நல்லகாலம் பொறக்குது - கற்குவேல் பா
இதயத்தில் கோளாறென்று
அறுவைசிகிச்சை செய்யப்பட்ட
அந்த ஆறுமாதக் கைக்குழந்தை
அறுத்து ஒட்டிய இதயம்
செயற்கைத் துடிப்பு மட்டுமேயன்றி
தானாக இயங்கவில்லையாம்
பிழைப்பது கடினம் என்றே
மருத்துவர்கள் கைவிரிக்க சுவாசம்
நிறுத்தப்பட - பிரிந்தது உயிர்
பருத்தித்துணியில் சுற்றப்பட்டே
அசுரவேகத்தில் அவசரஊர்தியில்
ஊர் வந்து சேர்ந்தது உடல்
சுற்றமும் நட்பும் அழுது தீர்க்க
தத்தனேரி மயானம் தாண்டி
புதைத்து திரும்பிய உறவுகள்
இறந்தது பெண்குழந்தை அதுவும்
முதல்குழந்தை என்றே அறிய
விரைந்தான் குடுகுடுப்பைக்காரன்
புதைக்கப்பட்ட அக்குழந்தையின்
மண்டைஓட்டினைச் சிதைத்து
மூளையை மட்டும் தனியே எடுத்து
ஆளில்லா சுடுகாடு அடைந்து
பிணம் எரித்த சாம்பலில் அமர்ந்து
எடுத்த மூளையில் "மை" தயாரித்து
இறந்தக் குழந்தையின் வீட்டிற்கு
வெளியே நின்று சொல்லிச்சென்றான்
" நல்லகாலம் பொறக்குது " !!!
- கற்குவேல் .பா