இது நான்தானா

இது நான் தானோ?

புன்னகை புசித்தே
பழகிய உதடுகள்
கதறியழும் நிலையில்
கதியத்து இருக்கிறது
பாவங்கள் காட்டியே
பழகிய கண்கள்
பாவமாய் இப்போது
கண்ணீர் வடிக்கிறது
உற்சாக உடல்மொழிகள் காட்டும் என்மேல்
சோக கிருமிகள்
தொற்றிக் கொண்டது
தாராளம் காட்டிய எந்தன் வாயோ
தராசு போல அளந்து பேசுகிறது
என் சிரிப்பு சரவெடிகள்
கண்ணீரில் நனைந்து நமத்துவிட்டது
கவிதை வரிகளை தந்த காத்திருப்புகள்
முதல்முறையாய்
கடுப்பை தருகிறது
தென்றலை வீசிய
பேருந்து ஜன்னல்
இப்போது துர்நாற்றம் வீசுகிறது
இசையாய் ஒலித்த ஹாரன் சத்தம்
காது ஜவ்வை கிழிக்கிறது
ஒருவழி பாதையில்-
எதிர்புறம் பார்த்து
சாலையை கடக்கிறேன்
தவமிருந்து பெற்ற தனிமைகூட
தடுமாற்றமே தருகிறது
எந்தன் மனசு-
என்னுடனே கண்ணாமூச்சி ஆடுகிறது
கேள்வி என்றால் பதில் தேடிவிடுவேன்
நானே கேள்வியானதால் தடுமாற்றமோ
தோன்றி மறைந்த கவிதை வரியினை
கவிஞன் தேடுவது போல்
கூட்டத்தில் தொலைநத் குழந்தையை
தாய் தேடுவது போல்
எங்கோ தொலைத்த சந்தோஷத்தை-
இங்கு தேடிக்கொண்டிருக்கிறேன்
'கிடைக்கும் என்ற நம்பிக்கையில்'

எழுதியவர் : சுஜீத் (20-Aug-15, 10:05 pm)
பார்வை : 132

மேலே