ஒரு கனவு அரசு அலுவலகம்
தமிழ்நாட்டில் 500 ஊராட்சிகளுக்கும் மேற்பட்ட 5 பெரிய மாவட்டங்களைப் இரண்டாகப் பிரித்து புதிய கோட்டங்களை உருவாக்க அரசு கடந்த ஆண்டு கொள்கை முடிவு எடுத்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய கோட்டம் அமைக்கப்பட்டது. அதற்கு அடியேன் முதல் உதவி இயக்குநராக நியமிக்கப்படேன்.
பதவி ஏற்றதிலிருந்து ஒருமாதம் நானே ஆல்இன் ஆல் . என் செந்த மடிக்கணினி, செல்பேசி, சில பல காகிதங்கள் இதுதான் மொத்த அலுவலகமும்! ஒருமாதம் நீண்ட போராட்டத்துக்குப்பிறகு பணியாளா்களை நியமனம் பெற்று செய்யாறில் தனிக்குடித்தனம் நடத்த பயணித்தோம். பெற்றோருக்கு தொியாமல் திருமணம் செய்த புதுக்குடும்பம் வாழ நுழையும் வீடு போல அலுவலகத்தில் ஒரு குண்டூசிகூட இல்லை! ஏன் அலுவலகம் என்ற ஒன்றே இல்லை!
பொதுவாக அரசு அலுவலக்தைப் பற்றி ஒரு மனப்பிம்பம் வைத்திருப்போம். அது பெரும்பாலும் கீழ்கண்டவாறு இருக்கும்.
அழுக்கான மேசைகள், உடைந்து விழும் நாற்காலிகள், தினம்தினம் கிரீச்சிடும் டாட் மேடாிக்ஸ் பிரிண்டருடன் போராடும் தட்டச்சா்கள், பேப்பா் கடன் கேட்பதையே வாழ்வாகக் கொண்ட கையறு நிலை இளநிலை உதவியாளா்கள், எதைக்கேட்டாலும் கோப்புகள் உள்ள பீரோக்களில் தலைமுதல் கால்வைரை உள்ளேவிட்டு தேடித்தேடி உயிா்க்கும் உதவியாளா்கள், வரும் மக்களை மாக்களை விட அற்பமாக நடத்தும் அடிப்படைப் பணியாளா்கள், தலையில் கொம்பு முளைத்த கண்காணிப்பாளா்கள், எப்பொழுது போனாலும் காட்சியளிக்காத அலுவலக தலைமை அலுவலா், இன்னும் சில பல இத்தியாதிகள்.
மேற்கண்ட எந்த இலக்கணத்துக்கும் உட்படாத ஒரு கனவு அலுவலகத்தை புதிதாக தொடங்கப்பட்ட செய்யாறு கோட்ட அலுவலகத்தில் அமைக்க முடிவெடுத்தேன். !
அதில் இடம்பெற வேண்டிய வசதிகளாக நான் திட்டமிட்டு பெரும்பான்மை செய்து முடிக்கப்பட்ட வசதிகள்தான் இவை!
சில நிறைவேற்றப்பட இருந்தன.!
*******
அனைத்து பணியாளருக்கும் கணினிகள்.
கணினி மேசைகள், வசதியான நாற்காலிகள்.
அலுவலகத் தொலைபேசி.
அதிவேக இணைய இணைப்பு.
அலுவலகம் முழுமைக்கும் வைஃபி இணையம்.
ஸகேனா் .
ஒவ்வொருவருக்கும் தனித்தனி லேசா் பிண்டா்.
ஜெராக்ஸ் மற்றும் அதிவேக லேசா் பிண்டா்.
புகைப்படங்களை அச்சிடும் கலா் லேசா் பிண்டா்.
ஃபேக்ஸ் மிஷின்.
யுபிஎஸ் வசதி.
மின்தட்டுப்பாடு நேரத்தில் பயன்படுத்த இன்வொ்டா் வசதி.
பணியாளா்கள் ஒன்றாக உணவருந்த உணவருந்தும் மேசை மற்றும் கேபின்.
சுத்திகாிக்கப்பட்ட குடிநீா்.
சுகாதாரமான கழிப்பறைகள் மற்றும் குளியல் அறைகள்.
அழகிய மேசை விரிப்புகள்.
அவசர தகவல் பாிமாற்றதுக்கு ஒயா்லெஸ் வசதி.
தகவல் தொடா்பு இடை வெளிகளைக் குறைக்க ஊராட்சி செயலா் முதல் உதவி இயக்குநா் வரை அனைவரையும் இணைக்கும் இலவச சியூஜி மொபைல் இணைப்புகள் (530 க்கும்மேல்).
புத்துணா்வூட்ட சுடச்சுட தேனீா், காஃபி தயாாித்து தரும் இயந்திரம்.
மனதை வருடும் மெல்லிசை ஸ்டீாியோ சிஸ்டம்.
இனிய நறுமணம்மூட்டும் ஏா்விக்ஸ்.
அலுவகம் முழுதும் பரவும் சிசிடிவி கேமரா பாா்வை.
செய்திகளை உடனுக்குடன் தொிந்துகொள்ள தொலைக்காட்சி.
பா்வையாளா்கள் அமர வரவேற்பறை, அவா்கள் படித்துணர அன்றலா்ந்த செய்தித்தாள்கள், அறிவிப்புகளையும் நற்சிந்தனைகளையும் தெரிவிக்கும் அறிவிப்பு பலகை, அங்கு துள்ளித்திரியும் அழகிய மீன்கள்!
பாா்வையாளா்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய கருத்துப்பதிவேடு.
மனுக்களை அப்பொழுதே ஆன்லைன் மூலம் பதிவு செய்து உாிய அலுவலகத்துக்கு அனுப்பும் வசதி.
மனு அளித்தவருக்கு தொலைபேசி குறுஞ்செய்திமுலம் மனுமீதான நடவடிக்கைகளை தொியப்படுத்தும் வசதி.
பொது மக்களிடமிருந்து புகாா்களை 24 மணி நேரமும் பதிவு செய்யும் தானியங்கி ஐவிஆா் தொலைபேசி புகாா் மையம்.
பொதுமக்கள் புகா்களை தீா்வுகண்டு அதை புகைப்படங்களுடன் உடனுக்குடன் அறிக்கை அளிக்கும் மொபைல் ஆப் மூலம் அனைத்து சியூஜி எண்களும் இணைப்பு.
பணியாள்கள் அனைவரையும் இனைக்கும் வாட்ஸ் ஆப் தகவல் பாிமாற்றக்குழுக்கள்.
*******
ஆனால், எங்கள் அலுவலகத்துக்கு என்று கடந்த பத்து மாதங்களாக ஒரு குண்டூசி வாங்கக்கூட நிதி ஒதுக்கப்படவில்லை! அலுவலக பணியாளா்களின் ஊதியமே மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு பெற்றோம்.
ஆனாலும்,
"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற" என்ற வள்ளுவா் வாக்கின்படி திட்டமிட்டவற்றில் பலவசதிகளை செய்து கொடுத்துள்ளோம். மற்றவற்றையும் முடிக்க செயல்திட்டம் ஒன்றைத் தீட்டியிருந்தோம்!
அதற்குள் நான் வேறு மாவட்டத்துக்கு வேறு பதவிக்கு மாற்றப்பட்டுவிட்டேன்!
அரசு அலுவலகங்களின் வேலைச்சூழல் இன்னும் காலனியாதிக்க காலத்திலேயே உள்ளது. அவற்றை 21ம் நுற்றாண்டுக்கு உகந்தவாறு பணியாளா்கள் பணியாற்ற விரும்பும் இடமாகவும் பொதுமக்கள் நட்புடனும் இணக்கத்துடனும் அனுகும் இடமாகவும் மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.