மழலைகளின் புன்னகை-சந்தோஷ்

மழலைகளின் புன்னகை.
--------------

இமை சிமிட்டி ,முழியுருட்டி
விழியிரண்டால்
புது மொழியை அள்ளி வீசி
அரும்பு இதழில் தானியங்கியாக
எதிர்வீட்டு சுட்டிக்குழந்தை
சிந்திவிடும் தேன்சிரிப்பில்
மயக்கமடைந்து தெளிவடைந்துவிடுகிறது
என் கொடுமையான தனிமை...!

---

மழையே மழையே
நீ அழகில்லை
போ... போ....!
மலையே மலையே..!
நீயும் பொழிவில்லை
போ... போ...!

மழலையே.. மழலையே..
உன் குறும்புச் சிரிப்பினில்
என் உதிரத்தில்
உற்சாக ருத்திரமாடவிடும்
மழலையே..
என் நாளைய பிள்ளையே
வா.. வா.....
ஓர் இளங்காளையான
ஒரு தந்தையானவன்
காத்திருக்கிறேன்..
வா வா..!


---

பூக்களே
உலகப் பூக்களே..!
இதுவரையிலும்
உங்கள் வண்ண அழகில்
மயங்கி கவி இயற்றிய
என்னை விட்டுவிட்டு
இனி,
எழுதப் பழகும்
கன்னி கவிஞர்களை
தேடிக்கொள்ளுங்களேன்.

இதோ....!
என் மனைவியின்
கருவில் பூத்திருக்கிறது
ஒரு மழலைப்பூ..!

இதோ.. இதோ..
கேட்கிறது பாருங்களேன்..!
என் அருமை மனைவியின்
கர்ப்பப்பையில்
சிரித்து சிரித்து
குதூகலித்துக்கொண்டிருக்கிறது
நானெழுதிய ஒரு கவிதை..!

---



எங்கள் வீட்டில்
குட்டி மழலைகளின்
சங்கீதச் சிரிப்பில்
மந்திர ராகம் கேட்கிறதா..
இசைஞானி இளையராஜா.. ?

இனியும் சொல்வீர்களா ?
நீங்கள் சங்கீத ராஜ்ஜியத்தில்
ஜெயித்துவிட்டீர்கள் என்று ?

---


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (8-Sep-15, 3:28 pm)
பார்வை : 258

மேலே