ஆபத்தான மிருகங்கள்

யானைகளும் பதிலுக்கு சவாரி செய்ய முயல்கையில்
துர்மரணங்கள் நிகழ்கின்றன.


காதலில் தோல்வியுற்ற நாய் பக்கத்தில் கட்டி வைக்க ஒரு தேவதாஸைத் தேடுகிறது கழுத்துப் பட்டையை வாயில் கவ்விக்கொண்டே.


மன்னராட்சி முடிவுக்கு வந்ததுதான் வந்தது
சிங்கங்கள் இன்று இன்னொரு துண்டு மாமிசத்துக்காக கோஷமிடுகின்றன.


அதன் மீது பழியைப் போட்டுவிட்டு மனிதன்
பாவம்! நரிகளையும் ஏமாற்றி
விட்டான்



முதுகை அழுக்காக்கிய இராமனுக்கு உதவியதையே கடைசியாய் வைத்துக்கொண்டன அணில்கள்.


காதல் கடிதங்களுக்காக இன்னும் காத்திருக்கின்றன வாட்ஸ்அப் கேள்விப்படாத புறாக்கள்


அவையும் அந்த அளவுக்கு பால் தந்திருந்தால் ஆட்டுப்பொங்கல் கூட கொண்டாடப்பட்டிருக்கும் .


கூட்டமாய் பறந்து செல்லும் காகங்களைப் பார்த்து மயில்களுக்குப் பொறாமை.


தற்கொலைக்கு முயலும் மீன்கள் தண்ணீரிலிருந்து தரையில் குதிக்கின்றன.


கண் தெரியாவிட்டாலும் எந்த வௌவாலும் பிச்சை எடுத்ததில்லை .


மரங்களில் இருந்து பழங்களைப் பறித்து கடைபோடுபவன் முதலாளி ஆகிறான் .
உணவுக்காக அதில் இரண்டு கேட்கும் குரங்குகள் கம்யூணிஸ முத்திரை குத்தப் பட்டு கல்லடி படுகின்றன.


சுறுசுறுப்பாய் இருக்கின்றன !
சந்தேகமில்லை! அவை தேனீக்கள்தான்!
அவற்றைப் பாராட்டிக்கொண்டே திருடுகிறான்
சந்தேகமில்லை! இவன் மனிதன்தான் .


தோலுரிக்கப்படும் முதலைகளின் குரலுக்கு செவிசாய்ப்பதில் ஏனோ ஆதிமூலத்திற்கு ஆர்வமில்லை.


மேகத்திற்கு மேல் பறக்கும் கருடனுக்கு எங்கு தெரியப்போகிறது மழைத்துளிகளின் முத்தம் .


ஆபத்தான மிருகங்கள் ஜாக்கிரதை
என
காட்டிலிருந்து வெளியே வரும் பாதையில் பலகை வைக்கப்பட்டுள்ளது .

எழுதியவர் : (17-Aug-15, 11:44 am)
பார்வை : 101

மேலே