ராஜாவாகப் போகிறிர்களா
அண்ணா குடிக்காதிங்க..
அண்ணா குடிக்காதிங்க என்று வயது வித்தியாசம் பார்க்காமல் டாஸ்மாக் வாசலில் நின்று குடிக்க வருவோரின் கால்களிலும் பாரில் குடித்து தள்ளாடிச் செல்வோரின் கால்களிலும் விழுந்து புலம்பிக் கொண்டிருந்தான் அந்த மனநிலை பாதித்த இளைஞன்.
கிழிந்த சட்டையும் கரிபடிந்த உடம்பும் பரட்டைத் தலைத் தாடியுடன் கண்களில் ஏதோ கனத்த சோகத்தையும் சுமந்த அந்த மனநிலை பாதித்தவனை சில குடிமகன்கள் அடித்து விரட்டி விடுவது தினசரி வாடிக்கையாகி விட்டது.
இதோ அவன் தனக்குத் தானே புலம்பிக் கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்தும் காற்றின் வெளிகளிலும் கைகளால் சண்டையிட்டு போய்க்கொண்டிருந்தான்.
கீழே கிடந்த ஒரு கரித்துண்டை எடுத்த அவன் சாலையோர வெற்றுச் சுவரில் குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி எழுதி சுவற்றை நிறைத்தவன் மறுபடியும் சாலையில் புலம்பியவாறு சென்றுக்கொண்டிருந்தான்.
டேய் ராஜா..
டேய் ராஜா..
ஏய்....
சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்த மகேஷ் கத்திக் கூப்பிட்டும் எதையும் காதில் வாங்கதவனாய் கடந்து போய்க் கொண்டிருந்தான் காற்றோடு பேசியவாரே அந்த மனநிலை பாதித்த இளைஞன்.
இது நம்ம ராஜாதானடா? என்னாச்சுடா அவனுக்கு? ஏன்டா இப்படி ஆனான்? அடுக்கடுக்காக கேட்டுக் கொண்டிருந்தான் பைக்கின் பின்னாளிருந்த பாலாவிடம்..
சொல்றேன்டா வாடா என்று மகேஷை தேற்றி அழைத்துக்கொண்டு போனான் பாலா..
மகேஷ் படிப்பு முடித்து வெளியூருக்கு வேலைக்கு சென்றவன் இரண்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் சொந்த ஊர் வருகிறான்.
ஆனால் அவன் மனம் வரும் வழியிலேயே அமைதியை தொலைத்திருந்தது ராஜாவின் நிலையை கண்ணில் கண்ட நொடி முதல்..
பயணக் களைப்பில் வந்து படுத்த மகேஷின் கண்களில் கல்லூரி காலங்கள் நிழலாடத் தொடங்கியது.
ராஜா மகேஷ் பாலா மூவரும் மும்மூர்த்திகளாகதான் செல்வார்கள் எங்கே சென்றாலும்.
ராஜா பெயரில் மட்டுமல்ல வீட்டிலும் சரி கல்லூரியிலும் சரி அவன் ராஜாவாகதான் வலம் வருவான்.
ராஜாவின் தந்தை தனியார் துறைத் கம்பெனியில் உயர்பதவியில் இருப்பவர். நல்ல வருமானம். ராஜா வீட்டில் ஒரே பிள்ளை என்பதால் கேட்பதெலாம் வாங்கி கொடுத்து கேட்கும் போதெலாம் பணம் கொடுத்து ராஜா போலதான் வளர்த்தார்கள்.
மகேஷ், பாலா நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள். சில சமயங்களில் இவர்களுக்கும் கல்லூரி கட்டணம் கட்ட பணம் கொடுத்து உதவி புரிவான் ராஜா அந்தளவிற்கு மூவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
கையில் புரண்ட அதிக பணமோ அவர்களின் பாதையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தது. ஆமாம் அவர்கள் கால்கள் டாஸ்மாக்கை தேடி போக ஆரம்பித்தது. விடுமுறை நாட்களில் பீர் சிகரெட் என்று பணத்தையும் உடம்பையும் கரைக்க ஆரம்பித்தவர்கள் இப்பொதெலாம் கல்லூரி நாட்களிலும் விடுப்பு எடுத்து ஆப், புல் என்று போதையில் மூழ்க ஆரம்பித்தார்கள்.
இவர்களின் நடவடிக்கை கல்லூரி நிர்வாகத்திற்கும் வீட்டிற்கும் தெரிந்ததில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கண்டிக்க ஆரம்பித்தனர். மகேஷும் பாலாவும் அவர்கள் பேச்சை ஓரளவு கேட்டிருந்தாலும் ராஜாவோ யார் பேச்சையும் கேட்டாதாகத் தெரியவில்லை. இப்போதெலாம் தனியாகவே மதுவின் துணைத் தேட ஆரம்பித்திருந்தான்.
கால ஓட்டத்தில் கல்லூரி படிப்பு முடிந்ததும் மூவரும் பிரிந்தார்கள். மகேஷ் வெளியூரில் வேலைப் பார்க்க சென்றுவிட்டான். பாலா தந்தையோடு விவசாயத்தை கவனித்து வந்தான். ராஜா வீட்டில் சும்மாவே இருந்தான் நண்பர்களோடு ஊரைச் சுற்றிக் கொண்டு.
அதுவரை நடந்தவை எல்லாம் மகேஷின் கண்களில் நிழலாக வந்து அவனை தூங்க விட வில்லை.. வெகுநேரம் கழித்து ஒருவழியாக எப்படியோ தூங்கியிருந்தான் மகேஷ்.
மறுநாள் காலை
காலை பத்து மணி ஆகியும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த மகேஷை பாலாதான் வந்து எழுப்பிக் கொண்டிருந்தான்.
டேய் மகேஷ் எழுந்திருடா மணி பத்து ஆகுதுடா இன்னும் என்னடா தூக்கம்..
இல்லடா மாப்ள நைட் ரொம்ப நேரம் தூக்கமே வரல அதான்டா என்று எழுந்தான்.. இரவு முழுவதும் தூங்காததால் விழிகள் இரண்டும் சிவப்பை பூசியிருந்தது.
சரி.. குளிச்சிட்டு வாடா வெளிய போய்ட்டு வரலாம் என்றான் பாலா. இதோ வரேன்டா என்று குளிக்கச் சென்றான் மகேஷ். குளித்து விட்டு காலை உணவை முடித்த இருவரும் வெளியில் கிளம்பினார்கள்.
ஏன்டா மாப்ள நைட் தூங்கல என்று கேட்டவாறே பைக்கை ஸ்டார்ட் செய்தான் பாலா.
இல்லடா நைட் புல்லா ராஜா ஞாபகம் அதான்டா. ராஜா அப்பா இறந்ததால அப்படி ஆகிட்டானு நேத்து வரும் போது சொன்ன. என்னாச்சுடா டீடெய்லா சொல்லுடா என்றான் மகேஷ். சொல்றேன்டா வாடா என்று பைக்கை கிளப்பினான் பாலா.
இருவரும் எப்போதும் நண்பர்கள் மூவரும் முன்பு பேசிக்கொண்டிருக்கும் சாலையோரம் இருக்கும் பாலாவின் தோட்டத்திற்கு வந்தனர்.
இடுப்பில் இருந்த ரத்தச் சிவப்பில் சிரித்துக்கொண்டிருந்த ரம் பாட்டிலை எடுத்து வைத்தான் பாலா.
மாப்ள அடிடா அப்றம் எல்லாம் சொல்றேன் என்றான் பாலா..
இல்லடா முதல்ல நீ என்ன நடந்துனு சொல்லு அப்புறம் அடிக்கலாம்டா என்றான் மகேஷ்.
சரிடா.. என சொல்ல ஆரம்பித்தான் பாலா.
காலேஜ் படிப்பு முடிஞஞ்சதும் நீ வெளியூருக்கு வேலைக்குப் போயிட்ட. நான் வீட்லயே அப்பாவோட விவசாயத்த கவணிச்சிட்டு இருந்தேன். ராஜா சும்மாதான் இருந்தான் வீட்ல. செலவுக்கு அவனோட அப்பா அம்மா காசு கொடுத்ததால அப்பப்ப குடிச்சுட்டு ஜாலியா ஊர சுத்திட்டு இருந்தான். அவனோட அப்பா அம்மாவும் இவன் வீட்டுக்கு ஒரே பையன்கிறதால கண்டிக்க முடியாம தங்களுக்குள்ளேயே கவலைப் பட்டுட்டு இருந்தாங்க.. இப்படியிருக்கப்ப ஒருநாள் ராஜாவோட அப்பா வேலைக்கு போயிட்டு வரப்ப ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சி உயிருக்கு ஆபத்தான நிலையில ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்க.
அப்புறம் என்னாச்சுடா ஏன்டா அவனோட அப்பாவ காப்பாத்த முடில என்றான் மகேஷ்
.
சொல்றேன்டா எனத் தொடர்ந்தான் பாலா..
ஹாஸ்பிட்டல்ல ராஜாவோட அப்பாவுக்கு உடனே ஆபரேஷன் பன்னனும் அப்பதான் உயிர காப்பத்த முடியும்னு சொல்லிடாங்க. பத்து இலட்சம் பணமும் நைட்குள்ள ஆபரேஷனுக்கு o+ இரத்தமும் ஏற்பாடு பன்ன சொல்லிருந்தாங்க. பணத்தைக் கூட சேர்த்து வச்ச காசலாம் கொண்டு வந்து அவனோட அம்மா கட்டிடாங்க. ஆனா இரத்தம்தான் வெளிய எத்தனையோ இடத்துல கேட்டுப் பார்த்தும் கிடைக்கலடா.
ஆனா ராஜாவோட பிளட் க்ரூப் o+ தானடா அவன் கொடுத்திருக்கலாமே என்றான் மகேஷ்.
ஆமான்டா அப்ப ராஜா பசங்களோட டூர் போயிருந்தான். செய்தி கேள்விப்பட்டு அழுது துடிச்சி ஓடிவந்தான் இரத்தம் கொடுக்க ஆனா ஹாஸ்பிட்டல்ல அவன் பிளட்ட செக் பன்னிட்டு ஸாரி இவரு பிளட் ஆகாது மதியம்தான் இவரு ட்ரிங்ஸ் பன்னிருக்காரு. ஸோ ஹி இஸ் பிளட் வேஸ்ட்னுடாங்க.
இதற்கிடையில சரியான நேரத்தில் பிளட் கிடைக்காததால பணம் இருந்தும் ஆபரேஷன் பன்ன முடியாம ராஜாவோட அப்பா இறந்துட்டாங்க.
எல்லாரும் உயிர் கொடுத்த அப்பாவுக்கு இரத்தம் கொடுத்து காப்பத்த முடியாத நீயெலாம் என்னடா பிள்ளைனு இவன் முன்னாடியே பேசிட்டு போனாங்க. அவன் அம்மா அப்பாவுக்கு இரத்தம் கொடுத்து காப்பத்த முடியாம அவர கொன்னுட்டேயடா பாவினு கதறி துடிச்சி அழுதாங்க.. தன்னொட குடிப் பழக்கத்தால தன்னோட அப்பா உயிரைக் கூட காப்பத்த முடியாம போய்ட்டோமேனு நெனச்சு நெனச்சு அவன் மனநிலையே சரியில்லாம போயிட்டான்டா. பாவம் அவனோட அம்மா கையிலயிருந்த மீதி காசையும் இவனுக்கு ஹாஸ்பிட்டல் அது இதுனு செலவழிச்சுட்டாங்க. இவனுக்கு கொஞ்சம் கூட சரியாகல.. பாவம்டா இப்ப அவங்க வீட்டு வேலை பார்த்து கண்ணீரோட வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்காங்கடா என்று சொல்லி முடித்தான் பாலா.
ஓகே.டா மாப்ள பீல் பன்னாத.
இந்தாடா இத அடிடா என்று ரம் பாட்டிலை எடுத்து நெகிழி டம்ளரில் ஊற்றப் போன பாலாவின் கன்னங்களில் அறைந்த மகேஷின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது. இதுதானடா நம்ம நண்பன பைத்தியமாக்கிருக்கு. இந்த சனியன போயி... என்று கத்தினான் மகேஷ்.
ஸாரிடா மாப்ள நீ ஊர்ல இருந்து வந்திருக்கேனுதான் என்று இழுத்தான் பாலா.
என்னடா ஸாரி மயிரு மண்ணாங்கட்டி.. என்னடா இது நம்ம கண் முன்னாடியியே நம்ம நண்பன பைத்தியாமா ஆக்குன அரக்கன்டா.
பெத்த அப்பா உயிரையே காப்பாத்த விடாம பன்னுன அரக்கன்டா.
நல்லா இருந்த குடும்பத்த நடுத்தெருவுல கொண்டு விட்ட அரக்கன்டா என்று கண்ணீரோடு கோபத்தில் பாலாவின் சட்டையைப் பிடித்து கத்திக் கொண்டிருந்தான் மகேஷ்.
ஸாரிடா மண்ணிச்சுருடா என்றான் பாலா..
இவர்கள் இருவரின் சத்தத்தைக் கேட்ட அவ்வழியாக வந்த மனநிலை பாதித்த ராஜா வேடிக்கை பார்த்தவாறே சென்றான். எதேச்சையாக அவர்கள் கையில் இருந்த மதுப்பாட்டிலை கண்டவன் அண்ணா குடிக்காதிங்க.. அண்ணா குடிக்காதிங்க என்று ஓடோடி வந்தவன் இவர்கள் காலை கட்டியாகப் பிடித்துக் கொண்டு அண்ணா குடிக்காதிங்கனா என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.
டேய் ராஜா.. டேய் ராஜா.. எழுந்திருடா என்று இருவரும் அழுது துடித்து அவனைத் தூக்கினர். டேய் இங்க பாருடா நாங்க உன் ப்ரண்ட்ஸ் பாலா மகேஷ்டா என்று அவர்கள் கூறியது எதையும் காதில் வாங்கமால் அண்ணா குடிக்காதிங்க என்றே புலம்பிக் கொண்டிருந்தான்..
இல்லடா நாங்க குடிக்க மாட்டோம் நாங்க குடிக்க மாட்டோம்டா என்று கூறியவாறே இன்னும் யார் உயிரை எடுக்கலாம் யாரைப் பைத்தியமாக்கலாம்
யாரை அனாதையாக்கலாம் யாரை விதவையாக்கலாம் யாரைக் கைகால் முடமாக்கலாம் என்று வக்கிரமாக சிரித்துக் கொண்டிருந்த மதுப்பாட்டிலை எடுத்து தரையில் எறிந்து உடைத்தான் பாலா.
மதுப்பாட்டிலை உடைத்ததும் ராஜாவின் கண்களில் ஏதோ இனம் புரியாத சந்தோஷமும் இதழில் சிரிப்பும் எட்டிப் பார்த்தது.
பாலாவும் மகேஷும் ராஜாவின் கைகளைப் பிடித்து இனி குடிக்க மாட்டோம்டா என உறுதி எடுத்தனர். அந்த மனநிலை பாதித்த நிலையிலும் ராஜாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் உதிர்ந்து ஓடியது அந்நேரத்தில். அவர்கள் கையிலிருந்து தன்னை விடுவித்து கொண்ட அவன் ஏதோ வெறி வந்தவனாய் சுற்றும் முற்றும் பார்த்தவன் அருகில் கிடந்த கல்லை எடுத்தவன் உடைந்து கிடந்த மதுப்பாட்டிலின் மீது போட்டு ஒரு அரக்கனை கொன்று விட்டதாய் எண்ணி தனக்குள்ளே புன்னகைத்தான்.
சிரித்தவாறே அவ்விடத்திலிருந்து கையை வீசி சாலையில் போய்க்கொண்டிருந்தான் ராஜா.
அவன் செல்வதையே கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தனர் மகேஷும் பாலாவும்.
அவன் புன்னகைத்தவாறே சாலையில் போய்க் கொண்டிருந்தான்...
ஆம்..
இப்போது அந்த மனநிலை பாதித்தவனின் புன்னகையிலும் ஒரு அர்த்தம் இருந்தது.