வஞ்சம்
என்னை அடிமாட்டு விலைக்கு விற்ற
அந்த முகம் தெரியாத
.................மகனை
இப்போது காணின்
அவனின் பால்குறி கடித்து துப்பி
வஞ்சம் தீர்க்கவேண்டும்.
இது இரவுக்கான ஊஞ்சல் பயணத்தில்
அட்டைகளின் உறிஞ்சல்களில்
ஒவ்வொரு மணித்துளிகளிலும்
கலந்திருப்பது என் வாலிப ரத்தம் .
நான் மேலாடை போட்டு
அழகு பார்த்த நேரங்களைவிட
நிர்வாண ஆடையில்தான்
நீண்டதூரப் பயணம்..
ஒரு கருப்பு அங்கிப் போர்த்தி
கையில் சட்டப் புத்தகம்
தூக்கி இருக்க வேண்டும்...
ஒரு வெள்ளை அங்கி உடுத்தி
கையில் நாடித்துடிப்புக் கருவி
இருந்திருக்க வேண்டும் .
இப்போது என்கைகளில்
ஒருமுறை உபயோகித்து
வீசி எறியும் ஆணுறைகளும்
ஒரு அவலத்தின் அடிச்சுவடுகள்
தங்காமல் தடுக்கும் மாத்திரைகளும்....
இன்னமும் தேடுகிறேன்
அந்த முகம் தெரியா அவனை..
அவன் இப்போதும்
புதிதாய்
ஒரு வருங்கால விடிவெள்ளியை
ஏதேனும் ஒரு சந்தையில்
அடிமாட்டு விலைக்கு
விற்றுக் கொண்டிருக்கலாம்..
பாவக்கணக்கு புத்தகத்தில்
பக்கங்கள் அதிகமானாலும்
பணக் கற்றைகளின்
வீக்கம் பெருகியதால்
இப்போதைக்கு இந்த கலியூரில்
அவன் பெரிய மனுஷனாக இருக்கக் கூடும்.