ஸ்னேக தரிசனம்
என் கைகளுக்குள்
அடங்கிய
உன் கண்களின் நட்சத்திரங்கள்...
விலக்க யத்தனிக்கும்
என் இருளை
மினு மினுப்பாய் மினுக்கியபடி.
கர்வங்களற்றதான
உன் தீண்டலில்...
அந்தரங்கமாகிறது
உன்னின் மீதான
என் லயிப்பு.
என் இமைகளுக்குள் விழும்
தொடுவானத்தில்
எதிரொலிக்கிறது...
உனது முகத்தின்
ஒளிக்கீற்று.
என் நெற்றியின் மஞ்சளில்
அசையும் தீபங்களில்
வளர்கிறது ...
நீ அறியாத
உனது உருவம்.
தரையில்...
இசையின் சித்திரமாகிறது
எனது கால் தடங்கள்.
நானுமே அறியாமல்
நமக்குள் தொடர்கிறது...
ஒரு கண்ணா மூச்சி ஆட்டம்.
இந்தக் கணத்தில்...
அன்பின் கங்கையாகும்
எனது உடலில்...
ஆர்ட்டீசியன்
ஊற்றுக் கொப்பளிப்பாய்
விரிகிறது...
உன் மீதான பரிவு.
மெழுகுப் பூச்சாய் தெரியும்
நகவிளிம்பில்...
மருகி
அன்பில் இறுகும்
என் உதிரம்.
வினாடிப் புள்ளியில்
எல்லை தாண்டத் தவிக்கும்
ஆசைகள்...
ஆதங்கம் விழுங்கிய
பந்தயக் குதிரையாய்
தயக்கத்தில் தவிக்கும்.
நீர்க்குமிழியாய் கலையும்
அன்பின் பேதம்...
இருள் முழுதும்
கண் சிமிட்ட...
எனக்குள் நிலைக்கிறது
நம் ஸ்னேகத்தின்
நிர்மால்ய தரிசனம்.