சுனாமி
ஏ கடலே! உன் கரையில்
கிளிஞ்சல்கள் தானே
சேகரித்தோம்!
முதன் முதலாக
பிணங்களை
பொறுக்குகின்றோம்.
நீ கலங்களின்
மைதானமா?
பிணங்களின் மயானமா?
நீ தேவதையா இல்லை
பழிவாங்கும் பிசாசா?
உன் மீன்களை நாங்கள்
கூறுகட்டியதற்காக
எங்கள் பிணங்களை
நீ கூறுகட்டுகிறாயா?
பேய்பசி உன்பசி
பெரும்பசி
உன் அலைகளை
அனுப்பி-எங்கள்
பிஞ்சுக் குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்
பிணங்களை
அடையாளம் காண
பெற்றவளை தேடினோம்
அவள் பிணத்தையும்
காணோம்!
மரணத்தின் மீதே
மரியாதை போய்
விட்டது
பறவைகள் மொத்தமாய்
வந்தால் அழகு
மரணம் தனியே வந்தால்
அழகு.
ஏ ! கடலே
மீண்டும் நாங்கள்
மீன் பிடிக்க வருகிறோம்!
ஆனால் உனக்கு
அஸ்தி கரைக்க
ஒரு போதும்
வரமாட்டோம்