கவிதை எந்தன் காதலி போல
விரல் இடுக்கில் சொடுக்கினால்
தொட்ட இடம் தொடருவாள்
செல்லமாய் சீண்டினால்
செருக்குடன் குழைவாள்
நேரிய கருத்தை கவியில் வடிப்பாள் நிஜமாய்
சொற்களை நினைக்குமுன் நிறுத்துவாள்
சொந்தமாய் என்னை கவி எழுத வைப்பாள்
அதில் சுகம் காண வைத்தே தாலாட்டுவாள்
அன்றாடவேலை நிமித்தம் சில மணிகள்
ஆங்கிலத்தில் நானும் கொஞ்சம் அசந்து விட்டால்
அந்த தமிழ் மகள் என்னிடம் சின்னதாய்
ஆட்டம் காட்டியே அசர வைத்திடுவாள்
இந்த ஊடல் எனக்கும் தாங்காது தான்
தமிழுடன் கூடாமல் இருக்க முடியவில்லை தினம்
கவிதை வடிக்காமல் எந்நாளும் முற்றுவதில்லை
கவிதை எந்தன் காதலி போல ஆகினாளே
அவள் சிரித்தால் அழகு கவிதை
அழுதால் உணர்வு கவிதை
ரசித்தால் இயற்கை கவிதை
முறைத்தால் எழுத்து கவிதை
மிடுக்கினால் நட்பு கவிதை
மயக்கினால் காதல் கவிதை
தொலைந்தால் தோல்வி கவிதை
தேற்றாமல் எனக்குள் முயற்சி கவிதை
சில நேரம் நேரமின்மையிலும் அளவோடு
கொஞ்சும் ஹைக்கூ கவிதை,
எப்பொழுதும் ஒரு கவிதை தினமும்
எப்படியாவது ஒரு கவிதை
என் கவிதை எனும் காதலி என் வசம், அப்புறம் என்ன
என் வாழ்க்கையும் எனக்கு ஒரு கவிதையே !