என் வாழ்க்கைப் பயணம் - அனுபவச் சாரல்கள் - 21
நினைவுகளின் சாரல்களில் நனைந்தாலே , நிழலாய் தெரிந்திடும் சுட்டெரிக்கும் சூரியனின் கதிர்களும் நமக்கு . அது இயற்கையே . ஒருவன் தான் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்த்தாலே , கடினமான நேரங்களும் எளிதாகத் தெரியும் ,கனத்த நெஞ்சும் லேசாகிவிடும் . அதுவும் இயல்புதான் . அதன்பிறகு நாமே மீட்பு பணியில் ஈடுபட்டு நம்மை விடுவித்து , நிகழ்கால பொழுதிற்கு வரவேண்டும் . அவன்தான் மனிதன் .
நான் இந்த தொடரை எழுத தொடங்கும்போது இருந்த நிலை பற்பல நெகிழ்வுகளை நெஞ்சில் ஏற்படுத்தியது. காரணம் நடந்திட்ட சம்பவங்களும் , சந்தித்த நல்லவை கெட்டவையும் , பலவித பண்புடைய மனிதர்களின் தொடர்பும் , அசாத்தியமான நிகழ்ச்சிகளும் என் உள்ளத்தில் எழுந்தன . நினைவுகள் அலைமோதின . சிலவற்றை மட்டுமே சொல்ல முடிகிறது ...பலவற்றை பகிர்ந்திட இயலவில்லை என்பதே உண்மை .
வங்கியில் உள்ளபோது தேனீக்கள் போல ஒரு நட்பு கூட்டம் , நட்புடன் பழகுவது போன்று ஒரு கூட்டம் , எதிரிகளாய் இருப்பினும் நண்பர்களைப்போல ஒரு கூட்டம் , நெருங்கிய நட்பு வட்டம் என்று பலவித நிலைகளில் என்னைச்சுற்றி இருந்தனர். எனக்கு எவரையும் இனம் கண்டு கொள்ள இயலவில்லை அப்போது .....அனைவரையும் நண்பர்களாய் மட்டுமே பாவித்து ஒன்றுபோல் பழகினேன் . நிச்சயம் இதனை மேலே குறிப்பிட்ட எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது . இந்த சூழ்நிலை அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்கள் இருந்தனர் . நான் என்றுமே வெளிப்படையாக பேசுபவன் ....மனதில் உள்ளதை மாற்றி பேசவும் அறியாதவன் அன்றும் இன்றும் என்றும் .
அதுவே எனக்கு பலமாகவும் பலவீனமாகவும் இருந்தது .....
இதை கூறுவதற்கு காரணம் , இன்று நான் வங்கியை விட்டு வெளியேறிய பிறகுதான் அடுத்தவரை பற்றி உணர்ந்தேன் . என்னை சுற்றி இருந்தோரை பற்றி உண்மையினை அறிந்தேன் . சிலர் இன்னும் மாறவில்லை ...பலர் மாறிவிட்டனர் . என்னால் பலருக்கு நன்மையேத் தவிர உறுதியாக சொல்வேன் , தீமையே இல்லை. என்னை உணர்ந்தவர் அறிவர் ....அறிந்தவர் உணர்வர் ....நான் முடிந்தளவு உதவிகள் புரிந்துள்ளேன் . அந்த பலரில் இன்று சிலர் என்னை முழுவதுமாக துறந்தாலும் , மறந்தாலும் அவர்களின் மனசாட்சி உறுத்திக் கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை . என் அனுபவப் பாடம் இது .
என் தந்தையார் 2003ம் ஆண்டு பொங்கல் தினத்திற்கு மறுநாள் திடீரென்று மாரடைப்பால் காலமானார் . அன்று இரவு 7.30 மணி வரை எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்டோம். அவர் இரவு உணவிற்குப் பின் படுக்க சென்றார். அன்று இரவு 8.30 மணி அளவில் , அம்மா அவரின் இருமல் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார் . குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கூறியவுடன் , அம்மா எடுத்து வந்து கொடுக்க்ம்போது அவர்மீதே சாய்ந்தவர் எழவே இல்லை. அன்று செல் போன் வசதி அந்த அளவு அனைவரிடமும் பழக்கத்தில் இல்லை. நான்கள் இரவு 10 மணிக்கு மேல் திரும்பியபோது ஒரே கூட்டம் எங்கள் வீட்டு வாசலில் ...ஒன்றுமே புரியவில்லை ...உள்ளே நுழைந்தால் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் அப்பா இருந்ததை கண்டவுடன் நான் கதறி அழுது மயக்கம் அடைந்தேன் . விழித்தபோது நள்ளிரவு 1.00 மணி. அப்போதுதான் எனக்கு அனைத்து விவரமும் கேட்டறிந்தேன் .
ஆனால் அந்த நேரத்தில் இருந்து அதிர்ச்சியான எங்கள் அம்மாவும் உடல் நலம் குன்றி , மிகவும் வியர்த்து கொட்டியது அந்த வேளையிலும். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவருக்கும் லேசான மாரடைப்பு என்று கூறியதால் மேலும் நாங்கள் இடிந்துப் போனோம் .
அதனால் எங்கள் அம்மாவும், சுமார் 55 ஆண்டுகள் அப்பாவுடன் இணைந்து வாழ்ந்தவர் ....அவரின் இறுதி சடங்குகளில் கூட கலந்து கொள்ள இயலவில்லை....இந்த நிலை எந்த ஒரு தாய்க்கும் ...ஏன் எந்த ஒரு பெண்ணுக்கும் நிகழக்கூடாது என்று இன்றும் வருந்துகிறேன். சுமார் 15 நாட்களுக்குப் பிறகுதான் அம்மா வீட்டிற்கு திரும்பினார். அப்பாவின் முகத்தை அவர் இறுதியாக பார்க்கக்கூட முடியாது போனது தான் காலத்தின் கோலம் .....
நான் அதே 2003 ம் ஆண்டுதான் வங்கியை விட்டு , ஜூலை மாதம் 31 ம் நாள் விருப்ப ஓய்வில் வெளிவந்தேன் உடல்நிலை காரணமாகவும் ...அன்று அங்கிருந்த சூழல் காரணமாகவும்.....
அதன்பின்பு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இயக்குனராகவும் , முழு பொறுப்புள்ள அதிகாரியாகவும் சுமார் 5 வருடங்கள் பணியாற்றி பின்பு முழு ஓய்வுப்பெற்றேன் . அதற்கும் காரணம் என் உடல்நிலையே .
மீண்டும் சந்திக்கிறேன் .....
பழனி குமார்
05.09.2015
************************************************************************************************************
( மேலே எனது தாய் தந்தையுடன் நான் --- 2000 ம் ஆண்டில் எடுக்கப்பட்டப் படம் )
********************************************************************************************************************