முருகனின் கேள்வியும் ஔவையின் பதிலும் - JUST A REWIND

ஒளவையே, உலகில் அரியது என்ன?

அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது!
மானிடராயினும்....கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்...ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது!
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்...தானமும் தவமும் தான் செய்தல் அறிது!
தானமும் தவமும் தான் செய்தலாயினும்...வானவர் நாடு வழி திறந்திடுமே!

கொடியது என்ன?

கொடியது கேட்கின் வரிவடி வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது; ஆற்றொணாக் கொடு நோய்
அதனினும் கொடிது; அன்பு இல்லாப் பெண்டிர்
அதனினும் கொடிது; அவர் கையால் இன்புற உண்பது தானே!

பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறிதமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்

அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறையவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!

ஒளவையே, இனியது என்ன? = எங்கள் இனியது கேட்கின்!

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானே.

அரியது கொடியது பெரியது இனியது - அனைத்துக்கும் முறையோடு விடை பகன்ற ஒளவையே....புதியது என்ன?
(இனி வரும் வரிகள்: கண்ணதாசன்)

என்றும் புதியது
பாடல் - என்றும் புதியது
பொருள் நிறைந்த - பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் - பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது...

முருகன் என்ற - பெயரில் வந்த - அழகே என்றும் புதியது
முறுவல் காட்டும் - குமரன் கொண்ட - இளமை என்றும் புதியது

உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ வேலும் மயிலும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும் கந்தன் கருணை புதியது
அறிவில் அரியது...அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது

முதலில் முடிவு அது
முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது!

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 10:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 216

மேலே