மீண்டும் துன்பங்களா

வெட்டவெளி வானத் திட்டென் றிருள் உள்ளே
கொட்டியதார் முத்துக் கள்ஒளிர
வட்டமதிகென்ன பட்டதுவோ வந்து
நெட்டைப் பனைபின்னே ஒட்டிநிற்க
தொட்டு மலையினை முட்டிக் களித்திட்ட
இருட்டு முகில் மெல்ல நீர்பொழிய
விட்டு வழிந்திட்ட ஆறும் அணைகட்டை
தொட்டுங் குமுறித்தன் பாதைசெல்ல

பட்டு வதனத்தில் எய்த கணைதொட்டு
விட்ட மலரம்பு மோகமிட
சுட்டுவிழியுடன் கன்னம் செம்மை படச் ’
சேதி கொண்டே அவள் முன்னிருந்தாள்
சுட்டெரித்தே மங்கை வட்டமுகம் செம்மை
பட்ட கறை தன்னின் குற்றமென்றே
நெட்டெழும் வீழலை நெரெதிர் தண்மை கொள்
நீரினுள் ஆறிட வீழ்ந்த கதிர்

பட்டு நீலத்திரை ஒட்டொளி மங்கிடப்
பாரில் தீபநாளும் வந்ததென
தொட்ட இடமெல்லாம் வைத்த அகல்விளக்
கென்றொளிர் தாரகை கண்சிமிட்ட
கட்டை வயல் கீழை தொட்ட அடிவிண்ணில்
செட்டைஅடித்திளம் பட்சிகளும்
முட்டவளர் வயல்நெற்கதிர் கண்டதை
எட்டிப் பறித் தில்லம் ஒடிவர

சிட்டுக் குருவியின் குஞ்சுகள் சட்டென
அட்டகாசமிட்டே உண்ணவர
விட்டுவிடென்று தாய் ஊட்டிவிட கண்டு
வட்டமிட்டே யோர் பருந்தசைய
நட்டுப் பயிரிட்ட கத்தரிதோட்டத்தில்
வெட்டிமண் `கோலியும் நீரிறைக்க
சுட்ட வள்ளிக் கிழக் கிட்டொரு வாசனை
முட்டப் பசிதூண்ட நானிருந்தேன்

அட்டமா திக்கிலும் அன்னை சக்தியவள்
கட்டி யெழுப்பிய நீதியென்ன
விட்டவர் மெய்யுடன் வீணெனும் பாவங்கள்
கொட்டிச் சாம்பலிட்டுத் தீபொசுக்க
தட்டினை யேந்தியும் தாவென்று புண்ணியம்
குட்டிதலை கொண்டே கேட்டுநிற்க
இட்டதுஎன்னவோ கொட்டும் அருவியுள்
மூட்டை உப்பையிட்டுக் காத்திடென

தொட்டுச் சேரவைத்துப் பாவங்கள் பூமியில்
எத்தனை காலமென் றெண்ணமுன்பே
பட்ட துயர் வாழ்வில் கிட்டுவதென்னவோ
மட்டுஇ்லையெனும் தேடல்களே
கெட்டது தானே எழுந்துவர இன்பம்
கிட்ட நில்லா தூரம் ஓடிவிட
செட்டை அடித்திடும் குஞ்சுகளாய் காலம்
இட்ட உணவெண்ணி காத்திருக்க

சட்டம் ஒருபுறம் தான் நசுக்க அதை
சற்றும் `உணராது வாழ்வெடுக்க
கொட்டியதென்னவோ பூக்களல்ல வெந்து
கொள்ள இழையனல் துண்டங்களே
பட்டபடும்பாடும் பாவங்கள் தீர்ந்திடப்
பாவிமனதினில் ஏக்கங்கொள்ள
விட்ட உயிருக்கு வேடிக்கை மீளது
வேண்டி யணைவது துன்பங்களே!

*****************

எழுதியவர் : கிரிகாசன் (19-Sep-15, 10:29 pm)
பார்வை : 113

மேலே