சேவைகள் செய்வோம்

சேவைகள் செய்து மகிழ்ந்திடுவோம்
சாவினை அடைந்திடும் காலம்வரை
ஆவியெனும் கிளி பறக்குமுன்னே
அனைவருக்கும் நாம் அன்பிடுவோம்

சேவையை விரும்பிடு வாழ்க்கையிலே
சரித்திரம் படைத்திடு பூமியிலே
சேவையில் கிடைத்திடும் ஆனந்தம்
சொர்க்கம் சென்றாலும் கிடைப்பதில்லை

கைம்மாறு கருதாத சேவைதான்
கல்மேல் எழுத்தாய் நிலைத்திருக்கும்
எதிர்ப்பார்த்து செய்திடும் சேவையெல்லாம்
மதிப்பே இல்லாமல் மறைந்துவிடும்

காலத்தில் நீசெய்யும் சிறுஉதவி
கையற்ற முடவர்க்கு கையாகும்
வேண்டிய நேரத்தில் தரும்சேவை
விண்ணை விடவும் உயர்வாகும்

பிறர்க்கு உதவிடும் பெரும்பேரை
பகவான் நமக்கே அளித்துள்ளான்
சுமையாய் இருப்பதை நீதவிர்த்து
சுவையாய் வாழ்ந்திடு அனைவருக்கும்

முகில்போல் அகில்போல் நீவிளங்கி
மழையாய் மணமாய் நீயிருந்தால்
வணங்காத கைகள் வணங்கவரும்
வாழ்க்கையில் ஆனந்தம் கோடிவரும்

சாந்தத்தை வாழ்வில் கடைபிடித்து
காந்தியும் சேவைகள் செய்ததனால்
மண்ணை விட்டே மறைந்தாலும்
அண்ணல் அவர்களை வணங்குகிறோம்

துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு
துணையாய் இருந்து உதவிசெய்தால்
மனதுக்கு மகிழ்ச்சி கிடைத்துவிடும்
மனிதனாய் பிறந்ததில் பொருளிருக்கும்

பொன்பொருள் அள்ளிக் கொடுப்பதினும்
புன்னகைப் பேச்சில் உயர்விருக்கும்
கடுத்திட்ட முகத்துடன் நீயிருந்தால்
காண்பவர் வெறுத்திடும் நிலைகொடுக்கும்

அணுவியல் ஆய்வில் பெயர்பெற்ற
அப்துல் கலாமின் புகழுக்கு
காரணம் எதுஎன எண்ணிப்பார்
கனிவுடன் அவர்செய்த சேவையன்றோ?

பிறர்க்கு உதவாத மனிதர்களை
பித்தர்கள் என்றே ஊர்சொல்லும்
சேவைகள் செய்தே வாழ்ந்தவரை
சிலையாய் வடித்து வணங்கிவரும்

அகிலத்தின் அன்னை தெரசாவும்
அனைவர்க்கும் சேவைசெய்தே உயர்ந்தார்
புத்தர் பெருமான் பூமியிலே
புகன்றார் செவைகள் செய்திடவே

சேவைகள் செய்திடத் தொடங்கிவிட்டால்
சேர்ந்திடும் மகிழ்ச்சி வாழ்வினிலே
பிறர்க்கு உதவிடத் தொடங்கிவிடால்
பெயரும் புகழும் கூடிவரும்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (14-Sep-15, 5:13 am)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 55

மேலே