கவிதைகள் எழுதிப் பார்,,,
கவிதைகள் எழுதிப் பார்...
காற்றில் பறக்கும் பஞ்சு போலாவாய்,
கார்மேகம் கதவு திறந்து உள்ளழைக்கும்,
பட்டாம் பூச்சி முதுகில் ஏற்றி ஊர் சுற்றும்,
பறவைகள் பேச்சும் உனக்கு புரியும்.
வானவில்கள் அடிக்கடி கண்ணில் படும்,
காதல்கள் வரிசையில் வந்து நிற்கும்,
உலகமே உனக்கொரு புள்ளியாகும்,
வாழ்க்கை - வழிகாட்டி முன்னே செல்லும்.
மூச்சை விட கவிதையை அதிகம் சுவாசிப்பாய்,
உணவை விட கவிதையை அதிகம் உண்பாய்,
கனவை விட கவிதைகள் அதிகம் வரும்,
தூக்கத்தை கவிதைகள் தூங்கச் செய்யும்.
நிலவில் அவ்வப்போது நடைபயில்வாய்,
சூரியனை நீயும் வலம் வருவாய்,
மனதோடு மிகச் சிறு கர்வம் தோன்றும்,
மறுநாள் பிறர் கவிதையில் அது அழியும்.
தாய்மையாய் அது பாசம் காட்டும்,
நல் உறவாய் அது தோள் கொடுக்கும்,
நட்பாய் அது இடுக்கண் களையும்,
தெய்வமாய் அது நல் வாழ்வு தரும்.
தங்கமாய் உந்தன் முகம் மாறும்,
உன் பேச்சில் சற்று மென்மை கூடும்,
உடல் மொழியில் ஒரு சிங்கம் தோன்றும்,
உள் உணர்வு என்றும் ஏகாந்தம் ஆகும்.
ஆதலால்.....
கவிதைகள் எழுதுவீர் மானிடரே....