முள்ளானவனே
இருண்ட வானில்
பயந்த நிலவாய்
தனிமையில் நான்..
எனைச் சூழாத
மேகமாய் நீ..
ஏனடா நான்
தவிக்கும் தருணங்களை
ரசிக்கின்றாயோ..?
உன் விரல் பறித்த
காகிதப் பூவா நான்..
வாசம் இல்லை என்று
வாசல் தாண்டி எனை
வீசிச் சென்றாயோ..?
ஈரம் ஈன்ற விழிகளும்
பாரம் போன்ற மொழிகளும்
பரிசாகிப் போயின
நீ எனை உதறியதால்..
என் தலையணை
இரவுகளை சற்று
கிளறிப் பாரடா
மூடிய இமைகளுக்குள்
மூடாத இருவிழிகள்
கண்ட கனவுகளைப்
பற்றிச் சொல்லும்..
என் கன்னம்
தொட்டு மென்மை
என்றாய்..
உன் காதல்
என்றும் உண்மை
என்றாய்..
என் புன்னகை
இசையொத்த தன்மை
என்றாய்..
ஏனோ சொல்ல
மறந்துவிட்டாய்
இவையெல்லாம் என்
காமப் பசிக்கான
கட்டுரைத் தலைப்புகள்
என்று..!!
விரல் பிடித்து
இதழ் கடித்தாய்
காதல் என்று
நாணம் கொண்டு
நானும் தலைகவிழ்ந்தேன்..
ஆனால்...
நம்பிக்கை எனும்
பூக்களை நீ
நசுக்கி எறிந்துவிட்டாய்..
வெறும் சுகம் வேண்டி
அன்று நான் அகற்றவிடவில்லை
என் ஆடைகளை..
கண் முழுதும் நிரம்பிய
காதலனே காதலும் காமமும்
மூன்றெழுத்துதானே என்பதனால்
என்னை ஏமாற்றிவிட்டாயோ..?
முள்ளானவனே...
முழுதுமாய் பார்த்த
என் உடலை முற்றுப்புள்ளியாக
நினைத்துக் கொள் மீண்டும்
தொடங்காதே அவளும்
உன்னை நம்பித்தான்
ஏமாற்றம் கொள்வாள்.
செ.மணி