உலராத ஈரங்கள்
மென்று விழுங்கப்படாத
நினைவுகளின் எச்சம்
மிச்ச சொச்சமாய்
நெஞ்சுக்குழியை நிரப்பிக்கொண்டிருக்க
ஏதோ ஒன்று தொண்டைக்குழியில்
தோன்றிய வார்த்தைகளையும் சிறைப்படுத்த
விரலில் பட்டு விலகிப்போன
தும்பியாய் இமைகளை தட்டி திறந்த உன் பிம்பம்
உண்மையில் என்னவோ செய்கிறது தான் என்னை
எதிர்பாரா சிலவற்றையும்
எதிர்கொண்டு பழகியதால் என்னவோ
எதார்த்தமாய் கடந்து வந்தேன்
உறவின் கல்லறையையும்
பிரிவின் வலிகளையும்
இருவர் இணைந்து நனைந்திட்ட
மழைக்கால ஈர நினைவுகளின் வடுக்கள்
இன்றளவும் இசைத்துவிட்டு செல்கின்றன
நம் காதல் சமாதியில் ஒப்பாரி கீதத்தை
நீ இல்லையென்றால் செத்துவிடுவேன் என்றவள்
இரு தினங்கள் முன்பு கைக்குழந்தையுடன் நின்றாள்
ஒரு வேளை செத்த பின்பு பிறந்த குழந்தையோ
சொல்லப்படாத துயரத்திற்கு
சொல் வடிவம் கொடுத்து பத்திரப்படுத்தினேன்
எனது டைரியின் பக்கங்களை
யாரும் அருகிலில்லை எனினும்
சாட்சியாகிவிடுமோ என்றே
ஆறிப்போன தேநீர் கோப்பையையும்
மடக்கென்று குடித்து முடித்து கசக்கி எறிந்தேன்
அடுத்த சில விநாடிகளில்
தனிமையும் சிறைப்பட்டது என்னோடு ...