ஓடி வா என் அன்பு கண்ணே

என் ஆழ்மனதில்
புதைத்து வைத்த
அத்தனை அன்பிற்கும்
அதிகார ஒப்பந்தம்
எழுதி தரவா...
பாசத்தை இலக்கணமாக்கி
மௌனத்தை இலக்கியமாக்கி
தேனொழுகும் மொழிதனை
உனக்கு கற்று தரவா...
என் தேகம் கரைத்து அதில்
தாய்மை குலைத்து உனக்கெனவே
என் ஆயுள் முழுதும்
ஊட்டி விடவா....
என் கருவிழிக்குள் உன் முகம் புதைத்து
என் விழி வழியே நீ பார்த்திடவே
புது உலகத்தினை
நமக்கென நான் வடித்திடவா...
உன் நிறம் என்ன அழகென்ன
என்று அறிந்திடதான் ஆர்வமில்லை
என் ஒட்டு மொத்த ஆசை முத்தத்தையும்
உன் கன்னத்தில் திருஷ்டி
பொட்டென வைத்திடவா....
ஆனந்தமாய் நீ விளையாட
எனக்குள் ஒளிந்து கிடக்கும்
ஜீவனையே எழுவண்ண
வானவில்லாய் வளைத்து தரவா...
இத்தனையும் உன் அன்னையாக
நான் செய்திடவே
என் கருவறைக்குள் அடிஎடுத்து
வைத்திடதான் நீ ஓடோடிவா...
என் அன்பு கண்ணே!!!
காத்திருக்கிறேன் நான்
பலபல கனவுகளோடு
என் கருப்பையை திறந்து வைத்து
கடவுளின் முன்னே...