இதுவும் ஒரு கனாக் காலம்

காகிதக் கப்பல் மழை நீரில் வெள்ளோட்டம்
ஒவ்வொரு கப்பலும் மீண்டும் திரும்பாது
அத்தனை கப்பலும் மழை நீரில் அமிழ்ந்து விடும்
கடலில் கப்பல் விட வயதில்லை வசதியில்லை
வெள்ளமும் நம் கண் முன்னே கடல் தான்
அளவற்ற மகிழ்ச்சியுடன் கப்பல்கள் வெள்ளத்திலே
இதுவும் ஒரு கனாக் காலம் தான்

வெள்ள நீரில் கால்களை அமுக்கி தாண்டித் தாண்டி
நடந்து வரும் போது அம்மா பார்த்து விட்டால்
ஓடிட முடியாது ஒழித்திட முடியாது அவ்வளவுதான்
அவசர அவசரமாக வெள்ளத்தில் விழுந்து எழுந்து
வெள்ளம் கடந்து வீட்டுக்கு வந்தால்
அடிவிழப் போகுதே என்ற பயத்தில்
காய்ச்சலும் நடுக்கமும் இருந்தாலும்
இதுவும் ஒரு கனாக் காலம் தான்

பாடசாலை விட்டு வரும் போது வீதி அருகில்
உள்ள வீடொன்றில் மாமரத்தில்
கல்லெறிந்து மாங்காய் வீழ்த்தி
வீட்டுக்காரன் குரல் கேட்டவுடன்
ஓட்டமும் நடையும் இதுவும் ஒரு வீர விளையாட்டு
சின்ன வயதில் செய்யும் சின்ன சின்ன குறும்புகள்
மாணவருக்கு ஒரு சாகச விளையாட்டு
இதுவும் ஒரு கனாக் காலம் தான்

கொஞ்சம் வளர்ந்து பெரிய பிள்ளைகளாகும் போது
சின்னப் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவது
இவை நாம் பட்டுத் தெளிந்து விட்டதால் வந்த ஞானம்
பெரிய மனிதர் சின்ன மனிதருக்கு மிரட்டி உருட்டி
புத்தி கூறுவது இதுவும் அந்தப் பிஞ்சுக் காலத்தில்
நிகழ்த்தும் சமரச விளையாட்டு
இதுவும் ஒரு கனாக் காலம் தான்

பள்ளியும் கல்லூரியும் பல வழிகளில்
அறிவிலும் ஆற்றலிலும் ஆனந்தத்திலும் மட்டும் அல்ல
மனத் தையிரியத்திலும் விளையாட்டிலும்
வேடிக்கையிலும் மகிழ்ச்சியிலும்
நம்மை திளைக்க வைக்கிறது
பிஞ்சு மனங்களின் வஞ்சம் இல்லா காலம்
இதுவும் ஒரு கனாக் காலம் தான்

எழுதியவர் : பாத்திமா மலர் (20-Aug-15, 10:08 pm)
பார்வை : 106

மேலே