதரிப்போம்...
சாப்பாட்டின் உப்பிற்கெல்லாம்
அன்னிய முதலீடு என்றால்
அதனை எதிர்க்க
ஆயத்தமாவோம்...!

அச்சுறுத்தும் தீவிரவாதத்தை
வேரறுப்போம்
அணுவால்...
மீண்டும் அவை பிறக்காமல்
கருவறுப்போம்
கருணை மனதால்...!

அன்புடன்
கைநீட்டும் தேசத்துடன்
நேசத்துடன் கைகுலுக்குவோம்...
ஆணவத்தால்
கைநீட்டும் தேசத்தையெல்லாம்
நம் ஆன்ம பலத்தால்
ஒரு உலுக்கு உலுக்குவோம்...!

அரசியலும்
அரசியல் சார் இடமும்
பாரதத்தாயின் பாதம் என பணிப்போம்...!

அதிகாரமும்
அதிகாரம் சார் இடமும்
அவளின் செயல்படும்
இருகரங்களென மொழிவோம்...!

அவளின் இதயமென
நாமிருந்து
அரசியல்வாதியிலிருந்து
அதிகார வர்க்கம் வரை
நம்மை நாமே ஆட்சி செய்வோம்...!

தேசம் விட்டு, தேசம் விற்று
நாகரீகப் பரதேசிகளாக
வாழ்வதை விடுத்து....
சுதேசி என்ற
ஒற்றைச்சொல்லை
ஒவ்வொருவரும்
மூச்சுக்காற்றாய் சுவாசிப்போம்...
அப்படி சுவாசித்தலிலேயே வசிப்போம்...

வாருங்கள்;
ஒவ்வொருநாளும்
சுதந்திர தின கவிதை
வாசிப்போம்...!

எழுதியவர் : மலைமன்னன் (15-Aug-15, 1:21 am)
பார்வை : 509

மேலே