பகலவனுக்கு ஒரு பாமாலை~ சந்தோஷ்
பகலவனுக்கு ஒரு பாமாலை.
--------------------------
கருப்பு இருளில் கிடந்த
சமூகத்தை
வெள்ளைத்தாடியுடைய
பெரியவர் ஒருவர்
மீட்டெடுத்தார்.
பாழ்பட்டு குனிந்திருந்த
சமூகநீதி
நிமிர்ந்து நின்றிட
ஒரு கோலாகினார்
ஒரு கைக்கோலை ஊன்றிய
பெரியவர் ஒருவர்.
அண்டிப்பிழைக்க வந்தவரெல்லாம்
சண்டித்தனம் செய்திருந்த காலத்தில்
ஒடுங்கியும் ஒதுங்கியுமிருந்த
தமிழ்ச்சமுதாயத்திற்கு
ஒங்கி குரலெழுப்பினார்
பெரியவர் ஒருவர்.
அறிவுடைவரெல்லாம்
மனிதனா..?
இல்லை.. இல்லை
எவர் என்ன சொன்னாலும்
ஊர் என்ன சொன்னாலும்
யான் என்ன சொன்னாலும்
அவனவன் புத்திக்கு
உகந்ததை செய்பவனே
பகுத்தறிவு மனிதனென
கற்றுக்கொடுத்தார்
பெரியவர்...ஒருவர்.
ஐயா.. பெரியவரே..
எங்கள் பெரியாரே..
அன்று மட்டும்
எங்கள் முன்னோருக்கு
நீ ஒரு தலைவனாய்
ஒரு தகப்பனாய்
ஒர் ஆசிரியனாய்
இல்லாமல் இருந்தால்..
உழைத்து சம்பாதித்தாலும்
உண்ணும் சோற்றை
உக்கார்ந்து சாப்பிடும்
அருகதையற்றவராய்..
ஆலயங்களில் நுழையமுடியா
அற்ப மனிதபிராணிகளாய்.
அண்டிப்பிழைக்க வந்தவனுக்கெல்லாம்
கூனிக்குறுகிய கூலிக்கார அடிமையாய்
பெண்டிரெல்லாம்
முரட்டுச் சம்பிராதயத்தில்
பிடிக்கொண்ட விலங்காய்
மூளையிருந்தும்..
புத்தியில்லாமலும்..
வலுவிருந்தும்
வீரமில்லாமலும்....
எம் சொந்தமண்ணில்
செத்தப்பிணம் போல்
சுயமரியாதையற்ற மானிடராய்
அவமானகரச் சின்னமாய்
பாழாகியிருக்கும்
எங்கள் வாழ்வு...!
தீண்டாமை..சாதிக்கொடுமையினை
நீ அன்று ஒழித்திராவிட்டிருந்தால்
அய்யகோ....
செம்மண் புழுதியில் புரளும்
செவிட்டு பிண்டமாய்...
மூடநம்பிக்கைச் சேற்றில்
தரங்கெட்டு சகதியாகியிருப்போம்..
சக்தி கொடுத்தாய்..நீ
புத்திமதிச் சொல்லி
புது இரத்தம் பாய்ச்சி
புது சக்தி பிறக்க வைத்தாய்..!
ஐயா..!
137 ஆண்டுகளுக்கு முன்னர்
நீ உதயமானாய்..
விடியத்துவங்கியது தமிழினம்..!
ஈரோட்டில் வளர்ந்தாய்..
பகுத்தறிவோடத்தில் சிந்தித்தாய்.
அதையே நல்வாக்காய் உதிர்த்தாய்....
அதை சொல்லிச் சொல்லியே
நல்ல வாழ்க்கையை
திராவிடனுக்கு அளித்தாய்...
நீ தாய்...
நீ..... தந்தை..
நூற்றாண்டின் இருளைப்போக்கி
ஆயிரமாயிரமாண்டுக்கு
வெளிச்சமேற்றிய
பகலவன்...! நீ.. பகலவன்..!
வைக்கம் வீரனே..!
வாழும் உன் கொள்கை
வாழவைப்போம் உன் வைராக்கியத்தை..!
....
இன்று உன் பிறந்தநாளாம்.
என்னுயிர் திராவிடத் தந்தையே....!..
அன்பு முத்தப்பூக்களை
சமர்ப்பிக்கிறேன் உனக்கு
உன் கொள்கை முழுக்கத்துடனே..! .
**
-இரா.சந்தோஷ் குமார்.