மலைகளே மலைகளே
வானைஎட்டிப் பிடிக்கும்படி வளர்ந்திருக்கும் மலைகளே
விதவிதமாய் செடிகொடியதில் பூத்திருக்கும் மலர்களே
பேசுகின்ற கிளிகளோடு மயில்களாடும் உன்னிலே
பார்த்திருக்க இரண்டுகண்கள் போதவில்லை என்னிலே
வாலிபர்கள் தோள்கள்போல வலிமையுள்ள குன்றுகள்
வண்ணமயில் கொண்டகுகன் வாசம்செய்யும் மன்றங்கள்
உயர்ந்தகுணம் கொண்டபேர்க்கு உன்னைஉவமை சொல்லுவர்
பயந்துவாழும் மானிடர்கள் பதுங்கஉன்னை அண்டுவர்
அருவிஎன்ற அழகுமங்கை நடனமிடும் மலையிலே
குருவிக்கூட்டம் குலவைபாடி கொஞ்சிமகிழும் மலையிலே
உருவமில்லாத் தென்றல்காற்று உதிப்பதுவும் மலையிலே
தருக்கலெல்லாம் தடைகளின்றி வளருவதும் மலையிலே
மண்மகளின் அழகுக்குநீ அணிகள்பல சேர்க்கிறாய்
எண்ணில்லாமல் பலவகையில் நன்மைநாளும் செய்கிறாய்
நாட்டின்மீது படையெடுத்து தாக்கவரும் எதிரியை
கேட்டைபோல தடுத்துநித்தம் பாதுகாத்து வருகிறாய்
முனிவர்பலர் தவமிருந்து முக்திபெற்றார் மலையிலே
முகிலினங்கள் ஆசையோடு உரசுமிடமும் மலைகளே
கருணையுள்ள பரமன்வாழ்வு கைலாய மலையிலே
கனிகிடைக்கா திருமுருகன் நின்றதுபழனி மலையிலே
கவிஞர்மனதில் கற்பனைகள் சுரக்கவைத்து நித்தமும்
கவிதையாக காலமெல்லாம் நிலைநிறுத்தும் மலைகளே
கடவுள்களை நேரில்காண புராணங்களில் பக்தர்கள்
கால்மடக்கி தவம்செய்து வரம்பெற்றது மலையிலே
உடலைத்தாக்கி உயிரழிக்கும் நோயைத்தீர்க்கும் மூலிகை
உலகத்தார்க்கு வேண்டும்வரை வாரிவழங்கும் மலைகளே
உள்ளத்திலே பற்றுநீக்கி ஆசைவெறுத்த துறவியர்
உவகையோடு நாடிவந்து ஒதுங்குமிடம் மலைகளே
மானினங்கள் மகிழ்ச்சியோடு துள்ளியாடி மகிழ்வதும்
தேன்துளிகள் தீங்கனிகள் கிடைப்பதுவும் மலையிலே
குயிலிசையும் அகில்மணமும் கொட்டிக்கிடக்கும் மலையிலே
குரங்கினங்கள் கனிகொடுத்து கொஞ்சுவதும் மலையிலே
செல்வம்பல அள்ளிதந்து செழிக்கவைக்கும் மலைகளே
சென்றவர்க்கு வியப்பைத்தந்து மயங்கவைக்கும் மலைகளே
முடிந்தவரை மலைவளத்தைப் பாதுகாக்க முயலுவோம்
மனைவிமக்கள் அனைவரோடும் மலையைச்சுற்றி மகிழுவோம்
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்