தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்

அடம் பிடிக்காம
குளிக்கிற தாத்தாவ குறிச்சு
பேரன் சொன்னான்…அம்மாவிடம்…
தாத்தா சமத்தா குளிக்கிறாருன்னு...!

மரித்துப்போன தாத்தா
குளிப்பது கடைசிக்குளியல்னு
தெரியாமல்...!!

மாலை போட்டு உட்கார்ந்திருக்கும் தாத்தா
மல்லுக்கட்டி இழுத்துப்பார்த்தான் பேரன்...
வாக்கிங் போலாம்…வா தாத்தான்னு...!!!

அடுத்த நாள் காரியத்தில்
அழுதபடி கேட்டான்,
தாத்தா எங்கன்னு...?

ஆண்டவன் வீட்டுக்கு போயிருக்காரு
அடுத்த வாரம் வருவாருன்னு
ஆறுதலுக்கு சொல்லி வைத்தார் அப்பா...!

அடுத்த நாள் கேட்ட மகனிடம்,
ஒம்மேல கோவப்பட்டு
அத்தை வீட்டுக்கு போயிருக்காருன்னு
அம்மா சொன்னாள்...!!

அம்மாவின் துணை கொண்டு
அடுத்த நாளே எழுதினான் பேரன்,
தாத்தாவுக்கு கடிதம்...!

ஒன்னோட வாக்கிங் ஸ்டிக்
இங்க ஹாலில் மாட்டிகிடக்கு,
இது இல்லாமே, எப்படி நீயும் வாக்கிங் போவே...?

நீ மறந்துவிட்டுப்போன மூக்குப்பொடி டப்பா
உன் மாலை போட்ட படத்து முன்னாலே பத்திரமா இருக்கு,
அது இல்லாமே, எப்படி நீயும் சமாளிக்க போறே...?

பேப்பர் படிக்கும்போதெல்லாம்
பேரன் என்னை தேடுவியே...எங்க
வந்து ஒனக்கு தர...நீ விட்டுப்போன
மூக்குக்கண்ணாடிய...?

அத்த வீட்டுக்கு போனாலும் அடுத்த நாளே
பேசுவியே..அழுதபடி ஸ்கைபில் நீயும்,
பத்திரமா வச்சிருக்கேன்...வந்தவுடன்
உனக்கெனவே விளையாட டேபு ல் ஒரு கேம்மும் தானே...!

வந்துரு தாத்தா வாக்கிங்
போலாம் ரெண்டு பேரும்...
உனக்கெனவே விட்டுத்தாரேன்
நீ விளையாட டாபைதானே...

நீ இல்லாமே, இப்போல்லாம்
அப்பா அம்மா வரும்
வரைக்கும் அடுத்த வீட்டுல
அதிக நேரம் குடி இருக்கேன்...!!!

நன்றி: தலைமுறைகள்

எழுதியவர் : சகா (சலீம் கான்) (12-Sep-15, 11:52 pm)
பார்வை : 1172

மேலே