ஆனந்தம் பரமானந்தம்
ஆனந்தம் பரமானந்தம் பரமன்
அருள்தரும் விவேகம் ஆனந்தம் -
என்உள்ளம் விரும்பிய ஆனந்தம்
என்னுள் நிறைந்து நின்றதுவே.
கனியிடை ஏறிய கற்கண்டாய்
இனித்தது உள்ளம் மகிழ்ந்ததுவே.!
உள்ளம் நிறைந்த ஆனந்தம்
உந்தும் சக்தியாய் உருட்டிவிட
பரமானந்தனுக்கு நன்றி சொல்ல
பாவை மனம் விரும்பியதே!
பன்மலர் சேர்ந்திடும் பாமாலை
பல்சுவையும் சேர்த்துப்புனைந்திடவே
உவந்தே வந்து அமர்ந்தேனே
உள்ளம் கவரும் தோட்டத்திலே.!
தோட்டத்தில் நான் அமர்ந்தேன்
படைஎடுத்து வந்தன பனிபடர்ந்த
பன்னீர் ரோஜாக்கள்! வருவோம்
தருவோம் நறுமணம் என்றே!
மணமுள்ள மல்லிகையோ தந்தது
மனம் உவந்து தன்னையே !
தியாகத் தரத்தில் உயர்ந்தது
தனித்து நின்றது நெஞ்சத்திலே!!
தென்பாண்டி சீமையிலே,
நான் தேடிய செவ்வந்தி பூ
அன்புடன் வந்தது அன்னல்
பொன் கிரீடத்தை அலங்கரிக்கவே!
ஆனந்த மயக்கத்தைத் தரும்
அருமை லில்லி மலரும்
வாடினாலும் வதங்கினாலும் தம்
வாசம் வீசுதல் வாடிடா!
நாதனும் நாடியே விரும்பிடும்
நலம்தரும் துளசி தளமும்
இறைவன் பாதத்தை வணங்கி
இதயம் வருடிட வரவிழைந்தனவே!
எடுத்தேன் எல்லாம் ஒருசேர
தொடுத்தேன் பன்மலர் பூமாலை
பரமானந்தன் அருளாலேஉயிர்த்தது
பல்சுவை கூட்டும் பாமாலை!
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாய்
ஆடிமுன்னின்று அழகுபார்த்தேன்.
ஆடியில் என்னுருவம் காணேன்,
ஆங்கே இதயத்தில் என்னுயிர் கண்டேன்!
பரமானந்தன் இருப்பது பார்த்தேன். !
மெய்சிலிர்த்துப் போனேன். சொல்லற்று
செயல் மறந்து சிலையாகி விட்டேனே!
இறைஅன்பிற்கு முண்டோ அடைக்குந் தாழ்!

