சரியான இளிச்சவாயன்
'திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம், வேறென்ன செய்வது போய்தானாகாணும், ஏ. சி மெக்கனிக்னா சில்லுனே இருக்குமா, உழைச்சு வியர்வை நாத்தம் வந்தா தான் சாம்பார் வாசனைய நுகர முடியும்'.
"ஹலோ ...ஹலோ சார்.. கூப்டே இருக்கன்.. எங்கயோ யோசனையா இருக்கீங்க, சரி... எவளோ லிட்டர் "
" ஏதோ ஞாபகத்தில இருந்துட்டேன்... ஒரு லிட்டர் போடு பா".
"ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ......."
"சார்.. போன் இங்க பேசக் கூடாது."
"சரி .. பா , இந்த நூறு ரூபா ,மீதி கொடு .."
"இந்தாங்க... "
மோட்டார் சைக்கில் சற்றே நகரத்தில் நகர "ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ....... சார்.. ஏ.சி மெக்கானிக் சுந்தர் பேசுறேன் சார் ... இன்னும் ஒன் ஹவர் ல வந்துடறேன்" .
சுந்தரின் வண்டி இப்படியே மெதுவாக நகர்கிறது, குளிரூட்டியை பழுது பார்த்து வரும் பணமே போதுமானது என்ற சிந்தனையில் செல்கிறது இவர் வண்டி, இவருக்கு மனதில் குளிரூட்டியிருப்பதால் அகப் புழுக்கம் நேராது. எண்ணூரை அடைந்தார், பெரிய மாடி வீடு மூன்று குளிர் சாதன இயந்திரத்தை ஒரு மணிநேரத்தில் சீர் செய்தார், அதன் உரிமையாளருக்கோ அலவற்ற மகிழ்ச்சியுடன்,
"சுந்தர் , ரொம்ப தேங்க்ஸ்... குழந்தைங்க வெயில தாங்க மாட்டேன்கிறாங்க.. கரெக்ட் ஆ ஹெல்ப் பண்ணீங்க.."
"சார்...நான் குழந்தைய இருக்கும் போது ஃபேனுக்கே வழி இல்ல, இந்த காலத்துல ஏ. சி யும் ஜாஸ்தி ஆயிடுச்சு லேசி யும் ஜாஸ்தி ஆயிடுச்சி, குழந்தைங்கள நம்ம தான் சார் சொகுசு வாழ்கைக்கு பழக்கப் படுதுறோம்.."
"போதும் பா.. சுந்தர் , எவலோன்னு சொல்லு " என அயர்ந்து சொன்னார் உரிமையாளர்.
"200 ரூபா கொடுங்க சார்"
அதிர்ச்சியான உய்ரிமையாளர் " வீட்ட பாத்தே காசு கேக்கற கும்பல் அதிகம் , நீ என்ன டா னா இவளோ கம்மியா கேக்குர ??"
"இது போதும் சார், நான் செய்த வேலைக்கு இது சரியா இருக்கும் சார்.."
சுந்தரிடம் 200 ரூபாய் கொடுத்தார், அதை வாங்கிக் கொண்டு அவரும் எந்த தவறு செய்யாத வண்டியை இரண்டிற்கு மூன்றுமுறை உதைத்து அங்கிருந்து கிளம்பினார். சிறிது தூரம் கடந்தப் பின் வழி தெரியவில்லை, அங்கங்கே உள்ளவர்களிடம் கேட்டு கேட்டு சென்றுக் கொண்டிருந்தார், திடீரென நடந்து சென்ற ஒருவர் மயங்கி கீழே விழுந்தார், சுந்தர் கடந்த செல்கையில், அதை கவனித்து சட்டென்று வண்டியை நிறுத்தி அந்த நபரைத் தூக்கினார், உதவிக்கு கூட யாருமில்லை, மயங்கிய ஆள் சலனமற்று கிடந்தார். அவரைத் தூக்கி வண்டி மேல் அமரவைத்தார், ஆனால் பயனில்லை சரிந்து சரிந்து விழ முற்பட்டார் அவர். வண்டியை நேராக நிறுத்தி விட்டு மயங்கியவரை அதன் மேல் உட்கார்ந்தவாரே பெட்ரோல் டான்க் மேல் தலை சாய்த்து படுக்க வைத்தார்.
ஆட்டோ பிடிக்க ஓடினார், அப்பொழுது ஒரு வண்டியின் சத்தம் கேட்டது யாரவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தார்.
"யோவ் ..தத்தி... வரட்டுமா ..." என்று மயங்கியவன் சுந்தர் வண்டியை எடுத்து பறந்தான்.
அவன் திருடன் என்று சுந்தருக்கு அப்போது தான் புலப்பட்டது, அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அங்கே சற்று நேரம் நின்றார். கொஞ்ச தூரம் நடந்து தெரு முனையில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் சொன்னார் , அவர்கள் காவல் நிலைத்திற்கு ஏவி விட்டனர்.
தட்டுத் தடுமாறி சுங்கச்சாவடி வந்து சேர்ந்தார், 6 D பேருந்தில் ஏறினார் திருவல்லிகேனிக்கு பயணச் சீட்டு வாங்கி தன்னை சீட் பண்ணியவன் பெட்ரோல் இல்லாமல் எங்கே நிற்கிறானோ என்று கவலைப்பட்டார் நம் சுந்தர்.
"கண்ணகி செல ஸ்டாப்பிங் இறங்கு ..." என் கண்டக்டர் கத்த, சுந்தர் இறங்கி வீடிற்கு நடக்க ஆரம்பித்தார்.ஆட்டோக்காரன் வண்டியை மெதுவாக இவரிடம் நெருங்கி "சவாரி வரியா சார் ?? " என்றான்.
"இல்ல பா, பெல்ஸ் ரோடு முனைல தான் மான்ஷன் ... வேற யாரையாவது கேளுங்க.." என சிரித்து நகர்ந்தார் சுந்தர்.
எங்கு பார்த்தாலும் தன் வண்டி ஞாபகமாகவே இருந்தது , பெல்ஸ் ரோட்டில் இரு சக்கர வாகன விற்கும்/வாங்கும் கடையில் அந்த திருடன் சுந்தரின் வண்டியை விற்றுக் கொண்டிருந்தான், அதை பார்த்து சுந்தர் "என்ன பிரம்மை பா இது , நம்ப வண்டியும் திருட்னவனும் இங்க.. " என்ற முனகலுடன் அந்த கடையை கடந்தார்.
கொஞ்ச தூரம் சென்று ஏதோ ஒரு நினைவில் திரும்பி பார்க்க அதே திருடன் மற்றும் அவரது வண்டி. மிகவும் சாதரணமாக , பதட்டப் படாமல் அவனருகே சென்றார். சுந்தரப் பார்த்தவுடன் அவன் ஓட முற்ப்பட்டான், உடும்புப் பிடியாக அவனைப் பிடித்தார் சுந்தர்.
"தம்பி ... ஓடி நீயே காம்ச்சி கொடுத்திடாதே திருடன்னு, இந்த வண்டிய வித்து நீயே காசு எடுத்துக்கோ" என்றார்.
அந்தத் திருடன் திகைத்துப் போனான், " ஏன் இப்படி ... " என வடிவேலு பாணியில் திருடன் கேட்க்க.
"உன்ன பிடிசிக் கொடுத்தா நீ செஞ்ச ஆக்டிங் வெளிய வரும் , உண்மையா மயங்கி விழுறவங்கள யாரும் காப்பாத்த மாட்டங்க,
அதுவும் இல்லாம சந்தர்ப்பம் தான் திருடனாக்குது ஆனா நம்ப திருந்த சந்தர்ப்பம் கொடுக்கறது இல்ல ..., இனிமே ........."
என்று கூறி நகர்ந்தார் சுந்தர்.
அந்தத் திருடன் முனங்கினான் "சரியான இளிச்சவாயன் ....."
அது சுந்தர் காதில் விழுந்தது , திரும்பி அவனருகே வந்து சொன்னார் " நானும் இந்த பைக்க திருட்னவன் தான் 4 வருஷம் முன்னாடி , இந்த பைக் ஓனர் எனக்கு இதே தான் சொன்னாரு 'நல்லவன் எப்பவுமே சரியான இளிச்சவாயன், ஆனா அவன் நல்லவன் ... போடா திருந்து போ' அதே தான் உனக்கு சொல்றன் 'திருந்து போ' "
திருடனின் கண்களில் திருடன் வேடம் கலைந்தது, வண்டியை சுந்தரிடம் கொடுத்து அவர் சொன்னதை வாங்கிச் சென்றான் இளிச்சவாயனாக.