குடிகாரன் பேச்சு -Mano Red
முச்சந்தியில் நின்று
மூக்குச் சீந்திக் கொண்டிருந்தவன்,
அடேய் குடிகாரா! என்றதும்
வேட்டியில் கையை துடைத்தபடி
ஏறிட்டுப் பார்த்தான்.
அது அவன் ஆருயிர் நண்பன்.
ஒரே கோப்பையில்
எச்சில் மதுவைப் பகிர்ந்தவர்கள்,
அரசியல் எச்சிலையும்
பகிரத் தவறவில்லை.
அரசியல் அரிசியை
அரைகுறையாக ஓரளவுக்கு
வேக வைக்கத் தெரியுமென்பதால்,
அந்த இரவுக் கூட்டத்தை
தலைமை ஏற்கக் கிளம்பினர்
தலைமயிர் இழந்த அவர்கள்.!
கரை வேட்டிக்கேத்த
முகக் கலையில்லை என்றாலும்
கறை பட்ட கை என்பதால்
அக்கரை முதல் இக்கரை வரை
செல்வாக்கு பெற்றிருந்தனர்.
மூத்த தலைவர்கள் பேச்சில்
ஆரம்பமே ரம்பமானதால்,
அடுத்ததாக
மூக்குசிந்திய நண்பர்
மதுவிலக்கு பற்றி பேசுவார் என
கேலியாகச் சொல்லி அமர்ந்தார்
எச்சில் குடிகார நண்பர்.
முன்னிரவு குடித்த மதுவே
மூக்கு சிந்தியதற்குக் காரணமென்ற
உளவியல் அறியாத
உடன் பிறவா சகோதரர்களும்
ரத்தத்தின் ரத்தங்களும்
மூக்குச் சீந்தியவனின் பரப்புரை கேட்டு
சத்தமின்றி கை தட்டிக் கொண்டிருந்தனர்.